`ஆண்கள் என்றாலே பாவம்தானா...?" - உண்மை சொல்லும் மனநல மருத்துவர்
`நான் மகான் அல்ல' படத்தில் நடிகர் கார்த்தி 'இப்போலாம் குடும்பஸ்தனைப் பார்த்தா மரியாதை வருதுடா...' என்பார். நடுத்தரக் குடும்பத்தில், அப்பாவின் சிரமத்தை, உறவினர்களின் உதாசினத்தைப் பார்த்து வளர்ந்த 90's கிட்ஸ் 'எப்படியாவது குடும்பத்தை கௌரவமான நிலைக்கு கொண்டு வந்து எல்லார் முன்னாடியும் வாழ்ந்து காட்டணும்' எனச் சபதமேற்கும் குடும்பஸ்தன் பட நவீன் போல போராடுகிறார்கள். இதற்கு நடுவே திருமணம், அதற்கு பின்பான செலவுகளுக்காக கடிகார முள்ளையும் மறந்து இயங்குபவர்கள் அதிகம்.
இது ஒரு பக்கம் என்றால், 'லட்சத்துல சம்பளம் வாங்குறேன் ஆனா நிம்மதி இல்லை...' எனப் புலம்பும் இளைஞர்கள் திருமணத்துக்குப் பின்பும் தனிமையை, வெறுமையை உணர்வதாகச் சொல்கிறார்கள்.

பெங்களூருவில் அதுல் சுபாஷ், ஆக்ராவைச் சேர்ந்த மாணவ் சர்மா எனச் சிலர் கல்வி, பணம் என எல்லாம் இருந்தும் குடும்பப் பிரச்னைகளை எதிர்கொள்ள முடியாமல் தங்கள் உயிரையும் மாய்த்துக் கொள்கிறார்கள். சமீபமாக 'ஆண் என்றாலே பாவம்தான்' என டிவி நிகழ்ச்சியில் பேசும் அளவிற்கு ஆண்கள் Depression Mood-க்குச் சென்றுவிடுகிறார்கள்.
செய்து முடிக்க வேண்டிய கடமைகள், மனதுக்குள் இருக்கும் ஆசை, கனவுகள், Possessive மனைவி | கணவன், அங்கீகாரமற்ற பணிச் சூழல், வருமானத்துக்கு அதிகமாக செலவழிக்கச் செய்யும் சமூக சூழல் என எல்லாவற்றையும் கடந்து வாழ்ந்தாக வேண்டிய பொறுப்பை பெரும்பாலான குடும்பஸ்தர்கள் சுமந்து கொண்டிருக்கிறார்கள். இதன் உச்சகட்டத்தில்தான் வாழ்க்கை மீதான வெறுப்பும், அதன் விளைவாக மேற்கொள்ளப்படும் தற்கொலைகளும் அதிர்ச்சியடையச் செய்யும் சம்பவங்கள். எனவே, இது போன்ற சூழலில் ஒருவர் தன் மனநிலையை எப்படி கையாளலாம் என்பதை விளக்குகிறார், மனநல ஆலோசகர் டாக்டர் ராமானுஜம்.
``ஒரு காலத்தில் குடும்பப் பொறுப்பு என்றால் ஆண் என்றும், வீட்டுப் பொறுப்பு என்றால் அதற்கு தகுதியானவர் பெண் என்றும் ஒரு எழுதப்படாத விதி இருந்தது. இந்த விதி தவறு... என்றாலும் அதன் நீட்சி இப்போதும் தொடர்கிறது. அதே நேரம் மாற்றமும் நிகழ்ந்து வருகிறது. ஆண் - பெண் என்ற வேறுபாடின்றி இருபாலரும் இப்போது உழைக்கிறார்கள். இதில், பெண்கள் சுமக்கும் கூடுதல் (வீட்டு வேலை) சுமையில் பங்கெடுக்கும் ஆண்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருவது வரவேற்கத்தக்கது. இதற்கு மத்தியில் பணிச்சூழலில் போட்டி, போதிய வருமானமின்மை, பணி நிரந்தரமின்மை போன்றவை மன அழுத்தத்தை அதிகரிக்கிறது.
இந்தத் தலைமுறையில் இருபாலரும் Toxic Relationship, Money Minded Partner, Sexual Harassment போன்ற சிக்கல்களையும், அதுபற்றி வெளியே பகிர்ந்துகொள்ள முடியாத சூழலிலும் இன்றைய இளைஞர்கள் மன அழுத்தத்துக்கு ஆளாகிறார்கள். இதெல்லாம் இவ்வளவு காலமும் ஆண்கள் மட்டுமே செய்துவந்தார்கள். இப்போது சில பெண்களும் ஆண்களைப் போலவே இந்த செயல்களில் இணைந்துகொண்டதை, முதல் தலைமுறையாகப் பார்க்கும் ஆண்களுக்கு இது பெரிய பிரச்னையாகத் தெரிகிறது. இதை Role Reversal என்றுகூடச் சொல்லலாம். இதுபோன்ற சூழல்களை எதிர்கொள்ளவும், தீர்வு காணவும் இளைஞர்கள் தயாராக இருக்கவேண்டும். அதற்கு அடிப்படை சம உரிமை வழங்குவதுதான்.
