நெப்போலியன் குடும்பத்தின் 900 கோடி மதிப்பிலான நகைகள் திருட்டு! - சினிமாவை மிஞ்சி...
ஆணவக்கொலையால் சீரழிந்த இரண்டு குடும்பங்கள் - `சாதி' யால் பறிபோன உயிர்கள்
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு இராமநாயக்கன்பட்டியைச் சேர்ந்த இளங்கலை பட்டதாரியான ராமசந்திரன் (24) பால் கறவை தொழில் செய்து வந்திருக்கிறார். அப்பா செல்வம் ஆட்டோ ஒட்டுநர். உடல்நிலை சரியில்லாத நிலையில் சமீபகாலமாக வீட்டிலேயே இருந்திருக்கிறார். கணபதிபட்டியைச் சேர்ந்த ஆர்த்தி (21) இரண்டு வருடம் பி.காம் படித்துவிட்டு இடையில் நின்றுவிட்டார். அப்பா சந்திரன், சகோதரன் ரிபின் (23) இருவரும் தங்களுக்குச் சொந்தமான நிலத்தில் விவசாய வேலைகளைச் செய்து வந்துள்ளனர். ராமசந்திரன் - ஆர்த்தி இருவருடைய குடும்பத்தின் பொருளாதார சூழ்நிலைகளுமே நடுத்தரமாகத்தான் இருக்கின்றன. இருவருமே பிற்படுத்தபட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள். ராமசந்திரன் - ஆர்த்தி மூன்று வருடமாக காதலித்து வந்த நிலையில் ஆர்த்தியின் குடும்பத்தினர் காதலை ஏற்க மறுத்துள்ளனர். இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் வீட்டை விட்டு வெளியேறி இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த ஆர்த்தியின் தந்தை சந்திரன் கடந்த அக்டோபர் 12 ஆம் தேதி ராமசந்திரனை வெட்டி படுகொலை செய்தார்.
சொத்துப் பிரச்னையா? ஆணவக்கொலையா?
ஆரம்பத்தில் இந்த கொலை ஒரு சொத்துப் பிரச்சனையாகவும், மாமனார், மருமகன் சண்டையாகத்தான் பார்க்கபட்டது. ஏன் போலீசாரே ஆணவக் கொலையா? என்பது விசாரணையில் தான் தெரிய வரும் என்றனர். ஆனால் ஆர்த்தி இது ஆணவக்கொலை தான் என்பதற்கு நிறைய சம்பவங்களைச் சொல்கிறார். ”எங்களுடைய காதல் வீட்டிற்கு தெரிந்ததுமே ’வேற்று சாதியை சேர்ந்தவன் நீ சொத்துக்காக ஆசைப்பட்டு தான் காதலிக்கிறாயா? என்று ராமசந்திரனை கண்டபடி திட்டிவிட்டார் என் அப்பா சந்திரன்.

சொத்துக்காக காதலிக்கவில்லை என்று காட்டுவதற்காகவே திருமணம் செய்ததுமே வத்தலகுண்டு காவல்நிலையத்தில் எனக்கு சொத்து வேண்டாம் என்று எழுதிக் கொடுத்துவிட்டோம். ராமசந்திரன் வேறு சாதியைச் சேர்ந்தவன். அதோடு பால் கறப்பவர் என்பதை என் அப்பா கெளரவக் குறைச்சலாகக் கருதினார். அக்கா கணவருடன் சேர்ந்து பால் பண்ணை தொடங்க வேண்டும் என்று கனவோடு ராமசந்திரன் இருந்தான். அதற்காகதான் திருமணம் செய்ததும் வெளியூருக்கு போகாமல் இங்கேயே இருந்தோம்.
எங்களுடைய வீட்டில் எங்களை ஏற்றுக் கொள்வார்கள் என்று ரொம்பவே நம்பியிருந்தோம். திருமணத்திற்கு பிறகும் ஒருமுறை ராமசந்திரனை கொல்ல வந்தார் என் அப்பா. அப்போதும் அமைதியாக வந்த ராமசந்திரனிடன் கேட்டபோது கூட“ வருங்காலத்தில் நம்மள ஏத்துக்கிட்டா உன் அப்பாவோட நான் முகம் பார்த்து பேசணும்னு தான் அமைதியாக வந்துட்டேன், கண்டிப்பாக நம்மை ஏற்றுக்கொள்வார்கள்” என்று நம்பிக்கையோடு ராமசந்திரன் இருந்ததாகச் சொல்கிறார் ஆர்த்தி.

