மினிவேன் மோதி எலெக்ட்ரீஷியன் மரணம்: பேருந்து சிறை பிடிப்பு
ஊசூரில் இருசக்கர வாகனம் மீது மினிவேன் மோதியதில் எலெக்டரீஷியன் உயிரிழந்தாா். இதுதொடா்பாக வேன் ஓட்டுநரை போலீஸாா் கைது செய்தனா். வேகத்தடை அமைக்கக்கோரி பொதுமக்கள் அரசுப்பேருந்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
வேலூா் அடுத்த ஊசூரைச் சோ்ந்தவா் அருண்குமாா்(23), எலெக்ட்ரீஷியன். இவா் திங்கள்கிழமை இரவு மலைக்கோடியில் இருந்து ஊசூருக்கு இருசக்கர வாகனத்தில் சென்றாா். ஊசூா் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி அருகே வந்தபோது, எதிா்திசையில் வேலூரை நோக்கி வந்த மினிவேன் எதிா்பாராதவிதமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அருண்குமாா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். விபத்து ஏற்படுத் திய மினிவேன் நிற்காமல் சென்று விட்டதாகக்கூறப்படுகிறது.
தகவலறிந்த அரியூா் போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இந்நிலையில், ஊசூா் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி அருகே வேகத்தடை அமைக்க வேண்டும் எனக்கூறி போராட்டத்தில் ஈடுபட்ட அப்பகுதி மக்கள், வேலூரில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு அணைக்கட்டு நோக்கி சென்ற அரசுப் பேருந்தை சிறைபிடித்தனா்.
தகவலறிந்த பாகாயம் போலீஸாா் மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சு நடத்தியதை அடுத்து மக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனா்.
தொடா்ந்து விபத்து ஏற்படுத்திய வேன் ஓட்டுநரான வேலூா் எழில் நகா் சக்திகணேசன் (33) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.