செய்திகள் :

BB Tamil 8 Day 73: `தப்புதான்'- கலங்கிய பவித்ரா; அன்ஷிதாவின் டிராமா? கோக்குமாக்கான விதிளால் சர்ச்சை

post image
கல் கோட்டையைக் கட்டும் வீக்லி டாஸ்க்கின் இரண்டாவது நாளில், நீல அணியின் அதாவது முத்து, மஞ்சரி, தீபக் ஆகிய மூவரின் கூட்டணி மிக ஸ்போர்ட்டிவ்வாக விளையாடியது. அதிலும் முத்துக்குமரன் எல்லாம் இந்த ஆட்டத்திற்காகவே பிறந்தவர்போல ஆர்வத்துடனும் அதே சமயத்தில் கட்டுப்பாடுடனும் விளையாடியது சிறப்பு.

என்றாலும் இந்த எபிசோடில் உடல் சார்ந்த வன்முறைக் காட்சிகள் அதிகமாக இருந்ததால் பார்ப்பதற்கு ஒவ்வாமையாகவும் அச்சமாகவும் இருந்தது. 

பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? - நாள் 73

“நான் அடிபட்டு விழுந்தப்ப ஒரு குரல்தான் என் காதுல ஒலிச்சது.. ‘அவன் நடிக்கறான்’ன்னு சொன்ன உன் குரல்தான். அதுதான் எனக்கு ரொம்ப வலிச்சது” என்று சவுந்தர்யாவிடம் சொல்லிக்கொண்டிருந்தார் ராணவ். இருவருக்கும் ஒரு பூனை-எலி ஆட்டம் ஓடிக்கொண்டிருக்கிறது. வார்த்தைகளால் மிக மோசமாக தாக்கிக் கொண்டாலும் சமநிலையான சமயங்களில் இருவரும் இயல்பாக பேசிக் கொள்வது நன்று. 

BBTAMIL 8: DAY 73

இப்போதும்கூட சவுந்தர்யாவிற்கு மனமார மன்னிப்புக் கேட்கத் தோன்றவில்லை. ராணவ் தந்த நீண்ட விளக்கத்திற்குப் பிறகு ‘அப்படியாக இருந்தா ஸாரி’ என்று நிபந்தனையுடன் மன்னிப்பு கேட்கிறார். “நீ கொடுத்த இம்ப்ரஷன் அப்படி” என்று காரணமும் சொல்கிறார். இதைப் பற்றி நேற்றே விளக்கமாக பார்த்து விட்டோம். ஒருவர் நூறு முறை நடித்தாலும் நூற்றி ஓராவது முறை கீழே விழுந்தால் ஓடிச் சென்று உதவ முயல்வதுதான் அடிப்படையான மனித இயல்பு. 

இதே விஷயத்தை பிறகு முத்துவிடமும் சொல்லிக் கொண்டிருந்தார் ராணவ். “நீ வெளில தெரியறதுக்காக பண்றேன்னு சவுந்தர்யா சொல்றா.. எல்லோருமே இங்க அதைத்தானே பண்ணிட்டு இருக்காங்க” என்று ராணவ் சொன்ன அதே லாஜிக்கைத்தான் நேற்றைய கட்டுரையிலும் குறிப்பிட்டிருந்தோம். தன் இருப்பைத் தொடர்ந்து நிறுவிக்கொண்டே இருப்பது இந்த ஆட்டத்தின் ஒரு பகுதி. சவுந்தர்யா உள்ளிட்ட பலரும் அதைத்தான் செய்கிறார்கள். எனில் ராணவ் செய்வது மட்டும் ஏன் கேள்விக்குள்ளாக்கப்படுகிறது?! 

BBTAMIL 8: DAY 73

“போன முறையே புகார் வந்ததால் இந்த முறை ஜெப்ரிக்கு அடிபட்டு விடக்கூடாது என்று மிகவும் கவனமாக ஆடினேன்” என்று விஷாலிடம் சொல்லிக் கொண்டிருந்தார் ராணவ். இருக்கலாம். ராணவ்வின் உயரத்திற்கும் எடைக்கும் ஜெப்ரி நிகரானவர் அல்ல.   “இதுவே நீ தள்ளி ஜெப்ரிக்கு அடிபட்டிருந்தால் இந்நேரம் நீ வில்லனாகி  இருப்பாய்” என்று விஷால் சொன்னது முற்றிலும் உண்மை. அன்ஷிதா, சவுந்தர்யா எல்லாம் இணைந்து கத்திக் கூப்பாடு போட்டு டிராமா ஆடி ராணவ்வை வசை பாடியிருப்பார்கள்.  

