Rain Alert: 'இன்று இரவு முதல் கனமழை' - எந்தெந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை? வானி...
அரிட்டாப்பட்டி டங்ஸ்டன் சுரங்க விவகாரம்: வசமாக சிக்கிக் கொண்டதா திமுக அரசு?!
தமிழர்களின் வரலாற்றுத் தொன்மை வாய்ந்த மதுரை - அரிட்டாபட்டி, நாயக்கர்பட்டி பகுதிகளில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசின் ஒப்புதலுடன் வேதாந்தா நிறுவனம் ஏலம் எடுத்திருக்கிறது. இதற்கு பொதுமக்கள், விவசாயிகள், சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்கள் என பல்வேறு தரப்பினரும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதையடுத்து, இந்தத் திட்டத்தை ரத்து செய்யவேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருக்கும் நிலையில், `ஆரம்பத்தில் ஒத்துழைப்பு வழங்கிவிட்டு, இப்போது எதிர்ப்பு நாடகம் போடுகிறது தி.மு.க அரசு' என எதிர்க்கட்சித் தலைவர்கள் அடுத்தடுத்து குற்றம்சாட்டி வருகின்றனர்.
`பிள்ளையை கிள்ளிவிட்டு, தொட்டிலையும் ஆட்டும் நாடகம்' - அன்புமணி ராமதாஸ்
குறிப்பாக, பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ், ``மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்திற்குட்பட்ட அரிட்டாப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் 2015 ஏக்கர் பரப்பளவிலான பகுதிகளில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க அனுமதி அளிக்கப்பட்ட விவகாரத்தில் தமிழக அரசின் இரட்டை வேடத்தை மத்திய அரசு அம்பலப்படுத்தியுள்ளது. டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க ஒருபுறம் அனைத்து ஒத்துழைப்பையும் வழங்கி விட்டு, இன்னொரு புறம் அதை எதிர்ப்பது போல, திராவிட மாடல் அரசு நடத்தும் பிள்ளையை கிள்ளிவிட்டு, தொட்டிலையும் ஆட்டும் நாடகத்தை தமிழ்நாட்டு மக்கள் நம்ப மாட்டார்கள். அரிட்டாப்பட்டி பகுதியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கப்படுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்றும், அத்திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமருக்கு கடிதம் எழுதிய நிலையில், அது குறித்த சில விவரங்களை மத்திய சுரங்கத்துறை வெளியிட்டுள்ளது.
``அரிட்டாப்பட்டி டங்ஸ்டன் சுரங்கம் ஏலத்தில் விடப்படுவதற்கு முன்பாக தமிழக அரசிடமிருந்து சில உள்ளீடுகள் பெறப்பட்டன. டங்ஸ்டன் சுரங்கத்தை ஏலத்தில் விடுவதற்கு வசதியாக அப்பகுதியில் உள்ள 47.37 ஹெக்டேர் பரப்பளவிலான கிரானைட் சுரங்கத்திற்கான குத்தகையை தமிழக அரசின் டாமின் நிறுவனம் திரும்ப ஒப்படைத்து விட்டது. ஏல நடவடிக்கை தொடங்கிய கடந்த பிப்ரவரி மாதத்திலிருந்து முடிவுகள் அறிவிக்கப்பட்ட 07.11.2024 ஆம் தேதி வரை டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எந்த எதிர்ப்பும் வரவில்லை. டங்ஸ்டன் சுரங்கம் ஏலம் விடப்படுவதை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழக அரசிடமிருந்து எந்த கோரிக்கையும் வரவில்லை” என்று மத்திய அரசு கூறியிருக்கிறது.
டங்ஸ்டன் சுரங்கம் ஏலத்தில் விடப்படுவது குறித்த விவரங்களை தமிழக அரசுக்கு மத்திய அரசு ஏற்கனவே தெரிவித்திருக்கிறது. அப்போதெல்லாம் எந்த எதிர்ப்பையும் தமிழக அரசு தெரிவிக்கவில்லை. இன்னும் கேட்டால் தனியார் நிறுவனங்களுடன் இணைந்து தமிழக அரசே டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு கடந்த ஆண்டே மத்திய அரசின் அனுமதியை தமிழக அரசு கோரியிருக்கிறது.
