பகவதி அம்மன் கோயில் திருவிழா: திருவனந்தபுரத்துக்கு மாா்ச் 12 முதல் சிறப்பு ரயில்
IND vs NZ: ஸ்பின்னர்கள் இருக்க பயமேன்; சொல்லியடித்த ரோஹித்; நியூசிலாந்து தடுமாறியது ஏன்?
சாம்பியன்ஸ் டிராபியின் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் ஆடி முடித்திருக்கிறது. இந்திய ஸ்பின்னர்களின் கட்டுக்கோப்பான பந்துவீச்சால் நியூசிலாந்து அணி திணறிப்போய் விட்டது.
முதல் இன்னிங்ஸில் என்ன நடந்தது? இந்திய அணி எப்படி நியூசிலாந்தை கட்டுப்படுத்தியது?

`டாஸ் தான பரவாயில்ல' - அசால்ட்டு ரோஹித்
நியூசிலாந்து அணியின் கேப்டன் சாண்ட்னர்தான் டாஸை வென்றிருந்தார். முதலில் பேட்டிங் செய்யப்போவதாக அறிவித்தார். முதலில் பேட்டிங் என்றாலும் சரி பௌலிங் என்றாலும் சரி எல்லாவற்றுக்கும் தயாராகவே இருக்கிறோம் என ரோஹித் நம்பிக்கையாகப் பேசினார். இந்திய அணியில் எந்த மாற்றமும் இல்லை. அதேமாதிரியே நான்கு ஸ்பின்னர்களுடனேயே களமிறங்கியிருந்தனர்.
நியூசிலாந்து அணி பேட்டிங்கைத் தொடங்கியது. முதல் 10 ஓவர்கள் பவர்ப்ளேயில் ஆட்டம் முழுமையாக நியூசிலாந்தின் கையிலேயே இருந்தது. காரணம், ரச்சின் ரவீந்திரா. முதல் ஸ்பெல்லை வீசி ஷமி மற்றும் ஹர்திக் இருவரின் ஓவர்களிலுமே அதிரடியாக ஆடி அடுத்தடுத்து பவுண்டரிகளை அடித்துக்கொண்டே இருந்தார். ஹர்திக் வீசிய நான்காவது ஓவரில் 2 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சருடன் 16 ரன்களைச் சேர்த்திருந்தார். ஷமி வீசிய அடுத்த ஓவரில் 2 பவுண்டரிகளுடன் 11 ரன்கள். ரோஹித் சர்மா திணறிப்போனார். ரச்சினுக்கு பீல்ட் செட் செய்ய முடியாமல் தடுமாறினார். இதனால் 6 வது ஓவரிலேயே வருண் சக்கரவர்த்தியை அழைத்து வந்துவிட்டார்.
வந்தார் வருண் எடுத்தார் விக்கெட்
'ரோஹித் அவருக்கு எப்போது விக்கெட் தேவையோ அப்போதெல்லாம் வருணை அழைத்து வருவார். இவ்வளவு சீக்கிரம் அவரை அழைத்து வந்திருக்கிறார் எனில், இந்தியாவுக்கு இப்போது விக்கெட் தேவைப்படுகிறது. இந்தியா மீதுதான் இப்போது மொத்த அழுத்தமும் இருக்கிறது.' என தினேஷ் கார்த்திக் வர்ணனையில் பேசிக் கொண்டிருந்தார். வருணை அறிமுகப்படுத்திய பிறகும் ரோஹித் எதிர்பார்த்த ரச்சினின் விக்கெட் கிடைக்கவே இல்லை. மாறாக வில் யங்கை வருண் lbw ஆக்கினார். ரச்சினுக்கு ஷமி ஒரு கேட்ச்சையும் ஸ்ரேயஸ் ஐயர் ஒரு கேட்ச்சையும் விட்டு மறுவாய்ப்பை வழங்கிக்கொண்டே இருந்தனர். முதல் 10 ஓவர்கள் பவர்ப்ளேயில் நியூசிலாந்து அணி 69-1 என்ற வலுவான நிலையில் இருந்தது. இந்த சமயத்தில்தான் 11 வது ஓவரில் குல்தீப்பை ரோஹித் அறிமுகப்படுத்தினார். இந்த பௌலிங் மாற்றம்தான் ஆட்டத்தின் திருப்புமுனை. வந்த வேகத்திலேயே ஒரு கூக்ளியில் ரச்சினை 37 ரன்களில் போல்டாக்கி வெளியேற்றினார். வீசிய அடுத்த ஓவரில் கேன் வில்லியம்சன் முன்னங்காலில் டிபன்ஸ் ஆட முயன்று குல்தீப்பிடமே கேட்ச் ஆகி வெளியேறினார்.

