ஆட்சிப் பணி அதிகாரிகளின் பங்களிப்பு தேச வளர்ச்சிக்கு வித்திட்டது: குடியரசுத் தலைவர்
கொள்கைகளை வகுப்பதில் ஆட்சிப் பணி அதிகாரிகளின் பங்களிப்பானது குடிமக்களின் நலவாழ்வுக்கும் தேசத்தின் வளர்ச்சிக்கும் வித்திட்டதாக குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு தெரிவித்தார்.
ஆண்டுதோறும் ஏப். 21 ஆம் தேதி ஆட்சிப் பணிகள் தினமாகக் கொண்டாடப்படுகிறது. இந்நாளையொட்டி குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு, எக்ஸ் வலைதளத்தில் திங்கள்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: ஆட்சிப் பணிகள் தினத்தையொட்டி அனைத்து ஆட்சிப் பணி அதிகாரிகளுக்கும் எனது வாழ்த்துக்கள். அரசுப் பணியில் உங்களது பங்கும். கொள்கைகளை வகுப்பதில் உங்களின் பங்களிப்பும் குடிமக்களின் நலவாழ்வுக்கும் தேசத்தின் வளர்ச்சிக்கும் வித்திட்டன.
தேசம் தனது இலக்குகளை நனவாக்கிக் கொள்ளவும் நல்லாட்சியில் புதிய சாதனைகளைப் படைக்கவும் நீங்கள் முக்கிய பங்காற்ற வாழ்த்துகிறேன் என்று குடியரசுத் தலைவர் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
ஐஏஎஸ் அதிகாரிகள் சங்கமும் ஆட்சிப் பணிகள் தினத்தையொட்டி அரசு அதிகாரிகளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இச்சங்கம், எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் ஆட்சிப் பணிகள் தினத்தில் வலுவான இந்தியா என்ற சர்தார் படேலின் லட்சியக் கண்ணோட்டத்தை அடைய நம்மை நாமே அர்ப்பணிப்போம்.
அவரது கொள்கைகளின்படி தேசத்துக்கு பெருமிதத்துடன் பணியாற்ற உறுதியேற்போம் என்று தெரி வித்துள்ளது.