BB Tamil 8: `இதே EVP-ல 10 வருஷத்துக்கு முன்னால நூலிழையில பிழைச்சவன் என் மகன்’ - ராணவ் அப்பா சந்துரு
எழுபது நாட்களைக் கடந்து ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது பிக்பாஸ் சீசன் 8. பதினெட்டுப் போட்டியாளர்களுடன் தொடங்கிய நிகழ்ச்சியில், சில வாரங்களுக்குப் பின் வைல்டு கார்டு என்ட்ரி மூலம் ஆறு போட்டியாளர்கள் இணைந்தனர். ராணவ், மஞ்சரி, ரயான் உள்ளிட்ட இந்த ஆறு பேரில் சில தினங்களுக்கு முன் நடந்த டாஸ்க் ஒன்றில் ஜெஃப்ரி உடன் விளையாடியதில் ராணவ் கைகளில் காயம் ஏற்பட்டிருக்கிறது.
இந்தச் சூழலில் ராணவின் தந்தை கராத்தே சந்துருவிடம் பேசினோம்.
''எங்க முன்னோர்கள் பர்மாவுல இருந்தவங்க. அங்க இருந்து அகதிகளா எங்க மக்கள் இங்க வந்தப்ப ஶ்ரீவில்லிபுத்தூர் பக்கம் தஞ்சம் புகுந்துச்சு எங்க குடும்பம். பிறகு எங்க அப்பா சாக்கு வியாபாரத்துக்காக குடும்பத்தை சென்னைக்குக் கூட்டி வந்தார். கடுமையான உழைப்பாளி அவர். சென்னைக்கு வந்த பிறகுதான் ஓரளவு பொருளாதார வசதி வந்தது. எனக்கு ஆரம்பத்துல அரசியல் ஆர்வம் வர, காங்கிரஸ் கட்சியில சேர்ந்து வடசென்னை மாவட்ட செயலாளரா சில காலம் இருந்தேன். எனக்கு ரெண்டு பையன் ஒரு பொண்ணு. மூத்தவன்தான் ராணவ்.
சட்டம் படிக்க வச்சேன். ஆனா அவன் விருப்பம் என்னவோ சினிமாவாகத்தான் இருந்திச்சு. அதனால அவன் போக்குக்கு விட்டுட்டேன். கடுமையா முயற்சி செய்து சின்னச் சின்னக் கேரக்டர்கள்ல நடிச்சிட்டிருந்தான்.
முதன் முதலா ஹீரோவா நடிச்சிருக்கிற படம் இன்னும் ரெண்டு மாசத்துல வெளியாக இருக்கு. 'ஆனந்த தாண்டவம்', 'செல்லமே' படங்களை இயக்கிய காந்தி கிருஷ்ணா சார் டைரக்ஷன்.
'உனக்கு சரின்னு பட்டா போயிட்டு வாப்பா’
'ஹீரோவா நடிக்க இருக்கிற படம் ரிலீசாக இருக்கிற சூழல்ல பிக்பாஸ் போறது நல்லதா'னு கூட சிலர் கேட்டாங்க. 'உன் இஷ்டம் பா'னு சொல்லிட்டேன். ஏன்னா, அவன் ஒரு முடிவு எடுத்தான்னா சரியாகத்தான் இருக்கும். அவன் கஷ்டப்பட்டு சினிமாவுக்கு வந்தது மட்டுமில்லாம, என்னையும் சில படங்கள்ல தலை காட்ட வச்சதும் அவந்தான். அதனால 'உனக்கு சரின்னு பட்டா போயிட்டு வாப்பா'னு சொன்னேன்.
ஆனா அவன் உள்ள போன பிறகு வீட்டுல எல்லாரும் ஆர்வமா பிக்பாஸ் பார்க்கலாம்னு நினைச்சதுதான் தப்பாப் போச்சு. ஏன்னா, அந்த வீட்டுக்குள் சில சக போட்டியாளர்கள் மூலமா அவன் படற கஷ்டங்களைப் பார்க்குறப்ப ரொம்பவே கஷ்டமா இருக்கு. ஆரோக்கியமான விளையாட்டா எடுத்துக்காம சிலர் வன்மத்தைக் கக்குறாங்க. சில நாள் அந்த நிகழ்ச்சியை டிவியில பார்க்குற என் மனைவி அழுதுட்டு டிவியை ஆஃப் பண்ணிடுறாங்க.
