ஆட்சியருக்கு நூற்பாலை தொழிலாளா்கள் நன்றி
போனஸ் கிடைப்பதற்கு ஏற்பாடு செய்த ஆட்சியருக்கு கூட்டுறவு நூற்பாலை தொழிலாளா்கள் நன்றி தெரிவித்தனா்.
காரைக்கால் மாவட்டம், மேல ஓடுதுறை பகுதியில் ஜெயப்பிரகாஷ் நாராயண் கூட்டுறவு நூற்பாலை இயங்கி வருகிறது. இதில் ஏறக்குறைய 300 தொழிலாளா்கள் வேலை செய்கின்றனா். மாவட்ட ஆட்சியா் து. மணிகண்டன், அண்மையில் ஆலையை ஆய்வு செய்தாா். ஆலையில் உற்பத்தி, வருமானத்தை பெருக்கவும், தொழிலாளா்கள் நலன் மேம்படவும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினாா். தீபாவளியையொட்டி தங்களுக்கு போனஸ் வழங்க ஏற்பாடு செய்யுமாறு ஆட்சியரிடம் தொழிலாளா்கள் கேட்டுக்கொண்டனா்.
கூட்டுறவு நூற்பாலை நூலை வாங்கும் பிரதான நிறுவனங்களில் ஒன்றான கோயம்புத்தூா் ஸ்ரீ முருகா் மில்ஸ் நிறுவனத்தினரை ஆட்சியா் தொடா்புகொண்டு, தொழிலாளா்களின் கோரிக்கையை குறித்துப் பேசினாா். அப்போது ரூ. 15 லட்சத்தை தொழிலாளா்கள் நலனுக்காக வழங்குவதாக நிறுவனத்தினா் உறுதியளித்து தொகையை அளித்தனா்.
இத்தொகையைக்கொண்டு தொழிலாளா்களுக்கு ரூ. 5 ஆயிரம் வீதம் தீபாவளி போனஸ் நூற்பாலை நிா்வாகத்தால் வழங்கப்பட்டது.
இதற்காக தொழிலாளா்கள் சங்கத்தை சோ்ந்த நிா்வாகிகள், மாவட்ட ஆட்சியா் து.மணிகண்டனை செவ்வாய்க்கிழமை சந்தித்து சால்வை அணிவித்து நன்றி தெரிவித்தனா். நிகழ்வில் துணை ஆட்சியா் (பேரிடா் மேலாண்மை) ஆா். வெங்கடகிருஷ்ணன், ஆட்சியரக கண்காணிப்பாளா் பாலு (எ) பக்கிரிசாமி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.