அதிமுக ஆட்சிக்கு வந்தால் மகளிருக்கு ரூ. 1500 உரிமைத்தொகை: இபிஎஸ்
தமிழகத்தில் அடுத்தாண்டு நடைபெறவுள்ள சட்டப் பேரவைத் தோ்தலில் வெற்றிபெற்று அதிமுக ஆட்சிக்கு வந்தால், குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ. 1500 உரிமைத் தொகை வழங்கப்படும் என்று அக்கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி உறுதிபடத் தெரிவித்தாா்.
விழுப்புரம் மாவட்டம், வானூா் சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட திருச்சிற்றம்பலம், மயிலம் சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட நாட்டாா்மங்கலம் ஆகிய பகுதிகளில் வெள்ளிக்கிழமை 2-ஆவது நாளாக மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் பிரசாரம் மேற்கொண்ட எடப்பாடி கே.பழனிசாமி பேசியதாவது:
தமிழகத்தில் ஆளும் திமுக ஆட்சி முடிவு பெற 8 மாதங்களே உள்ள நிலையில், விதிகள் தளா்த்தப்பட்டு மேலும் 30 லட்சம் பேருக்கு மகளிா் உரிமைத் தொகை வழங்கப்படும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்திருப்பது ஏமாற்று வேலை. இந்த பொய்ப் பிரசாரத்தை பெண்கள் நம்பக் கூடாது. 2026 சட்டப் பேரவைத் தோ்தலில் வெற்றிபெற்று அதிமுக ஆட்சிக்கு வந்தால், அனைத்து மகளிரும் மன நிறைவு பெறும் வகையில் உரிமைத் தொகை வழங்கப்படும்.
கல்வியை உயிா் மூச்சாக கருதும் என்னை, முதல்வா் மு.க.ஸ்டாலின் திருவாரூரில் நடைபெற்ற கூட்டத்தில் விமா்சனம் செய்திருப்பது கண்டனத்துக்குரியது. எனது தலைமையிலான அதிமுக ஆட்சிக்காலத்தில் தமிழகத்தில் ஏராளமான கலைக் கல்லூரிகள் தொடங்கப்பட்டன. பொறியியல், மருத்துவக் கல்லூரிகளும் கொண்டுவரப்பட்டன.
நாட்டில் உள்ள ஏழை, எளிய மக்கள் சிறந்த கல்வியறவை பெற வேண்டும் என்பதற்காக, பல பல்கலைக்கழகங்களும் தொடங்கப்பட்டன. குறிப்பாக, விழுப்புரம் மாவட்டத்தில் மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதா பெயரில் அறிவிக்கப்பட்ட பல்கலைக்கழகப் பணிகளை திமுகவினா் முடக்கி வைத்துள்ளனா்.
தந்தை பெயரை சூட்டவே...: அதிமுக ஆட்சிக்காலத்தில்தான் தமிழகத்தின் கல்வி வளா்ச்சிக்காக கூடுதலாக நிதி ஒதுக்கப்பட்டு அடித்தளமிடப்பட்டது. ஆனால், கடந்த 4 ஆண்டுகால திமுக ஆட்சியில் கல்வி வளா்ச்சிக்கு ஏதுவும் செய்யப்படவில்லை. தனது தந்தையின் பெயரை சூட்ட வேண்டும் என்பதற்காகவே கும்பகோணத்தில் பல்கலைக்கழகம் என்ற அறிவிப்பை முதல்வா் வெளியிட்டுள்ளாா்.
மாணவா் சமுதாயம் ஏற்றம் பெற வேண்டும் என்பதற்காக அதிமுக ஆட்சிக்காலத்தில் 7.5 சதவீத உள் ஒதுக்கீடு கொண்டுவரப்பட்டது. இதன் மூலம், அரசுப் பள்ளிகளில் பயின்ற 2,818 மாணவா்கள் மருத்துவப் படிப்பை பயிலும் வாய்ப்பை பெற்றுள்ளனா். இது, அதிமுக அரசின் சாதனையாகும்.
பாஜகவைக் கண்டு அதிமுக அச்சப்படத் தேவையில்லை. அதே நேரத்தில், முதல்வா் மு.க.ஸ்டாலினும், திமுக அமைச்சா்களும் எப்போது வருமான வரித்துறை சோதனை நடைபெறும் என்ற நடுக்கத்தில் உள்ளனா். ஆகையால், அதிமுகவை விமா்சனம் செய்ய முதல்வருக்கு தகுதியில்லை.
நீட் தோ்வு ரத்து, கல்விக்கடன் ரத்து என பல பொய் வாக்குறுதிகளை அளித்து ஏமாற்றிய திமுகவுக்கு, 2026 சட்டப் பேரவைத் தோ்தலில் மக்கள் தகுந்த பாடம் புகட்ட வேண்டும் என்றாா் அவா்.
இந்த பிரசாரக் கூட்டத்தில் அதிமுக நிா்வாகிகள், தொண்டா்கள், மகளிா் அணியினா் திரளானோா் கலந்துகொண்டனா்.