இப்படியாக அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு அனைத்து வழிகளிலும் துணை போன திராவிட மாடல் அரசு இப்போது மக்களிடம் கடுமையான எதிர்ப்பு எழுந்த பிறகு அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதைப் போல நாடகமாடுகிறது. திமுக எப்போது ஆட்சிக்கு வந்தாலும் மக்கள் நலனை விட தங்களின் நலனுக்கே முன்னுரிமை அளிக்கும். காவிரி பாசன மாவட்டங்களில் மீத்தேன் எரிவாயு ஆய்வுக்கு அனுமதி அளித்தது, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு ஒப்புதல் அளித்தது என திராவிட மாடல் அரசு மக்களுக்கு செய்த துரோகங்களுக்கு ஏராளமான எடுத்துக் காட்டுகளைக் கூறலாம். அரிட்டப்பட்டி விவகாரத்திலும் இப்போது அதே துரோகத்தை திமுக அரசு செய்கிறது.மக்களின் உணர்வுகளை மதித்து டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும். அரிட்டாப்பட்டி டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தில் தமிழக அரசு இரட்டை வேடம் ஏன்? பிள்ளையை கிள்ளிவிட்டு, தொட்டிலையும் ஆட்டும் நாடகத்தை மக்கள் நம்ப மாட்டார்கள்!" என கடுமையாக குற்றம்சாட்டியிருக்கிறார்.
`தி.மு.கவின் நாடகம், பொதுமக்களிடம் இனியும் எடுபடாது!' - அண்ணாமலை
அதேபோல, தமிழ்நாடு பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, ``கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் 18 அன்று, The New Indian Express ஊடகத்தில் வெளிவந்த செய்தியின்படி, மதுரையில் டங்ஸ்டன் உலோகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கான சுரங்கம் அமைக்க, தமிழக அரசு, மத்திய அரசின் அனுமதி கோரி இருப்பதாகவும், தமிழக கனிம வளத் துறையின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்திருப்பதாகக் கூறப்பட்டிருந்தது. மத்திய அரசின் சுரங்கத் துறை நேற்றைய தினம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கடந்த 2024 பிப்ரவரி மாதம், மதுரையில் டங்ஸ்டன் கண்டுபிடிக்கப்பட்டுள்ள பகுதியில் சுரங்கம் அமைக்க ஒப்பந்தப் புள்ளி அறிவிப்பதற்கு முன்பாக, தமிழக அரசு கொடுத்த குறிப்புகள் நடைமுறைப்படுத்தப்பட்டன என்றும், ஒப்பந்தப் புள்ளி வெளியிட்ட பிப்ரவரி மாதம் முதல், ஒப்பந்தம் வழங்கப்பட்ட நவம்பர் 7, 2024 வரையிலான பத்து மாதங்கள், தமிழக அரசு இந்த ஒப்பந்தத்தைக் குறித்தோ, சுரங்கம் அமைக்க எதிர்ப்பு தெரிவிக்கவோ மத்திய அரசைத் தொடர்புகொள்ளவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசைக் கோரியதும் திமுக அரசு தான். சுரங்க ஒப்பந்தம் வெளியிடக் குறிப்புகள் கொடுத்ததும் திமுக அரசு தான். கடந்த பத்து மாதங்களாக இது குறித்து வெளியில் தெரியாமல் மறைத்து வைத்திருந்த திமுக அரசு, தற்போது எதிர்ப்பு வருவதும், இது குறித்துத் தங்களுக்கு எதுவுமே தெரியாதது போல நாடகமாடுகிறது. இதே மதுரை அரிட்டாப்பட்டி பகுதியில், தமிழக அரசின் டாமின் நிறுவனம், 2008 முதல் 30 ஆண்டுகளுக்கு, 47.37 ஹெக்டேர் நிலத்தில் கிரானைட் சுரங்கம் அமைக்கக் குத்தகை பெற்றுள்ளதையும், தற்போது டாமின் நிறுவனம் தனது குத்தகை உரிமத்தைத் திருப்பிக் கொடுத்துள்ளதையும், மதுரை அரிட்டாப்பட்டி, மீனாட்சிபுரம் கிராமங்களில், மொத்தமுள்ள 20.16 சதுர கி.மீ. நில அளவில், 1.93 சதுர கி.மீ அளவே பல்லுயிர் பாரம்பரியத் தளமாக அறிவிக்கப்பட்டுள்ளது என்றும் திமுக அரசு, மத்திய அரசுக்குத் தெரிவித்துள்ளது. டெல்டா பகுதியில் மீத்தேன் எடுக்கும் ஒப்பந்தத்தில் தெரியாமல் கையெழுத்து இட்டுவிட்டேன் என்று, சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்னர் அரங்கேற்றிய அதே நாடகத்தை, தற்போது மீண்டும் அரங்கேற்றத் துடிக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின். திமுகவின் நாடகம், பொதுமக்களிடம் இனியும் எடுபடாது" எனத் தெரிவித்திருக்கிறார்.