படித்த இளைஞர், சொந்த தொழில் கனவு, ஆர்த்தி பெற்றோர் மீதான நம்பிக்கை என எல்லாமே இருந்தும் ஏன் ராமசந்திரன் கொல்லப்பட்டிருக்கிறார் என்றால் அதற்கு காரணம் சாதிதான், என்னுடைய அப்பாவிற்கு சாதிதான் முக்கியமானதாக இருந்தது" என்கிறார் ஆர்த்தி.
ஆணவக் கொலையால் சீரழிந்த இரண்டு குடும்பங்கள்
ஆணவக் கொலைகள் அதற்கு சம்பந்தமில்லாத மற்றவர்களையுமே பாதிக்கக் கூடிய ஒரு கொடூரமான நோய். சந்திரனுக்கு தன் மகள் என்ன ஆனாலும் பரவாயில்லை, குடும்ப மரியாதை, சாதிப் பெருமிதம்தான் முக்கியமாக இருந்துள்ளது. இந்த ஆணவக்கொலையால் தற்போது இரண்டு குடும்பங்களுமே கடுமையாக பாதிக்கபட்டிருக்கிறது. ராமசந்திரன் கொலை வழக்கில் தொடர்புடைவர்களாக ஆர்த்தியின் தந்தை சந்திரன், அவர் மனைவி, மகன் ரிபின் ஆகியோர் குடும்பத்துடன் கைது செய்யபட்டுள்ளனர்.

மறுபுறம் ராமசந்திரன் இல்லாததால் அவருடைய வீடே தலைகீழாக மாறியுள்ளது. ராமசந்திரனை படிக்க வைத்து அவர் குறித்து ஏரளமான கனவுகளோடு இருந்திருக்கிறார் அவரின் தந்தை செல்வம். மகன் கொல்லபட்ட வேதனையில் தற்போது அவரும் இறந்திருக்கிறார்.
குறிப்பாக 21 வயதேயான ஆர்த்தியின் எதிர்காலமே கேள்விகுறியாகியிருக்கிறது. தன் அப்பாவால் கணவன் கொல்லப்பட்டிருக்கிறான். தற்போது கணவரின் தந்தை செல்வமும் இறந்திருக்கும் சூழ்நிலையில் ஆர்த்தியின் மனநிலை எப்படிபட்டதாக இருக்கும் என்பதை வார்த்தைகளால் விவரிக்க முடியாத பெருந்துயர்.

வருங்காலம் குறித்த பெருங்கனவுகளோடு திருமணம் செய்த இருவரின் வாழ்க்கை சாதியால் சிதைக்கபட்டிருக்கிறது. தன் இரண்டு பிள்ளைகளின் வாழ்க்கை என்ன ஆகும் என்று துளியும் சிந்திக்காத அளவிற்கு சந்திரனுக்கு சாதி எனும் மனநோய் பிடித்திருந்திருக்கிறது.
எது நோய்? அது எப்படிப் பரவுகிறது? என்பதைக் கண்டறிந்துவிட்டோம். ஆனால் நோய்க்கு ஏற்ற மருந்து அளிக்கிறோமா? என்பதுதான் முக்கியம் என்ற அம்பேத்கரின் கேள்விக்கு இந்த சமூகமும், அரசும் என அனைவருமே பதில் சொல்ல வேண்டியிருக்கிறது.





















