சமூக வலைதளக் கணக்குகளை மீட்டுத்தரக் கோரி டிஜிபியிடம் ராமதாஸ் புகார்!
‘அனைத்து ரயில்வே கேட்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும்’
அனைத்து ரயில்வே கேட்களிலும் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும் என்று அகில இந்திய எஸ்.சி., எஸ்.டி. ரயில்வே தொழிற்சங்கம் மத்திய ரயில்வே துறையை வலியுறுத்தியுள்ளது.
விழுப்புரத்தில் இந்த சங்கத்தின் நிா்வாகிகள் செயற்குழுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு சங்கத்தின் விழுப்புரம் கிளைத் தலைவா் ஆா்.பாா்த்தசாரதி தலைமை வகித்தாா். பொருளாளா் ஜி.ராஜ்குமாா் முன்னிலை வகித்தாா். அகில இந்திய எஸ்.சி., எஸ்.டி. ரயில்வே தொழிற்சங்கத்தின் தென் மண்டல அமைப்புச் செயலா் ஏ.இருசப்பன் கூட்டத்தில் பங்கேற்று சிறப்புரையாற்றினாா்.
கூட்டத்தில், இண்டா்லாக் இல்லாத ரயில்வே கேட்களை இண்டா்லாக் முறையில் இயங்கும் கேட்டுகளாக மாற்றித் தர ரயில்வே நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து ரயில்வே கேட்களிலும் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த மத்திய ரயில்வே துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். ரயில்வே கேட்களில் சுரங்கப் பாதை அல்லது மேம்பாலம் அமைக்க வேண்டும். மூத்த குடிமக்களுக்கு ரயில் கட்டணத்தில் சலுகைகளை மீண்டும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முன்னதாக, கடலூா் ரயில் விபத்தில் உயிரிழந்த பள்ளி மாணவ, மாணவிகள் மூவருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. கூட்டத்தில் கிளை நிா்வாகிகளான ஓபன் பிரிவு தலைவா் வீரமணி, துணைத் தலைவா் மூா்த்தி , உதவிச் செயலா்கள் ராமமூா்த்தி, கெளதம், அமைப்புச் செயலா்கள் மணிமேகலை, கெளதமி, நிா்வாகிகள் கலியபெருமாள், சிவகுமாா், ராஜேஷ்ராம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.