``ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு'' - கரூரில் விசிக ஒட்டிய பரபர போஸ்டர்; நிர்வாகிகள் சொல்வதென்ன?
நடிகர் விஜய் அரசியல் கட்சியைத் தொடங்கியபோது, 'ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு' என்பதை கொள்கையாக அறிவித்த நிலையில், அந்த பாயிண்டை வைத்து, 'எங்களுக்கும் பங்கு வேண்டும்' என்று பிரதான அரசியல் கட்சிகளோடு கூட்டணி வைத்துள்ள கட்சிகள் வெளிப்படையாக கேட்கத் தொடங்கியிருக்கின்றன.
அந்த வகையில், தமிழக காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை பிறந்தநாளையொட்டி, சென்னையில் அந்தக் கட்சியைச் சேர்ந்த நிர்வாகி ஒருவர், '2026-ன் துணை முதல்வரே!' என்ற வாசகங்கள் அடங்கிய போஸ்டர்களை அச்சடித்து ஒட்டி, தி.மு.க கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தினார்கள்.
ஆனால், அந்த நிர்வாகிக்கு விளக்கம் கேட்டு செல்வப்பெருந்தகை நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகச் சொல்லப்படுகிறது.

இந்நிலையில் தான், அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கரூர் மாநகரப் பொருளாளரான ரஹ்மான் மற்றும் ஆகாஷ் ஆகியோர் சேர்ந்து, அச்சடித்து கரூரில் ஒட்டியுள்ள சுவரொட்டிகள் பேசுபொருளாகியிருக்கிறது.
அந்த போஸ்டர்களில் அம்பேத்கர், திருமாவளவன் புகைப்படங்களுடன், 'ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு-2026' என்ற வாசகங்களும் இடம்பெற்றுள்ளது, கரூர் மாவட்ட அரசியல் வட்டாரத்தில் சூட்டைக் கிளப்பியிருக்கிறது.
இந்த விவகாரம் குறித்து, ரஹ்மானிடம் பேசினோம். "ஆட்சியில்/அதிகாரத்தில் பங்கு என்பது 20 வருஷத்துக்கு முன்பே பிரகனப்படுத்தப்பட்ட தலைவரோட கொள்கை. கட்சியின் கொள்கை. சமூகநீதி அரசு என்று சொல்கிறார்கள். ஆனால், அதை செயல்படுத்தவில்லை. கீழ்நிலை மக்களை மேல்நிலைக்கு கொண்டுவர ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு கொடுத்தால் தானே, நிறைவேற்ற முடியும்.

விளிம்புநிலை மக்களைப் பற்றி எங்களுக்கு தான் தெரியும். எங்கோ ஒரு இடத்தில் இருந்துகொண்டு சமூகநீதி என்று பேசுகிறீர்கள். எங்களுக்கு அதிகாரம் இருந்தால் தான் அதை மாற்ற முடியும். அதனால், இது என்னோட தனிப்பட்ட விருப்பம் இல்லை. கட்சியின் கொள்கையை தலைவருக்கும், மக்களுக்கும் ஞாபகப்படுத்தத்தான் இதை செய்தோம். வன்னியரசுகூட, '26 சீட்டுகள் வேண்டும்' என்று வலியுத்தியுள்ளார். நாங்களும் எங்கள் விருப்பத்தை வெளிப்படுத்தியிருக்கிறோம்" என்றார்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
