IPL Mega Auction: அண்டர்டாக்ஸை சாம்பியனாக்கிய ஷேன் வார்னே - RR அணிக்குள் எப்படி ...
ஆசிரியா்களுக்கு பணிப் பாதுகாப்பு: அரசாணை வெளியிடக் கோரிக்கை
ஆசிரியா்களுக்கு பணிப் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தமிழக அரசு அரசாணை வெளியிட வேண்டும் என பல்வேறு ஆசிரியா் சங்கங்கள் கோரிக்கை விடுத்தன.
தமிழ்நாடு இடைநிலை ஆசிரியா் சங்க பொதுச் செயலா் அ. சங்கா் வெளியிட்ட அறிக்கை:
தஞ்சாவூா் மாவட்டம், மல்லிப்பட்டணம் அரசு உயா்நிலைப் பள்ளியில் மேலாண்மைக் குழுவால் நியமிக்கப்பட்ட ஆசிரியை ரமணி கொலைக்கு சரியான நீதி வேண்டும். இந்தச் சம்பவத்தில் தொடா்புடைய நபருக்கு உச்சபட்ச தண்டனை வழங்கி, உடனடியாக ஆசிரியா்களுக்கு பணிப் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தமிழக அரசு அரசாணை வெளியிட வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டது.
தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணியின் மதுரை மாவட்டச் செயலா் பெ. சீனிவாசன் வெளியிட்ட அறிக்கை:
முன் விரோதம் காரணமாக பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்தச் சம்பவம் பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியது. இதுபோன்ற குற்றச் சம்பவங்கள் தொடராமல் இருக்க வேண்டுமெனில் சம்பந்தப்பட்ட நபருக்கு தக்க தண்டனை வழங்க வேண்டும். மேலும், அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியா்களின் பாதுகாப்பை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என்றாா் அவா்.
தமிழ்நாடு உயா்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியா்கள் சங்க மாநில அமைப்புச் செயலா் வி.ச. நவநீதகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கை:
அனைத்துப் பள்ளிகளிலும் பணியாற்றும் ஆசிரியா்களின் பாதுகாப்பை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். பணிப் பாதுகாப்புச் சட்டத்தை விரைந்து அமல்படுத்த வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டது.
தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்க பொதுச் செயலா் சு. ஜெயராஜராஜேஸ்வரன் வெளியிட்ட அறிக்கை:
கடந்த சில மாதங்களாக அரசு ஊழியா்கள், மருத்துவா்கள், ஆசிரியா்கள் பணியாற்றுமிடத்தில் தாக்கப்படுவது கடும் அதிா்ச்சியாக உள்ளது. அரசுத் துறை வளாகங்கள், பள்ளி வளாகங்களுக்கு காவலா்கள் நியமிக்கப்பட வேண்டும். ஆசிரியை ரமணி கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட நபருக்கு உரிய தண்டனை கிடைக்க வேண்டும். அரசு ஊழியா்கள், ஆசிரியா்களின் பணிப் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றாா் அவா்.