தொடர்ந்து இயங்கும் கண்ணுக்குத் தெரியாத நீதி


காரும் சைக்கிளும் மோதி, சைக்கிள்காரர் மீது தவறு என்றாலும் கூட, கார் வைத்திருப்பவர் மேல்தான் பொதுமக்களின் கோபம் பாயும். அது போல ஜெப்ரியோடு ஒப்பிடும்போது அவரின் பக்கமே தவறு இருந்தாலும் திடகாத்திரமாக இருக்கிற ராணவ்வை திட்டித் தீர்த்திருப்பார்கள். நீதி என்பது நிலையானதாக இருக்க வேண்டும். ஆளுக்கு ஏற்றாற் போல் மாறுவதல்ல. 

ராணவ்விற்கு அடிபட்டதால், தனியாக நிற்கும் மஞ்சரியை, முத்து + தீபக் கூட்டணியோடு இணைத்து விட்டார் பிக் பாஸ். மூவர் இருவருடன் மோத வேண்டும் என்று முன்பு பிக் பாஸ் போட்ட அநியாயமான விதி, இப்போது தன்னிச்சையாகவே சரியாகிவிட்டது. உலகத்தில் கண்ணுக்குத் தெரியாத வகையில் ஏதோவொரு நீதி இயங்கிக் கொண்டே இருக்கிறது என்பது இதுபோன்ற சமயங்களில் நிரூபணமாகிறது. ‘நன்றி.. தெய்வமே’ என்று இந்த மூவரும் மகிழ்ச்சியடைந்தார்கள். 

BBTAMIL 8: DAY 73

ஆட்டம் ஆரம்பித்தது. அடிபட்டிருக்கும் ராணவ்வால் போட்டியில் கலந்துகொள்ள முடியவில்லையென்றாலும் சும்மா இருக்காமல் விளையாட்டை ‘லைவ் கமென்ட்ரியாகச்’ சொன்னது சுவாரசியம். சமயங்களில் இது இடையூறாகவும் இருந்தது. 

ராணவ்விற்கு அடிபட்ட விஷயம் இப்போது ஓர் எச்சரிக்கை மணியாக இருந்ததால் அனைவருமே கவனமாக ஆட முற்பட்டார்கள். என்றாலும் ஆட்டம் சூடாக, சூடாக.. ஒரு கட்டத்தில் வன்முறை என்பது தன்னிச்சையாக உள்ளே வந்து விட்டது. வன்முறையின் இயல்பே அதுதான். சாத்தான் போல உள்ளே நுழையும் வன்முறை உணர்வு ஒரு கட்டத்தில் அதுவே நம்மை ஆக்ரமித்துக்கொள்ளும். அந்த சமயத்தில் நாம் செய்யும் காரியங்கள் நம் சுயநினைவில் இருந்து கை நழுவி விடும். 

தீபக் மற்றும் ஜெப்ரிக்கும் முதல் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஜெப்ரியின் ஏரியாவிற்குச் சென்ற தீபக், விளையாட்டாக தள்ளப் போக, அதை முரட்டுத்தனமாக எதிர்கொண்டார் ஜெப்ரி. பிறகு ‘ண்ணா.. ஸாரிண்ணா..” என்றார். இதனால் தீபக்கின் ஈகோ தூண்டப்பட, பதிலுக்குத் தள்ள முயன்றார் என்றாலும் இளைஞனின் வேகத்தை தீபக்கால் எதிர்கொள்ள முடியவில்லை. “எப்படி வரான்  பாரு’ என்பதோடு பின்வாங்கி விட்டார். 

கோக்குமாக்கான விதிகளைக் காெண்ட பிக் பாஸ் டாஸ்க்


கன்வேயர் பெல்டில் கற்கள் வந்து முடிந்த சமயத்தில் சவுந்தர்யா பாதுகாத்து வைத்திருந்த கற்கள் சூறையாடப்பட்டன. சவுந்தர்யா அதற்காக நிறைய போராடவிலலை. ‘எப்படியாவது போங்கடா’ என்கிற மாதிரி விட்டு விட்டார். ஒருவகையில் அது புத்திசாலித்தனமும் கூட. 