`ஸ்டாலினின் கடிதம்மீது நம்பிக்கை இல்லை!' - எடப்பாடி பழனிசாமி
அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ``மேலூர் அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க அக்டோபர் 2023ல் மத்திய அரசிடம் அனுமதி கோரியது ஸ்டாலினின் தி.மு.க அரசு தான். அனுமதியும் கோரிவிட்டு, ரத்து செய்ய கேட்பது போல் நாடகமாடுகிறார்கள். தி.மு.க அரசு, மத்திய அரசுக்கு அனுப்பியுள்ள கடிதத்தின் மீதோ, அவர்கள் சார்பில் கொடுக்கப்படும் வாக்குறுதிகளின் மீதோ மக்களுக்கு துளியும் நம்பிக்கை என்பது கிடையாது. மேலூர் பொதுமக்களின் தொடர் போராட்டங்களுக்கு அ.தி.மு.க என்றும் துணைநிற்கும். அதிமுக சார்பில் மாவட்டக் கழகச் செயலாளரும் , சட்டமன்ற உறுப்பினரும் தொடர்ந்து அனைத்து போராட்டங்களிலும் கலந்து கொள்வார்கள். பொதுமக்களின் உணர்வுகளையும், தமிழ்நாட்டின் முதல் பல்லுயிர் தளமான அரிட்டாபட்டி பாதிக்கப்படுவதையும் கருத்திற்கொண்டு, டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க அளித்த அனுமதியைத் திரும்பப் பெறுமாறு மத்திய அரசையும், உரிய நடவடிக்கை எடுக்குமாறு ஸ்டாலினின் திமுக அரசையும் வலியுறுத்துகிறேன்" எனத் தெரிவித்திருக்கிறார்.
`என்ன நடந்தது ? என விரிவான அறிக்கை வேண்டும்' - டி.டி.வி.தினகரன்:
அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன், ``மதுரை அரிட்டாபட்டியில் டங்க்ஸ்டன் சுரங்க ஏலம் விடுவதற்கு முன்பாக மாநில அரசிடம் கேட்கப்பட்ட கருத்தின் போது எந்தவித எதிர்ப்பையும் பதிவு செய்யவில்லை என மத்திய அரசு கூறியிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் திமுக அரசின் இரட்டை வேடத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. மக்கள் தொகை அதிகமுள்ள கிராமங்களையும், பறவையினங்கள், அரியவகை வனவிலங்குகள், இயற்கை நீருற்று குளங்கள், சமண சிற்பங்கள், சமணப் படுகைகள் என தமிழர்களின் பண்டையகால வரலாற்றை பறைசாற்றும் வகையில் அமைந்திருக்கும் அரிட்டாபட்டி பகுதியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க அனுமதி வழங்கிய போது எதிர்ப்பு தெரிவிக்காத முதல்வர், பொதுமக்கள் போராட்டத்திற்கு பின் பிரதமருக்கு கடிதம் எழுதுவது போல நாடகமாடுவது கடும் கண்டனத்திற்குரியது. மதுரை அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் தொடர்பாக பல்வேறு விதமான வாதங்கள் நடைபெற்று வரும் நிலையில், என்ன நடந்தது ? என்பது குறித்து விரிவான அறிக்கை வெளியிடுவதோடு, மக்கள் எதிர்ப்பை சுட்டிக்காட்டி டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு வழங்கப்பட்ட அனுமதியை திரும்பப் பெறும் வகையில், நடைபெற உள்ள சட்டமன்ற கூட்டத்தொடரில் தீர்மானம் நிறைவேற்றவேண்டும்" என குற்றச்சாட்டுடன் கோரிக்கை வைத்திருக்கிறார்.
