அலங்காநல்லூர்: 'எங்க மகன் மாதிரி இவன்; முதல் வாடிக்கு குடும்பத்தோட வந்திருக்கோம்' இளம்பெண் தேவதர்ஷனா
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் பங்கேற்க வரிசையில் நின்றிருந்த காளைகளின் நடுவில்... ஒரு காளையைச் சுற்றி மட்டும் அதிக நபர்கள் இருந்தனர். அருகில் சென்று என்னவென்று பார்த்தோம். ஒரு காளையை அவிழ்க்க அம்மா, மகள், அண்ணன்கள் என ஒரு குடும்பமே வரிசையில் நின்றிருந்தனர். அவர்களிடம் சென்று பேசியபோது, ``நாங்க ஒத்தக்கடையில இருந்து வந்திருக்கோம், எங்க மாடு பேரு கருப்பன். இவன சின்ன கண்ணுக்குட்டியா எங்க வீட்டுக்கு வாங்கிட்டு வந்தோம். இப்ப ஐந்து வருசமா வளர்த்து முதல் ஜல்லிக்கட்டு விளையாட அலங்காநல்லூர் வாடிக்கு கூட்டிட்டு வந்திருக்கோம். இவன எங்க மகன் மாதிரி வளர்க்குறோம். நாங்க என்ன என்ன சாப்பிடுறோமோ அது எல்லாமே கொடுத்து வளக்குறோம். பாதாம், வால்நட்னு எல்லாமே சாப்பிடுவான். நாங்க வெளிய போய்ட்டு வந்தா இவனுக்குனு தனியா தின்பண்டம் வாங்கிட்டு வருவோம்.
நம்ம சாப்பிட்டு கொடுத்தா இவன் சாப்பிட மாட்டான். ரொம்ப சுத்தம் பாப்பான். ஒரு நாளைக்கு இவனுக்குனு தனியா குறைந்தபட்சம் 500 ரூபாய் செலவு பண்ணுறோம். என் அண்ணன்கள் தான் இவனுக்கு ஜல்லிக்கட்டு விளையாட பயிற்சி கொடுத்தாங்க. வாடிவாசல்ல இவனுக்கும் அடிபடக் கூடாது... அதே மாதிரி வீரர்களையும் காயப்படுத்தக் கூடாது. இத மனசுல வச்சுதான் இவனுக்கு பயிற்சி கொடுத்திருக்கோம். இவன் பிடி படாம நின்னு விளையாடணும், அதுதான் எங்க ஆசை. முதல் வாடில எப்படி விளையாடப் போறான்னு பார்க்கத்தான் நாங்க குடும்பத்தோட வந்திருக்கோம்" என்று அர்வத்துடன் பேசினார், இளம்பெண் தேவதர்ஷனாவின்.