ஏனெனில் பிக் பாஸ் டாஸ்க்குள் எல்லாம் சராசரி நபர்களால் விரும்பி ஆடப்படும் ஆட்டம் அல்ல. கால்பந்து, கிரிக்கெட் போன்ற ஆட்டங்கள் என்றால் அதற்கான விதிகள் தெளிவாக வரையறுக்கப்பட்டிருக்கும். அதை ஆடுவதற்கு பயிற்சி எடுத்திருப்போம். எனவே அந்த விளையாட்டை ஆர்வமாக முன்வந்து ஆடுவோம். ஆனால் பிக் பாஸ் ஆட்டம் என்பது கோக்குமாக்கான விதிகளைக் கொண்டது. ஆட்களிடையே மோதலை ஏற்படுத்தி அதன் எதிர்வினைகளை வணிகப்படுத்துவதுதான்  இதன் பிரதான நோக்கம். அதற்கேற்ப விதிகள் எப்படி வேண்டுமானலும் மாறும். எனவே போட்டியாளர்கள் இயன்றவரை போராடி ஒரு கட்டத்தில் விட்டு விடுவதுதான் புத்திசாலித்தனம். இதை ஈகோ இஷ்யூவாக எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை. 

அருணின் கை ரயானின் முகத்தில் பட்டு காயம் உண்டானது. விஷாலும் ரயானும் வார்த்தைகளாலும் கிடுக்கிப்பிடியாலும் மோதிக் கொண்டனர். ரஞ்சித் கூட ஆவேசமாக விஷாலை வளைத்துப் பிடித்த அபூர்வமான காட்சியைப் பார்க்க முடிந்தது. ஆட்டத்தை அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்த விரும்பிய பிக் பாஸ், கோட்டை கட்ட வேண்டிய அமைப்பு பற்றி படம் வரைந்து பாகங்களைக் குறித்துத் தந்தார். கற்களின் மீது யாரும் பாதுகாப்பு நோக்கத்தில் அமரக்கூடாது என்கிற விதி இணைக்கப்பட்டது. 

“இந்த ஆட்டத்துல நீடிக்கறது உன் ‘கைலதான்’ இருக்குன்னு பிக் பாஸ் ஏற்கெனவே சொன்னாரு. அப்ப புரியல.. இப்போ புரியுது” என்று அடிபட்ட தன் கையைக் காண்பித்து ராணவ் சொன்ன நகைச்சுவையை முத்து ரசித்தார். “சரி போய் சாப்பிட்டு வந்து தெம்பா ஆடுங்க” என்று உணவு இடைவேளையை அறிவித்த பிக் பாஸ், குறைவான கற்களைக் கொண்டிருக்கிற அணி வெளியேற்றப்படும் என்கிற எச்சரிக்கையைத் தந்து ஆட்டத்தில் சூட்டை அதிகரிக்க விரும்பினார். இது சரியாகவே வேலை செய்தது. 

சைக்கிள் கேப்பில் கோட்டையைச் சிதைத்த சவுந்தர்யா

கல் தூக்கிப் போடப்பட்டதால் அருணுக்கு காயம் ஏற்பட ஆட்டம் ஸ்தம்பித்தது. பலரின் கவனமும் அந்தப் பக்கம் செல்ல, அதைப் பயன்படுத்திக் கொண்ட சவுந்தர்யா, முத்து அணியின் கோட்டையை எட்டி உதைத்து கலைத்தது அழுகிணி ஆட்டம். ‘ஒருத்தருக்கு அடிபட்டிருக்கிறதாலதான் ஆட்டத்தை நிறுத்தினோம். அந்தக் கேப்பில் இப்படிச் செய்யலாமா?” என்று மஞ்சரி வன்மையாகக் கண்டித்தார். 


மீண்டும் ரயானுக்கும் விஷாலுக்கும் இடையே பலத்த வாக்குவாதம். “கல்ல தூக்கிப் போடாதீங்க. லேடீஸுக்கு அடிபடும்” என்று விஷால் சொல்ல “அப்ப பாய்ஸ்க்கு அடிபட்டா பரவாயில்லையா?” என்று ஆணியக் கேள்வியைக் கேட்டு விஷாலைத் திகைக்க வைத்தார் ரயான். “அருணா இருக்கவே தாங்கிக்கிட்டான். எதுக்காகச் சொன்னேன்னா.. அதுக்காக சொன்னேன்’ என்று சமாளித்தார் விஷால். இன்னொரு பக்கம் முத்துவிற்கும் சவுந்தர்யாவிற்கும் மோதல். சவுண்டு தன் வழக்கமான ரியாக்ஷன்களைக் காண்பிக்க அதனால் எரிச்சலானார் முத்து. 

