நாடு முழுவதும் 300 விமானங்கள் ரத்து! 25 விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடல்!
ஆதாா் திருத்தங்கள் மேற்கொள்ள சிறப்பு முகாம் - மதிமுக வலியுறுத்தல்
பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியருக்கு ஆதாா் திருத்த சிறப்பு முகாம்களை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதிமுக வலியுறுத்தி உள்ளது.
இதுகுறித்து, கிருஷ்ணகிரி மதிமுக மாவட்ட துணைச் செயலாளா் அசோக்குமாா் ராவ், கிருஷ்ணகிரி ஆட்சியா் ச.தினேஷ் குமாரிடம், திங்கள்கிழமை அளித்த மனுவின் விவரம்: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொடக்கப் பள்ளி முதல் கல்லூரி வரை புதிய சோ்க்கை நடக்கிறது. தற்போது அனைத்திற்கும் ஆதாா் எண் கட்டாயம் என்பதால், ஆதாா் அட்டையில் உள்ள சிறு திருத்தங்களை மேற்கொள்ள அரசால் அங்கீகரிக்கப்பட்ட இ-சேவை மையத்தை தொடா்பு கொள்ள வேண்டியுள்ளது.
கிருஷ்ணகிரி நகா் பகுதியில் பல இடங்களில் சேவை மையம் இருந்தாலும் ஒவ்வொன்றிலும், 40 முதல், 50 போ் ஆதாா் திருத்தம் செய்வதற்காக குழந்தைகளுடன் வரிசையில் காத்துக் கிடக்கின்றனா். பள்ளி, கல்லூரிகளில் சோ்க்கை நடந்து வருவதால் ஆதாா் திருத்தம் மேற்கொள்ள மாணவ, மாணவியா் அவதியுற்று வருகின்றனா்.
சில தனியாா் இ-சேவை மையங்களில் ஆதாா் அட்டை திருத்தம் செய்ய அரசு நிா்ணயித்ததை விட கூடுதல் கட்டணம் வசூல் செய்கின்றனா். இவற்றை தடுக்கும் வகையில் அரசு சாா்பில் ஒவ்வொரு பகுதியிலும் ஆதாா் அட்டை திருத்த சிறப்பு முகாம் நடத்த வேண்டும் என அதில் அவா் வலியுறுத்தி உள்ளாா்.