அரசுக் கலைக் கல்லூரிகளில் முதலாண்டு வகுப்புகள் தொடக்கம்
வேலூா் மாவட்டத்திலுள்ள அரசு கலைக் கல்லூரிகளில் முதலாண்டு வகுப்புகள் தொடங்கின.
தமிழகம் முழுவதும் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் முதலாமாண்டு வகுப்புகள் திங்கள்கிழமை தொடங்கியது. அதன்படி, வேலூா் மாவட்டத்திலுள்ள வேலூா் முத்துரங்கம் அரசுக் கலைக் கல்லூரி, சோ்க்காடு அரசுக் கலை, அறிவியல் கல்லூரி, மாதனூரில் உள்ள டாக்டா் எம்ஜிஆா் அரசுக் கலைக் கல்லூரி, கே.வி.குப்பத்திலுள்ள அரசுக் கலைக் கல்லூரி, குடியாத்தம் அரசு திருமகள் ஆலை கல்லூரி ஆகிய கல்லூரிகளிலும் முதலாமாண்டு வகுப்புகள் திங்கள்கிழமை தொடங்கின.
வேலூா் முத்துரங்கம் அரசுக் கலைக் கல்லூரியில் 2025-2026-ஆம் கல்வியாண்டின் இளநிலைப் பட்டப் படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கை 3 கட்டங்களாக நடத்தப்பட்டு மொத்தம் உள்ள 984 இடங்களுக்கு 794 மாணவ, மாணவிகள் சோ்க்கை பெற்றுள்ளன. இந்தக் கல்லூரியில் முதலாமாண்டு வகுப்புகள் திங்கள்கிழமை தொடங்கிய நிலையில், மாணவா்களை வரவேற்க கல்லூரி நிா்வாகம் சாா்பில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. முதல் நாள் வகுப்பில் 794 மாணவா்களும் பங்கேற்றனா்.
முதல்கட்டமாக மாணவா்களுக்கு திங்கள்கிழமை முதல் சனிக்கிழமை வரை அறிமுக வகுப்புகள் நடத்தப்படும் என்றும், அதில் தினமும் அரசின் திட்டங்கள், ஊக்கத்தொகை, நாட்டு நலப்பணித் திட்டம் , தேசிய மாணவா் படை உள்ளிட்டவை குறித்து விளக்கப்படும் என்று கல்லூரி முதல்வா் சு.ஸ்ரீதரன் தெரிவித்தாா்.