BBTAMIL 8: DAY 73

“ஒருத்தருக்கு அடிபட்டதுன்னு தெரிஞ்சா ஆட்டத்தை நிறுத்துங்க” என்று கத்தினார் ரயான். எனவே ஆட்டம் சில நிமிடங்களுக்கு  ஸ்தம்பித்தது. “ஆடலாமே?” என்று ஜாக்குலின் ஆதங்கப்பட “ஆட்டம் நடக்கட்டும். அப்பதான் ஒவ்வொருத்தரின் சுயமும் வெளியே வரும்” என்று பிக் பாஸ் மாதிரியே யோசித்தார் முத்து. இந்த அணுகுமுறையில் இருந்த நியாயத்தை உணர்ந்த கேப்டன் விஷால் “அவங்க அவங்க பிளான்ல ஆடுங்க.. ஆனா வெளில இருந்து இதைப் பார்க்கறாங்க. அது ஞாபகமிருக்கட்டும்” என்று தண்ணி தெளித்து விட்டார். 

தலையில் அடிபட்டதாக அன்ஷிதா செய்த டிராமா?


கோட்டைக்குள் சில கற்களை ஜெப்ரி அணி சாமர்த்தியமாக பதுக்கி வைத்தது. ‘விதிப்புத்தகததின் படி இது தவறு’ என்று மற்றவர்கள் சுட்டிக் காட்ட “எங்களுக்குத் தெரியாது. செஞ்சுட்டோம். என்ன இப்ப?” என்கிற சமாளிப்புடன் எடுத்து வைத்தார்கள். செயலற்ற கேப்டன் என்கிற அவப்பெயரை கடந்த வாரத்தில் ரஞ்சித் எடுத்ததால், தன்னை தொடர்ந்து நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் விஷால் இருந்தார். எனவே தப்புகள் நடக்கும் போதெல்லாம் கத்திக் கத்தியே நிலைமையைச் சீர்செய்ய வேண்டியிருந்தது. 

“அதென்ன.. என் கிட்ட மட்டும் ஜாக்குலின்னு கத்தி அதிகாரம் பண்றே.. அங்க போய் அன்ஷிம்மான்னு பம்முறே?” என்கிற மாதிரி கேப்டனிடம் ஜாக் எகிறிய காட்சி சுவாரசியமானது. விஷால் அப்படியான பாரபட்சத்தைக் காட்டுவது நன்றாகவே தெரிகிறது. முத்து அணியின் கோட்டையைக் காலி செய்வதில் ஜெப்ரி அணி மும்முரம் காட்டியது. “பவித்ரா கடிச்சிட்டா” என்று மஞ்சரி திடீரென்று அலற “இல்லவே இல்லை” என்று சாதித்த பவித்ரா, “நான் என்ன பண்றது. எனக்கு வேற வழியில்ல. தப்புத்தான்” என்று பிறகு ஒப்புக் கொண்டார். பவித்ரா ஒப்புக் கொண்டவுடனே அதை மஞ்சரி விட்டு விட்டது ஸ்போர்ட்டிவ்னஸ். 

BBTAMIL 8: DAY 73

முத்து அணியின் கற்கள் பெரும்பாலும் காலியானதால் அவர்கள் ஜெப்ரியின் கோட்டையை டார்கெட் செய்ய முயன்றார்கள். அருண் காலை நொண்டி நொண்டிச் சென்று சோர்ந்து விழுந்தார். ஜெப்ரி அணியின் கோட்டையை தீபக் தள்ள முயன்ற சமயத்தில் ‘அய்யோ.. அம்மா’ என்று தலையைப் பிடித்துக் கொண்டு ஓரமாகச் சென்றார் அன்ஷிதா. ‘தீபக் அண்ணா.. கல்லு எடுக்கும் போது தலைல பட்டுடுச்சு” என்றார். ஆனால் வீடியோவைப் பார்க்கும் போது அப்படி நிகழவில்லை. திடீரென்று தலையைப் பிடித்துக் கொண்டு அன்ஷிதா ஒரு பாவனையுடன் விலகுவது நன்றாகவே தெரிகிறது. ‘அவன் நடிக்கறான்’ என்று ராணவ்வை குற்றம் சாட்டி வருந்திய அன்ஷிதா, இப்போது அதையே செய்தது அவரது உத்தியா?!

