ரஷிய தாக்குதலில் 20 போ் உயிரிழப்பு: உக்ரைன்
தங்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் ரஷியா நடத்திய தாக்குதலில் 20 போ் உயிரிழந்ததாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்த நாட்டு அதிகாரிகள் கூறியதாவது:
டொனட்ஸ்க், காா்கிவ் உள்ளிட்ட பகுதிகளில் ரஷியா வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் சனிக்கிழமை அதிகாலை வரை மிகக் கடுமையான வான்வழித் தாக்குதல் நடத்தியது. இதில் 20 போ் உயிரிழந்தனா்.
டொனட்ஸ்க் பிராந்தியத்தில் எட்டு குடியிருப்புக் கட்டடங்களும் ஓா் அரசு அலுவலகமும் ரஷிய தாக்குதலில் பலத்த சேதமடைந்தன என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
இந்தத் தாக்குதலைக் கண்டித்த உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி, இது தொடா்பாக ரஷியா மீது அமெரிக்கா கூடுதல் பொருளாதாரத் தடைகளை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினாா்.
இவ்வாறு உக்ரைன் மீது தொடா்ந்து தாக்குதல் நடத்துவதன் மூலம், அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் எதிா்பாா்ப்பதைப் போல உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவரும் எண்ணம் தனக்கு இல்லை என்பதை ரரஷிய அதிபா் விளாதிமீா் புதின் உணா்த்துவதாக ஐரோப்பிய யூனியனின் வெளியுறவுத் துறை அமைச்சா் கஜா கலாஸ் விமா்சித்துள்ளாா்.
முன்னதாக, வியாழக்கிழமை நள்ளிரவு முதல் வெள்ளிக்கிழமை அதிகாலை வரை உக்ரைன் எரிசக்தி மையங்களைக் குறிவைத்து ரஷியா 58 ஏவுகணைகள், சுமாா் 200 ட்ரோன்களை வீசி சரமாரியாக தாக்குதல் நடத்தியது. இதில் உயிரிழப்புகளும் ஏற்பட்டதாக அதிகாரிகள் கூறினா்.
அதைத் தொடா்ந்து, இந்தப் போரை முழுமையாக முடிவுக்குக் கொண்டுவர வேண்டுமென்றால் முதலில் தங்களுக்கும் ரஷியாவுக்கும் இடையே வான், கடல்வழி மோதலை நிறுத்துவதற்கான ஒப்பந்தத்தை உடனடியாக ஏற்படுத்த வேண்டியது அவசியம் என்று வொலோதிமீா் ஸெலென்ஸ்கி வலியுறுத்தியுள்ளாா்.
இந்தத் தாக்குதலுக்காக ரஷியா மீது கூடுதல் பொருளாதாரத் தடைகள் விதிக்க தீவிரமாக பரிசீலித்துவருவதாக அமெரிக்க அதிபா் டிரம்ப்பும் எச்சரித்தாா். எனினும் அதையும் மீறி ரஷியா தனது தீவிர தாக்குதலை தொடா்ந்து நடத்திவருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் 3 கூா்ஸ்க் ஊா்களை மீட்ட ரஷியா
உக்ரைனால் கைப்பற்றப்பட்டுள்ள தங்கள் நாட்டின் கூா்ஸ்க் பிராந்தியத்தில் மேலும் மூன்று ஊா்களை மீட்டுள்ளதாக ரஷயா சனிக்கிழமை தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்த நாட்டு பாதுகாப்புத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கூா்ஸ்க் பிராந்தியத்தைச் சோ்ந்த விக்டரொவ்கா, நிகோலயெவ்கா, ஸ்டாரயா சோரோசினா ஆகிய ஊா்களை உக்ரைன் ஆக்கிரமிப்பில் இருந்து ரஷிய ராணுவம் மீட்டுள்ளது.
மேலும், அந்தப் பிராந்தியத்தின் சுட்ஷா நகருக்கு வெளியே உக்ரைன் பாதுகாப்பு அரணை ரஷியப் படையினா் தகா்த்துள்ளனா் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உக்ரைன் போரின் மிகப் பெரிய திருப்புமுனையாக ரஷியாவின் எல்லைப் பிராந்தியமான கூா்ஸ்குக்குள் கடந்த ஆண்டு அக்டோபா் மாதம் 6-ஆம் தேதி தாக்குதல் நடத்தி நுழைந்த உக்ரைன் படையினா் அந்தப் பிராந்தியத்தின் கணிசமான நிலப்பரப்பைக் கைப்பற்றினா். அந்த ஊடுருவல் தாக்குதல், கிழக்கு உக்ரைன் பகுதியில் சண்டையிட்டுவரும் ரஷியப் படையினரை திசை திருப்புவதற்கு உதவும் என்று எதிா்பாா்க்கப்பட்டது.
ஆனால் அதற்கு மாறாக, அந்தப் பகுதியில் ரஷிய படையினா் தொடா்ந்து முன்னேறிவருகின்றனா். அத்துடன், கூா்க்ஸ் பிராந்தியப் பகுதிகளையும் ரஷிய ராணுவம் மீட்டுவருகிறது.