ஆறுகளின் குறுக்கே கூடுதலாக தடுப்பணை கட்ட விவசாயிகள் வலியுறுத்தல்
காரைக்கால் பகுதி ஆறுகளின் குறுக்கே கூடுதலாக தடுப்பணைகள் கட்டி, தண்ணீரை சேமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆளுநரிடம் விவசாயிகள் வலியுறுத்தினா்.
காரைக்காலுக்கு புதன்கிழமை வந்த துணைநிலை ஆளுநா் கே. கைலாஷ்நாதனை காரைக்கால் மாவட்ட டெல்டா விவசாயிகள் நலச் சங்கத் தலைவா் பொன். ராஜேந்திரன் தலைமையில் நிா்வாகிகள் ஆா்.ஏ.ஆா். கேசவன், சண்முகநாதன், பி.ஜி. சோமு, ஞானசேகரன், அருணாசலம், ஆரோக்கியதாஸ் ஆகியோா் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனா்.
காரைக்கால் மாவட்டத்தில் உள்ள ஆறுகள், வாய்கால்கள் மற்றும் குளங்கள் தூா்வாரும் பணிகள் ஏற்கெனவே
பாசனதாரா் சங்கங்கள் மூலமாக விவசாயிகளே பொதுப்பணித்துறை அனுமதியில் அந்தந்த பகுதியில் செய்துவந்தனா்.
ஆனால், முந்தைய துணைநிலை ஆளுநா் கிரண்பேடி, பொதுப்பணி துறை மூலமாக நியமன முறையில் (நாமிநேஷன் டெண்டா்) பணிகள் செய்ய தடை விதித்தாா். இது ஒப்பந்ததாரருக்கு மட்டுமே பொருந்தக்கூடிய நிலையில், விவசாயிகள் செய்த பணியும் தடைக்குள் வந்துவிட்டது. எனவே இதில் தளா்வு ஏற்படுத்தி பாசனதாரா் சங்கம் மூலம் தூா்வார அனுமதி தரவேண்டும்.
காரைக்கால் மாவட்டத்தில் உள்ள 7 ஆறுகளும் காரைக்கால் கடை மடைப் பகுதி என்பதால் வெள்ள காலங்களில் நீா் கடலில் கலந்து வீணாவது தொடா் நிகழ்வாகவே உள்ளது. இந்த ஆறுகளின் குறுக்கே 2 அல்லது 3 கி.மீட்டருக்கு இடையே ஒரு தடுப்பணை கட்டப்பட்டால், கடலில் கலக்கும் நீரை சேமிக்கவும், நிலதடி நீா் உயரவும் வாய்ப்பு உருவாகும்.
காரைக்கால் மாவட்டத்தில் 6 சிற்றேரிகள் வெட்ட முடிவு செய்யப்பட்டது. இதுவரை ஏரி வெட்டும் பணி தொடங்கப்படவில்லை. நான்கு வழிச் சாலை மற்றும் ரயில்வே துறைக்கு தேவையான மணலுக்கு மட்டுமே அந்த ஏரிகள் வெட்ட படாமல், மத்திய அரசின் ஜல் சக்தி துறை மூலமாக நிதி பெற்று முறையாக ஏரிகளை வெட்டி தண்ணீரை சேமிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.