டிரம்ப் மீது தாக்குதல் நடத்த திட்டமா? வெள்ளை மாளிகை அருகே ஆயுதங்களுடன் திரிந்த நபர் சுட்டுப்பிடிப்பு!
வாஷிங்டன் : வெள்ளை மாளிகை அருகாமையில் ஆயுதம் ஏந்தி உலா வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவரை அமெரிக்க ரகசிய பாதுகாப்பு பணியாளர்கள் ஞாயிற்றுக்கிழமை(மார்ச் 9) துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.
சனிக்கிழமை(மார்ச் 8) நள்ளிரவில் வெள்ளை மாளிகை அருகே தனது வாகனத்தை நிறுத்திய அந்த நபர், பாதுகாப்பு பணியாளர்களைக் கண்டதும் அவர்களை தாக்க முற்பட்டதாகத் தெரிகிறது. இதையடுத்து இரு தரப்புக்குமிடையே துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது. அதில் அந்த நபர் பலத்த காயமடைந்ததாகக் கூறப்படுகிறது.
இதனைத்தொடர்ந்து, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள அந்த நபர் தற்போது சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த நபர் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை தாக்க திட்டமிட்டு அங்கு சுற்றித் திரிந்தாரா என்ற கோணத்தில் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இச்சம்பவம் அரங்கேறிய சனிக்கிழமை இரவு, டிரம்ப் வார விடுமுறையை கழிப்பதற்காக ஃபுளோரிடாவிலுள்ள் தமது இல்லத்துக்கு சென்றிருந்தார் என்று அங்கிருந்து வரும் கள நிலவரங்கள் தெரிவிக்கின்றன.