ஆட்டம் காட்டிய குல்தீப்
கடந்த 2023 ஓடிஐ உலகக்கோப்பையில் ஆடியதற்கும் இப்போதைக்கும் இடையில் குல்தீப் டெக்னிக்கலாக நிறையவே மாறியிருக்கிறார். முன்பை விட பந்தை கொஞ்சம் அதிகமாக துள்ளி ரிலீஸ் செய்கிறார். ரிலீஸ் பாய்ண்டையும் ஸ்டம்பிலிருந்து ஒயிடாக வைத்துக் கொள்கிறார். இந்த மாற்றம் அவருக்கு நல்ல பலனை கொடுக்கிறது. வலுவாக முன்னேறிக் கொண்டிருந்த நியூசிலாந்து அணி 75-3 எனத் தடுமாறத் தொடங்கியது. இதன்பிறகு ஆட்டம் மொத்தமாக இந்தியாவின் கையில் வந்தது. டேரில் மிட்செலும் டாம் லேதமும் கூட்டணி சேர்ந்தனர். இந்தியாவின் ஸ்பின்னர்கள் முழுமையாக பொறுப்பேற்றுக் கொண்டனர். பவுண்டரிக்கே முயலாமல் விக்கெட்டை தற்காக்கும் முனைப்பிலேயே நியூசிலாந்து ஆடியது. ஆனாலும் சீரான இடைவெளியில் விக்கெட் விழுந்துகொண்டே இருந்தது. 30 பந்துகளை எதிர்கொண்டிருந்த டாம் லேதம் 14 ரன்களில் ஜடேஜாவின் பந்தில் ஸ்வீப் ஆட முயன்று வெளியேறினார்.
மெதுவான அரைசதம்
இதன்பிறகு, டேரில் மிட்செலுடன் க்ளென் பிலிப்ஸ் கூட்டணி சேர்ந்தார். 81 பந்துகளாக வராமல் இருந்த பவுண்டரியை க்ளென் பிலிப்ஸ்தான் வர வைத்தார். அவ்வபோது ஒன்றிரண்டு பவுண்டரிக்கள் வந்தாலும் இந்த கூட்டணியும் முழுக்க முழுக்க தற்காப்பு ஆட்டமே ஆடியது. டேரில் மிட்செல் ஒரு முனையை முழுமையாகக் காத்து நின்றார். இவர்களுக்கும் இந்திய பீல்டர்கள் கேட்ச்சை ட்ராப் செய்தனர். டேரில் மிட்செலுக்கு ரோஹித்தும் பிலிப்ஸூக்கு கில்லும் தலா ஒரு கேட்ச்சை ட்ராப் செய்தனர். ஆனாலும் இந்தக் கூட்டணியால் அதற்கு மேல் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை. வருணின் பந்தில் 34 ரன்களில் க்ளென் பிலிப்ஸ் போல்ட் ஆனார். நின்று ஆடிய டேரில் மிட்செல் 91 பந்துகளில் அரைசதம் கடந்தார். இந்தத் தொடரில் மிக மெதுவான அரைசதம் இதுதான். அதேமாதிரி, கடந்த 11 ஆண்டுகளில் நியூசிலாந்துக்காக அடிக்கப்பட்ட மெதுவான அரைசதமும் இதுதான்.

அரைசதத்தைக் கடந்தவுடன் டேரில் மிட்செல் பெரிய ஷாட்களை ஆட முயன்றார். ஷமியின் 46 வது ஓவரில் இரண்டு பவுண்டரிகளை அடித்தார். ஆனால், அதே ஓவரில் 63 ரன்களில் ரோஹித்திடம் கேட்ச்சும் ஆனார். ப்ரேஸ்வெல் கொஞ்சம் Run a Ball இல் ஆடி ரன்னை உயர்த்தினார். கடைசிக்கட்டத்தில் கொஞ்சம் அதிரடியாகவும் ஆடினார். பவுண்டரிகளையும் சிக்சர்களையும் பறக்கவிட்டார். கடைசிக்கட்டத்தில் ப்ரேஸ்வெல் ஆடிய ஆட்டத்தால் நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 251 ரன்களை எடுத்தது. ப்ரேஸ்வெல் அரைசதத்தைக் கடந்திருந்தார். கடைசியில் ப்ரேஸ்வெல் அடித்த ரன்களை இந்திய அணி கட்டுப்படுத்தியிருக்க வேண்டும். இந்தியாவுக்கு 252 ரன்கள் டார்கெட்.
இந்திய அணியிடம் நீண்ட பேட்டிங் ஆர்டர் இருக்கிறது. மேலும் இதேமாதிரியான டார்கெட்டை இதற்கு முந்தைய போட்டிகளிலும் இந்திய அணி எட்டியிருக்கிறது. ஆகவே இந்திய அணி இந்த டார்கெட்டை வெற்றிகரமாக முடிக்கும் என நம்பலாம். ஆனால், கிரிக்கெட்டில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதால் நியூசிலாந்தை அத்தனை எளிதாகவும் குறைத்து மதிப்பிட்டுவிட முடியாது.