கருணை, முற்போக்கு சிந்தனையுடன் திகழ்ந்தவர்! போப் பிரான்சிஸ் மறைவுக்கு முதல்வர் இ...
`ஆளுநர் தலைமையில் துணை வேந்தர்கள் மாநாடு; ஜெகதீப் தன்கர் பங்கேற்பு' - மீண்டும் வெடிக்கும் சர்ச்சை
தமிழ்நாட்டில் சென்னை ராஜ்பவனுக்கு அடுத்தபடியாக ஆளுநருக்கான அதிகாரப்பூர்வ மாளிகையை நீலகிரி மாவட்டம் ஊட்டியில் அமைத்துள்ளனர். ஆளுநர்களின் ஒய்வு மட்டுமின்றி அலுவலக பணிகள், முக்கிய ஆலோசனை கூட்டங்களும் ஊட்டி ராஜ்பவனில் நடைபெறும்.
தமிழ்நாட்டில் இயங்கி வரும் மத்திய, மாநில அரசு பல்கலைக்கழங்கள் மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களுக்கான மாநாடு ஆளுநரும் பல்கலைக்கழகங்களின் வேந்தருமான கவர்னர் தலைமையில் ஒவ்வொரு ஆண்டும் ஊட்டி ராஜ்பவனில் நடைபெறுவது வழக்கம்.
ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் கடந்த மூன்று ஆண்டுகளாக ஊட்டி ராஜ்பவனில் துணை வேந்தர்கள் மாநாடு நடைபெற்றது. கவர்னருக்கு பதிலாக தமிழ்நாட்டின் முதல்வரே பல்கலைக்கழகங்களின் வேந்தராக இனி பதவி வகிக்கலாம் என உச்சநீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது.
இந்த உத்தரவின் அடிப்படையில் முதலமைச்சர் ஸ்டாலின் பல்கலைக்கழகங்களின் வேந்தராக அறிவிக்கப்பட்டு, துணை வேந்தர்கள் உடனான ஆலோசனை கூட்டத்தையும் அண்மையில் நடத்தினார்.
உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை தமிழ்நாடு அரசு கொண்டாடி வந்த நிலையில் நிலையில், துணைவேந்தர்களுக்கான நியமன அதிகாரம் மட்டுமே முதலமைச்சருக்கு இருப்பதாகவும், கவர்னரே வேந்தராக தொடர்கிறார் என்றும், ஏப்ரல் 25, 26 ஆகிய தேதிகளில் ஊட்டியில் உள்ள ராஜ்பவனில் துணைவேந்தர்களுக்கான மாநாடு கவர்னர் தலைமையில் நடைபெறும். சிறப்பு விருந்தினராக குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் பங்கேற்க இருப்பதாகவும் ஆளுநர் மாளிகை தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.

இதனிடையே டெல்லி சென்ற ஆளுநர் ரவி, குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கரை சந்தித்து இந்த மாநாட்டில் பங்கேற்க அழைப்பு விடுத்திருக்கிறார். ஆளுநர் ரவி வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ஜெகதீப் தன்கர் கடுமையாக விமர்சித்திருந்தார்.
குடியரசுத் தலைவர் சட்டத்திருத்தங்களுக்கு ஒப்புதல் அளிக்க காலக்கெடு விதிக்க கூடாது என ஜெகதீப் தன்கர் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். ஜெகதீப் தன்கர் விமர்சனத்துக்கு திமுக சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்ட்டது. இந்த நேரத்தில் குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் தமிழ்நாடு பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது.

உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு துணை வேந்தர்கள் மாநாட்டை நடத்த ஆளுநர் ரவிக்கு அதிகாரம் இல்லை என இதற்கு திமுக உள்ளிட்ட சில அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஆளுநர் ரவி நடத்தும் இந்த மாநாட்டால் மீண்டும் தமிழக அரசுக்கும், ஆளுநருக்கும் மோதல் ஏற்பட்டிருக்கிறது.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