மத்த நாள்லதான் இப்படின்னா வார இறுதி நிலைமை அதைவிட மோசமா இருக்கு. அவன் என்ன பேசினாலும் 'நீ உட்காரு'னு சொல்லிடுறார் விஜய் சேதுபதி. அவர் ஏன் அப்படி நடந்துக்கிடுறார்னு எங்களால புரிஞ்சுக்க முடியலை.
குடும்பப் பின்னணி அது இதுன்னு சொல்லி சில போட்டியாளர்கள்கிட்ட ரொம்ப அக்கறையா நடந்துக்கிடுறார்னு நினைக்கத் தோணுது. விளையாட்டுனு வந்துட்டா இதெல்லாம் பார்க்கக் கூடாதில்லையா? எல்லா போட்டியாளர்களையும் சமமா நடத்த வேண்டியதுதான் அவருடைய பொறுப்பு. ஆனா அவர் அப்படி நடந்துக்க மாட்டேங்குறார்.
`சுமார் பத்து வருஷங்களுக்கு முன்னாடி...’
ஒரு தொகுப்பாளரா விஜய் சேதுபதி தன்னுடைய வேலையைச் சரியா செய்திருந்தா இப்ப என் மகனுக்கு கையில அடிபட்டிருக்கே, இந்த விபத்தே நடந்திருக்காதுனு கூடச் சொல்வேன். ஜெஃப்ரியை அவர் சரியான நேரத்துக்குக் கண்டிக்காம விட்டதுதான் இந்த விபத்துக்கு காரணம்.
அன்னைக்கு அடிபட்டிருக்குனு ஃபோன் பண்ணிச் சொன்னாங்க. தகவலைக் கூட விவரமாச் சொல்லலை. அதனால என்னுடைய குடும்ப டாக்டரை பேச வச்சு விஷயத்தைக் கேட்டேன். அவர் பேசின பிறகுதான் அவங்க அம்மாவுக்கு நிம்மதி.
ஆனாலும் இப்ப வரைக்கும் எங்க வீட்டுல எல்லாருக்கும் படுத்தா சரியா தூக்கம் வர மாட்டேங்குது. ஏன்னா பிக்பாஸ் செட் இருக்கிற அந்த இடத்துல முன்னாடி தீம் பார்க் இருந்தப்ப குடும்பத்துடன் அங்க போயிருந்தோம். நான் சொல்றது சுமார் பத்து வருஷங்களுக்கு முன்னாடி. ராணவ் ஸ்கூல் படிச்சிட்டிருந்தான். அங்க ராட்டினத்துல ஏறி சுத்தறப்ப அது ஒரு மாதிரி சரிஞ்சு அன்னைக்கு நூலிழையில உயிர் தப்பிச்சான் என் மகன்.
உடனே தீம் பார்க் நிர்வாகத்துகிட்ட 'பாதுகாப்பு ஏற்பாடுகள் சரியில்லை; ராட்டினங்களின் நட்டுகள் எல்லாம் லூசா இருக்கு'னு புகார் சொன்னோம். அவங்க அதைக் கண்டுக்கலை. உடனே லோக்கல் போலீஸ்ல அன்னைக்கே புகார் தந்தேன். என் பையன் தப்பிச்சிட்டான். இனி யாருக்காச்சும் அசம்பாவிதம் நடந்துடக் கூடாதுனுதான் புகார் தந்தோம். ஆனா போலீஸ் எந்த நடவடிக்கையும் எடுக்கலை.
அதுல இருந்து சரியா மூணாவது நாள் பெரிய விபத்து நிகழ்ந்து வட மாநிலத்தைச் சேர்ந்த ஒரு பெண் உயிரை விட்டுட்டாங்க. அன்னைக்கோட அந்த தீம் பார்க்கை இழுத்து மூடிட்டாங்க.
என் மகன் பிக்பாஸ் போறப்பவே எனக்கு இந்த பழைய ஞாபகம் வந்து போச்சு. ஆனாலும் அவன் எப்பவுமே பாசிடிவான எண்ணங்களை உடையவங்கிறதால எந்த தீங்கும் அவனுக்கு நேராதுன்னு மனசைத் தேத்திகிட்டு அனுப்பி வச்சேன்.
இப்பக்கூட என்னைப் பொறுத்தவரை எந்த எதிர்பார்ப்பையும் வச்சுக்காம போயிட்டு வாப்பானுதான் சொன்னேன். இப்ப வரை அப்படிதான் நடந்திட்டிருக்கான். இது போதும் எங்களுக்கு'' என்கிறார்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...