அரிசி தேடி வீடுகளுக்குள் நுழையும் யானை; வனத்துக்குள் விரட்ட கும்கிகளுடன் களமிறங்கிய வனத்துறை!
அரிசி சுவைக்கு பழக்கப்பட்ட ஆண் காட்டு யானை ஒன்று நீலகிரி மாவட்டத்தின் பந்தலூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பழங்குடிகள் மற்றும் தேயிலை தோட்ட குடியிருப்பு பகுதிகளில் அரிசி தேடி நடமாடி வருகிறது. நள்ளிரவில் குடியிருப்பு பகுதிகளில் நுழையும் அந்த யானை, மிகவும் பலவீனமாக கட்டி கொடுக்கப்பட்டிருக்கும் தோட்ட தொழிலாளர் குடியிருப்புகளின் கதவு, ஜன்னல் ஓடுகளை சேதப்படுத்தி உள்ளே நுழைந்து அரிசியை உட்கொண்டுச் செல்கிறது. கடந்த சில நாட்களில் 15 - ற்கும் மேற்பட்ட குடியிருப்புகளை சேதப்படுத்தியிருக்கிறது.
தூங்கிக் கொண்டிருக்கும் வேளையில் திடீரென வீட்டை சேதப்படுத்தி உணவு பொருட்களை எடுத்துச் செல்லும் யானையிடம் பெரும் போராட்டத்திற்கு மத்தியில் உயிர் தப்பி வருகின்றனர். நாள்தோறும் குடியிருப்புகளை சேதப்படுத்தி வரும் குறிப்பிட்ட யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வலியுறுத்தி வனத்துறைக்கு மக்கள் அழுத்தம் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில், அந்த யானையை அடர்ந்த வனத்திற்குள் விரட்டும் பணிக்கு தனிக்குழு அமைக்கப்பட்டிருப்பதுடன், 2 கும்கி யானைகளும் முதுமலை, தெப்பக்காடு முகாமில் இருந்து அழைத்துச் செல்லப்பட்டுள்ளன.
இது குறித்து தெரிவித்த வனத்துறையினர், "குறிப்பிட்ட அந்த ஆண் யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டுவதற்காக சிறப்பு நடவடிக்கைகள் இரவு பகலாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 24 மணி நேரமும் கூடலூர் வனக்கோட்டத்தைச் சேர்ந்த அனைத்து முன் களப்பணியாளர்களும், அதிவிரைவுப்படை, யானை விரட்டும் காவலர்கள் மற்றும் வேட்டைத்தடுப்பு காவலர்கள் என சுமார் 75 பணியாளர்கள் யானையின் நடமாட்டத்தைக் கண்காணித்து வருகின்றனர். வனக்கோட்ட உதவி வனப்பாதுகாவலர் தலைமையில் சிறப்பு குழு சேரம்பாடி பகுதியில் முகாமிட்டுள்ளது.
ட்ரோன் கேமரா மூலமும் யானையின் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட முதுமலை புலிகள் காப்பகத்தில் இருந்து இரண்டு கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளன. முதுமலை புலிகள் காப்பகத்திலிருந்து சிறப்பு பயிற்சி பெற்ற யானை விரட்டும் காவலர்கள் வரவழைக்கப்பட்டு, யானையை விரட்டும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது" என்றனர்.