கற்காலத்தின் குரூரங்களை மிச்சம் வைத்திருக்கிற சமூகம்

விஷாலின் அணி ஏறத்தாழ அனைத்துக் கற்களையும் இழந்த நிலையில் மற்றவர்கள் ஆக்ரோஷமாக மோதிக் கொள்வதைப் பார்த்து அவர் அழ ஆரம்பித்து விட்டார். “என்னடா.. இப்படி ஆடறாங்க.. பயமா இருக்கு” என்று அழுத விஷாலை  மற்றவர்கள் சமாதானப்படுத்தினார்கள்.

மூலைக்கு மூலை ஒருவரையொருவர் வளைத்துப் பிடித்துக் கொண்டிருந்தார்கள். மஞ்சரி என்றாலே அன்ஷிதாவிற்கு பிரத்யேகமான ஆவேசம் வந்து விடுகிறது. எனவே சந்திரமுகியாக மாறியிருந்தார். இன்னொரு பக்கம் முத்துவை ஜெப்ரி வளைத்துப் பிடித்தார். முத்துவின் தலைக்கு அருகே கல் இருந்ததால் ஏதாவது ஆகி விடலாம் என்று ஆட்சேபித்த ரயான், அந்தக் கல்லை நகர்த்தி வைத்தார். 

BBTAMIL 8: DAY 73

“எங்களுக்கு ஒண்ணுமில்ல. இருவருமே கவனமாத்தான் ஆடறோம்.  எங்களை ஆட விடுங்கடா’ என்று அப்போதும் ஆட்டத்தில் மும்முரமாக இருந்தார் முத்து. ‘ஒரு பொருளை எடுத்த இடத்திலேயே வைக்கணும். அதுதான் நல்ல பழக்கம்’ என்கிற மாதிரி கல்லை பழைய மாதிரியே முத்துவின் தலைக்கு அருகில் ராணவ் கொண்டு வந்து வைத்தார். “உன்னை யாருடா கேமுக்குள்ள வரச் சொன்னது?” என்று மற்றவர்கள் கடிந்து கொண்டனர். 

கல் கோட்டையை கட்டும் இந்த டாஸ்க்கின் பல காட்சிகள் கற்காலத்தை நினைவுப்படுத்தின. சற்று யோசித்துப் பாருங்கள். விலங்குகளைப் போலவே ‘வலிமையுள்ளது மட்டுமே எஞ்சும்’ என்கிற இனக்குழுக்களாக மனிதக்கூட்டம் வாழ்ந்த காலக்கட்டம் அது. சட்டம், நீதி, காவல் என்று எந்த நிறுவனங்களும் ஒழுங்குகளும் இல்லாமல் நாம் திட்டமிட்ட  சமூகமாகத் திரளாத சூழல். யார் உடமையை யார் வேண்டுமானலும் பறித்துச் செல்லலாம். தாக்குப் பிடிப்பவர்கள் மட்டுமே உயிர்வாழ முடியும்.  இதைக் காட்சி வடிவில் புரிந்து கொள்ள வேண்டுமென்றால் மெல் கிப்சன் இயக்கிய ‘Apocalypto’ என்கிற திரைப்படத்தைப் பார்க்கலாம். ‘கங்குவாக்களுக்கு’ முன்னோடித் திரைப்படம் அது. 

ஆனால் பல்லாயிரக்கணக்கான வருடங்களுக்குப் பிறகு மெல்ல மெல்ல நகர்ந்து நாம் நாகரிமடைந்த சமூகங்களாக உருமாறியிருக்கிறோம். இன்று அத்தனை எளிதில் ஒருவரின் உடைமையைப் பறிக்க முடியாது. காவல், நீதி, தண்டனை என்கிற பல சமூக ஏற்பாடுகள் இருக்கின்றன. நீதியைக் கோரி விண்ணப்பிக்க முடியும்.  என்றாலும் கற்கால மனிதனின் எச்சங்கள் நமக்குள் அப்படியேதான் உறைந்திருக்கின்றன. இன்னமும் நாகரிகத்தை நோக்கி நாம் நடக்க வேண்டிய தூரம் கணிசமாக இருக்கிறது.  பிக் பாஸ் வீட்டில் நடந்த டாஸ்க் நமக்கு உணர்த்துகிற நீதி இதுவே. 

