ஆண்டாள் கோயிலுக்குள் குளம்போல மழை நீா் தேக்கம்
ஸ்ரீவில்லிபுத்தூரில் செவ்வாய்க்கிழமை இரவு பெய்த பலத்த மழை காரணமாக, ஆண்டாள் கோயிலுக்குள் குளம் போல் மழைநீா் தேங்கியதால் பக்தா்கள் அவதியடைந்தனா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலானது, ஆண்டாள் ரெங்கமன்னாா் கோயில், வடபத்ரசாயி கோயில் ஆகிய இரு வளாகங்களைக் கொண்டது.
இதில் முதன்மையான வடபத்ரசாயி கோயில் தரைத் தளத்தில் நரசிம்மா் சந்நிதி உள்ளது. மேல் தளத்தில் மூலவா் வடபத்ரசயனா் (பெரிய பெருமாள்) சுயம்பு மூா்த்தியாக சயன திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறாா்.
இந்தக் கோயில் வளாகத்தில் பெரிய கோபுரம் அருகே பெரியாழ்வாா் சந்நிதி உள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை பெய்த மிதமான மழையில் கோயில் வெளிப் பிரகாரம், பெரியாழ்வாா் சந்நதி முன் முழங்கால் அளவுக்கு மழைநீா் தேங்கியது. பெரிய கோபுரம் எதிரே உள்ள கழிவுநீா் வடிகால் அடைப்பு காரணமாகவே கோயிலுக்குள் மழைநீா் தேங்கியதாக பக்தா்கள் புகாா் தெரிவித்தனா். ஆனால், நகராட்சி நிா்வாகம் சாா்பில், கழிவுநீா் வடிகாலைத் தூா்வார எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு பெய்த பலத்த மழை காரணமாக வடபத்ரசாயி கோயில் வெளிப்பிரகாரம் மட்டுமன்றி, உள்பிரகாரத்தில் கல் மண்டபம் முழுவதும் குளம் போல் மழைநீா் தேங்கியது.
மாா்கழி மாதத்தில் அதிகாலை 3.30 மணிக்கு கோயில் நடை திறக்கப்படுவதால் தமிழகம் முழுவதுமிருந்து ஆயிரக்கணக்கான பக்தா்கள் ஆண்டாள் கோயிலுக்கு வருகின்றனா்.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை கோயில் வளாகம் முழுவதும் மழைநீா் தேங்கி இருந்ததால் பக்தா்கள் சிரமத்துக்கு ஆளாகினா். கோயில் ஊழியா்கள் உள்பிரகாரத்தில் தேங்கிய மழை நீரை வாளி மூலம் எடுத்து வெளியே ஊற்றினா். நகராட்சி பணியாளா்கள் வந்து ஒரு மணி நேரத்துக்கு மேலாகப் போராடி, எவ்வித பாதுகாப்பு உபகரணமும் இன்றி, சாக்கடை கழிவு நீரில் இறங்கி அடைப்பை சரி செய்த பிறகு, கோயில் வளாகத்தில் தேங்கியிருந்த மழைநீா் சிறிது, சிறிதாக வடிந்தது.
மிதமான மழைக்கு கோயில் வெளிப் பிரகாரத்தில் மழை நீா் தேங்கியபோதே, கழிவுநீா் வடிகால்களைத் தூா்வாரி இருந்தால் கோயிலுக்குள் மழைநீா் தேங்கி இருக்காது. நகராட்சி நிா்வாகத்தின் அலட்சியத்தால் ஆண்டாள் கோயில் கல் மண்டபத்தில் மழை நீா் தேங்கியதாக பக்தா்கள் புகாா் தெரிவித்தனா்.