தமிழ்நாடு அரசின் பதில் என்ன?
அரிட்டாப்பட்டி டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தில் தி.மு.க அரசை எதிர்க்கட்சிகள் கடுமையாக குற்றம்சாட்டியிருக்கும் நிலையில், நீர்வளம் மற்றும் கனிமவளத்துறை அமைச்சர் துரைமுருகன் விரிவான விளக்கம் அளித்திருக்கிறார். இதுதொடர்பாக துரைமுருகன் வெளியிட்டிருக்கும் விளக்க அறிக்கையில், ``மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் எந்த சுரங்கப் பணிகளுக்கும் தமிழக அரசு எப்போதும் அனுமதி அளிக்காது என்று உறுதியளித்து, இந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்துக்கு அளிக்கப்பட்ட சுரங்க உரிமத்தை ரத்து செய்யுமாறு வலியுறுத்தி பிரதமருக்கு, தமிழக முதல்வர் கடிதம் எழுதியுள்ளார். இதை ஏற்று பொது மக்கள் போராட்டத்தை விலக்கிக் கொண்டுள்ளனர். முதல்வர் ஸ்டாலினின் உறுதியான நடவடிக்கையை மக்கள் ஏற்றுக் கொண்டதை சகிக்க முடியாத சிலர், சுரங்க உரிமத்துக்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்ததாக விஷமத்தனமான கருத்துகளைப் பரப்பி வருகின்றனர். மேலும், இந்த உரிமத்தை வழங்குவதற்கு முன்பாக மாநில அரசின் கருத்துகளைப் பெற்றதாக மத்திய அரசும் தவறான தகவலைத் தெரிவித்துள்ளது.
2023 செப்டம்பர் மாதம், முக்கிய கனிமவளங்களை ஏலம் விடுவது தொடர்பாக கனிமக் கொள்கையில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களை மத்திய அரசு தெரிவித்தது. உடனேயே, அந்த ஆண்டு அக்டோபர் 3-ம் தேதி மத்திய சுரங்கத் துறை அமைச்சருக்கு கடிதம் எழுதினேன். அதில் தமிழக அரசின் எதிர்ப்பை தெரிவித்தேன். ஆனால், நவம்பர் 2-ம் தேதி மத்திய சுரங்கத் துறை அமைச்சர் அளித்த பதிலில், உரிய சட்டத் திருத்தங்களை மேற்கொண்ட பிறகே ஏலம் விடப்படுவதாகவும், தேசிய அளவிலான தேவைகளைக் கருத்தில் கொண்டு, மாநில அரசுகள் இந்தக் கொள்கைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டு, நமது எதிர்ப்புகளை நிராகரித்தார்.
தொடர்ந்து, மேலூர் பகுதியில் உள்ள நிலங்களைப் பற்றிய விவரங்கள் மத்திய அரசால் கேட்கப்பட்டபோதும், உத்தேசிக்கப்பட்டுள்ள பகுதியில் உள்ள அரிட்டாபட்டி பகுதியானது பல்லுயிர் பெருக்க வரலாற்றுத் தலம் என்பதை சுட்டிக்காட்டினோம். இவை எவற்றையுமே கருத்தில் கொள்ளாத மத்திய அரசு, டங்ஸ்டன் உரிமத்தை தனியார் நிறுவனத்துக்கு அளித்தது. தற்போது மக்களின் எதிர்ப்பையும், முதல்வரின் உறுதியான நிலைப்பாட்டையும் கண்டு மிரண்டு மத்திய அரசும், அதனோடு சேர்ந்து இரட்டை வேடம் போடும் கட்சிகளும், மக்களின் கவனத்தை திசை திருப்ப, சுரங்க ஏலத்துக்கு தமிழக அரசு ஒப்புதல் தெரிவித்ததாக பொய் செய்திகளைப் பரப்பி வருகின்றன. இவற்றை மக்கள் நம்பத் தயாராக இல்லை" எனத் தெரிவித்திருக்கிறார்.
இந்த நிலையில், வரும் சட்டமன்றக் கூட்டத்தொடரில் தமிழ்நாடு அரசு சார்பில் டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைப்பதை எதிர்த்து சட்டப்பேரவையில் தனித் தீர்மானம் கொண்டுவரப்போவதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.