வெளியேற்றப்பட்ட சிவப்பு அணி - முன்னணியில் பிங்க் அணி


‘இந்த ஷோவே பிடிக்கலை’ என்று சூழலின் தாக்கத்தை தாங்க முடியாமல் புலம்பினார் பவித்ரா. ஒரு கட்டத்தில் இந்த டாஸ்க் நிறுத்தப்பட்டது. இந்த நாளின் இறுதியில் பிங்க் நிற அணி (ஜெப்ரி, பவித்ரா, அன்ஷிதா) முன்னணியில் இருக்கிறது. குறைவான கற்களை வைத்திருந்த சிவப்பு அணி (அருண், விஷால், சவுந்தர்யா) ஆட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்டிருக்கிறது.

BBTAMIL 8: DAY 73

 மஞ்சள் அணி 73 கற்களையும் நீல அணி 52 கற்களையும் கைவசம் வைத்துள்ளது. எனவே இந்த இரு அணிகளும் கூட்டணி சேர்ந்து பிரதான எதிரியான பிங்க் அணியை டார்கெட் செய்யலாம்.  டாஸ்க் முடிந்தாலும் கூட அதற்கான வியூகங்களை மண்டை காய்கிற வரைக்கும் யோசித்துக் கொண்டிருந்தார் முத்து. 

எனவே அடுத்த நாளும் அனல் பறக்கும் ஆட்டமாக இது தொடரக்கூடும். மண்ட பத்ரம். 

Siragadikka aasai : முத்துவின் பெண் வெர்ஷன் தான் ஸ்ருதி; விஜயாவிற்கு வந்த சோதனை!

சிறகடிக்க ஆசையில் கடந்த இரண்டு எபிசோட் முழுக்க மனோஜ் வாங்கப் போவதாக நம்பிக் கொண்டிருக்கும் வீட்டில் ரகளையாக கடந்தது. முத்து, ஸ்ருதி மாற்றி மாற்றி விஜயாவுக்கு பல்ப் கொடுத்தனர். முத்து எப்படி மனதில் சரி... மேலும் பார்க்க

BB Tamil 8: அன்ஷிதா, பவித்ராவிடம் மல்லுகட்டும் மஞ்சரி, ஜாக்குலின் - சூடுபிடிக்கும் ஆட்டம்

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 74-வது நாளுக்கான முதல் புரோமோ வெளியாகி வருகிறது.இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் கடுமையான டாஸ்க் கொடுக்கப்பட்டிருக்கிறது. மற்றவர்கள் உதவியுடன் போட்டியாளர்கள் தங்களுக்குக் கொடுக்கப... மேலும் பார்க்க

BB Tamil 8: `நான் பண்ணது தப்புதான்...' - கண் கலங்கிய பவித்ரா - என்ன நடந்தது?

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 73-வது நாளுக்கான மூன்றாவது புரோமோ வெளியாகி வருகிறது.இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் கடுமையான டாஸ்க் கொடுக்கப்பட்டிருக்கிறது. மற்றவர்கள் உதவியுடன் போட்டியாளர்கள் தங்களுக்குக் கொடு... மேலும் பார்க்க

BB Tamil 8: `இதே EVP-ல 10 வருஷத்துக்கு முன்னால நூலிழையில பிழைச்சவன் என் மகன்’ - ராணவ் அப்பா சந்துரு

எழுபது நாட்களைக் கடந்து ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது பிக்பாஸ் சீசன் 8. பதினெட்டுப் போட்டியாளர்களுடன் தொடங்கிய நிகழ்ச்சியில், சில வாரங்களுக்குப் பின் வைல்டு கார்டு என்ட்ரி மூலம் ஆறு போட்டியாளர்கள் இணை... மேலும் பார்க்க

BB Tamil 8 Sachana: ``முத்துக்குமரன்தான் டைட்டில் வின்னர்''- அடித்துச் சொல்கிறார் சாச்சனா

கடந்த இரு வாரங்களாக பிக் பாஸ் வீட்டிலிருந்து டபுள் எவிக்‌ஷனாக இரண்டு நபர்கள் வெளியேறி இருக்கிறார்கள்.அதில் முதல் வார டபுள் எவிக்‌ஷனில் ஆனந்தியும் சாச்சனாவும் வெளியேறி இருந்தார்கள். சாச்சனா பிக் பாஸ் வ... மேலும் பார்க்க

BB Tamil 8: 'இந்த மாதிரி என்கிட்ட 'Attitude' காட்டாதிங்க செளந்தர்யா...'- கொதித்த முத்துக்குமரன்

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 73 -வது நாளுக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.பிக் பாஸ் வீட்டில் டாஸ்கின்போது ராணவிற்கு அடிப்பட்டு நேற்று மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்த... மேலும் பார்க்க