எந்த உறவாக இருந்தாலும் அதற்கு சம உரிமை அளிப்பதன் மூலமும், எதிர்பார்ப்புகளைக் குறைத்துக்கொள்வதின் மூலமும், சுயமரியாதையைத் தக்க வைத்துக்கொள்வதன் மூலமும் இந்த சூழலை எதிர்க்கொள்ள முடியும். இது தவறும்போதுதான் சிக்கல்கள் அதிகரிக்கும்.
அலுவலகத்தில் ஆண்களை விடப் பெண்களுக்குக் கூடுதல் கவனம் கிடைப்பதற்கு இரண்டு காரணங்கள் இருக்கலாம். ஒன்று அந்த வேலையை இத்தனை ஆண்டுகள் ஆண்கள்தானே செய்திருந்தார்கள். இப்போது ஒரு பெண் அதை செய்யும்போது அது பாராட்டப்படலாம்.
உதாரணத்துக்கு ஒரு ஆண் ஆம்னி பஸ் ஓட்டுவது இயல்பான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. அதே ஒரு பெண் ஓட்டினால் அது செய்தியாக மாறுகிறது. அப்படித்தான்... இதை ஆண்கள் புரிந்துகொள்ள வேண்டும். இன்னொன்று பாராட்டுபவர் எதிர்பாலினமாக இருந்தால் இயற்கையாகவே எதிர்பாலினத்துக்குதான் அந்தப் பாராட்டு வரும். எனவே, இதுபோன்றவை பெரிதாக மனதில் வைத்திருந்தால் அதுவும் மன அழுத்தத்தைக் கொடுக்கும்.
மன அழுத்தப் பிரச்னைகளை எதிர்கொள்ள முதலில் நமக்குத் தேவை Self Love. நம்மை நாமே காதலிக்காதபோதுதான் நம்முடைய இணையரிடம் 'என்னை கவனி, என்னை மதிக்க வேண்டும், என்னிடம் அனைத்துத் தகவல்களையும் சொல்ல வேண்டும்' எனப் பிறர் நம்மை நேசிக்கவேண்டும் என எதிர்பார்ப்போம். அதனால் நாம் அவர்களைக் கட்டுப்படுத்தத் தொடங்கிவிடுவோம். இதுபோன்ற சூழலில் வருவதுதான் அந்த possessive. ஆனால் உங்களை நீங்களே காதலிக்கத் தொடங்கினால் நம் இணையரிடமிருந்து பெரிதாக எதையும் எதிர்பார்க்க மாட்டோம். அதனால் வரும் அழுத்தங்களைத் தவிர்க்கலாம்.
தகவல் தொடர்பு சாதனங்கள் நம்மை இணைக்கத்தானே கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால், ஒரு குடும்பத்தில் இருக்கும் ஒவ்வொருவரும் இன்றுத் தனித் தனியாகத்தான் இருக்கிறார்கள். மனிதர்களைவிட்டு, உறவுகளைவிட்டு வெகுதூரம் விலகிவிட்டோம். அதேபோல நினைத்தவுடன் எல்லாம் கிடைத்துவிட்டால் அதில் ஒரு சலிப்பு வந்துவிடும். எதாவது வேண்டும் என நினைத்தால், இந்த இணைய யுகத்தில் உடனே அதைப் பெற்றுக்கொள்ள முடிகிறது. வெளிநாட்டுக்குச் சுற்றுலா அழைத்துச் சென்றால்கூட இன்றைய தலைமுறையை திருப்திபடுத்த முடியவில்லை. ஆனால் இதற்கு முந்தைய தலைமுறை, மாமா வீட்டுக்கு அழைத்துச் சென்றாலே மிகவும் மகிழ்ச்சியாக இருந்தார்கள். இப்போதைய இளைய தலைமுறை சந்திக்கும் மன அழுத்தத்துக்கு இதுபோன்ற சலிப்பும் ஒரு காரணமாக இருக்கலாம்.
பக்கத்து வீட்டுக்காரருடன் நீங்கள் வாசலில் நின்று அரட்டை அடிப்பதால் ஏற்படும் மன உணர்வு, சமூக ஊடகத்தில் மணிக்கணக்கில் பேசினாலும் ஏற்படாது. முந்தைய தலைமுறைக்கு வீடு , குடும்பம், வேலை, உழைப்பு, சமூகம், உறவினர்கள், கோயில் திருவிழா, திருமணம் போன்ற ஒன்றுகூடல்கள், எனும் மூன்று இடங்கள் இருந்தன. இப்போதைய தலைமுறைக்கு வீடு, வேலை என உள்ளுக்குள் சுருங்கிவிட்டார்கள். இன்றைய இளைஞர்களுக்கு சமூகம் என்பது சமூக ஊடகங்களில்தான் இருக்கிறது. எனவே ஆண்களானாலும் சரி பெண்களானாலும் சரி மனிதர்களுடன் உணர்வுரீதியாக தொடர்பில் இருப்பது, எதிர்பார்ப்புகளைத் தவிர்த்து நம்மை நாமே காதலிப்பது, சம உரிமை கொடுத்து காதலை பலப்படுத்துவது, பிரச்னைகளை எதிர்கொள்ளும் மனநிலையுடன் தயாராக இருப்பது ஆகியவை வாழ்க்கையை அழகாக்கும்" என்றார்.
வாழ்ந்துதான் பார்ப்போமே...!