ஜம்மு - காஷ்மீரில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை!
ஜம்மு - காஷ்மிரில் பாதுகாப்புப் படை வீரர்கள் வியாழக்கிழம நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
தெற்கு காஷ்மீர், குல்காம் மாவட்டத்தில் உள்ள பெஹிபாக் பகுதியில் பயங்கரவாதிகள் இருப்பதாக உளவுத் துறை அளித்த தகவலை தொடர்ந்து, ராணுவமும் ஜம்மு - காஷ்மீர் காவலர்களும் இணைந்து தேடுதல் பணியில் வியாழக்கிழமை அதிகாலை முதல் ஈடுபட்டனர்.
இந்த தேடுதல் பணியின்போது ராணுவத்தினரை நோக்கி பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சூட்டதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, பாதுகாப்புப் படையினர் நடத்திய பதில் தாக்குதலில் 5 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
இரண்டு பாதுகாப்புப் படை வீரர்கள் காயமடைந்துள்ள நிலையில், தொடர்ந்து அப்பகுதியில் தேடுதல் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : கடன் ரூ. 6,203; வசூலித்தது ரூ. 14,131 கோடி!! நிவாரணம் கோருவேன்: விஜய் மல்லையா
இதுகுறித்து ராணுவத்தின் சினார் கார்ப்ஸ் பிரிவு எக்ஸ் தளத்தில் தெரிவித்ததாவது:
“டிசம்பர் 19 அன்று, பயங்கரவாதிகளின் நடமாட்டம் குறித்த உளவுத்துறை தகவல் அடிப்படையில், இந்திய ராணுவம் மற்றும் ஜம்மு காஷ்மீர் காவல்துறை இணைந்து குல்காமில் உள்ள காதர் என்ற இடத்தில் ஒரு கூட்டு தேடுதல் பணியை தொடங்கியது.
பாதுகாப்புப் படையினரால் சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகள் கவனிக்கப்பட்டது. பயங்கரவாதிகள் கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டை பாதுகாப்புப் படையினர் மீது நடத்தினர். திறம்பட செயல்பட்ட படை வீரர்கள் பதிலடி கொடுத்தனர்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.