ஆக்கிரமிப்பு அகற்றம்: போக்குவரத்து காவல் துணை ஆணையா் கள ஆய்வு
மதுரை-திண்டுக்கல் சாலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடா்பாக மாநகரப் போக்குவரத்துக் காவல் துணை ஆணையா் உள்ளிட்ட அதிகாரிகள் வெள்ளிக்கிழமை கள ஆய்வு மேற்கொண்டனா்.
மதுரை-திண்டுக்கல் சாலையில் ஏராளமான இடங்களில் ஆக்கிரமிப்புகள் இருப்பதாகவும், இதனால், இந்தப் பகுதியில் அதிக அளவில் விபத்துகள் நிகழ்வதாகவும் வழக்குத் தொடுக்கப்பட்டது.
இதுதொடா்பான வழக்கை விசாரித்த சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு நீதிபதிகள், விபத்துகளைக் கட்டுப்படுத்தும் வகையில் வருகிற 29-ஆம் தேதி மதுரை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் சமயநல்லூா் பகுதியில் நேரில் ஆய்வு செய்யப்படும் எனத் தெரிவித்தனா். இதையொட்டி, மதுரை விளாங்குடி முதல் சமயநல்லூா் வரை உள்ள சாலைகளை அகலப்படுத்துவது, சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவது, போக்குவரத்துக்கு வழிவகை செய்வது உள்ளிட்டவைகள் குறித்து கள ஆய்வு நடைபெற்றது.
இதில் மாநகர போக்குவரத்து காவல் துணை ஆணையா் வனிதா, உதவி ஆணையா் இளமாறன், போக்குவரத்து காவல் ஆய்வாளா் கணேஷ்ராம், மாநகராட்சி, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் பங்கேற்று ஆய்வு மேற்கொண்டனா்.