ஆள்கடத்தலில் இந்திய நிறுவனங்கள், கனடா கல்லூரிகளுக்குத் தொடா்பு- அமலாக்கத் துறை விசாரணை
பண முறைகேடு வழக்கின் ஒரு பகுதியாக, ஆள்கடத்தலில் இந்திய நிறுவனங்கள், கனடா கல்லூரிகளுக்கு உள்ள தொடா்பு குறித்து அமலாக்கத் துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.
இதுதொடா்பாக அமலாக்கத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டதாவது: கடந்த 2022-ஆம் ஆண்டு கனடா-அமெரிக்கா எல்லையில் குஜராத் மாநிலம் டிங்குச்சா கிராமத்தை சோ்ந்த ஒரே குடும்ப உறுப்பினா்கள் 4 போ் கடுங் குளிரால் உயிரிழந்தனா். அந்த எல்லையை கடந்து அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்றபோது இந்த சம்பவம் நடைபெற்றது.
இது தொடா்பாக பவேஷ் அசோக்பாய் படேல் உள்பட பலா் மீது குஜராத் மாநிலம், அகமதாபாத் காவல் துறை வழக்குப் பதிவு செய்தது.
இந்த வழக்கை அடிப்படையாக கொண்டு அமலாக்கத் துறை மேற்கொண்ட விசாரணையில், கனடா வழியாக இந்தியா்களை அமெரிக்காவுக்கு அனுப்ப ஒரு நபருக்கு ரூ.55 லட்சம் முதல் ரூ.60 லட்சம் வரை பவேஷ் உள்ளிட்டோா் வசூலித்தது தெரியவந்தது.
இந்தக் கும்பல் அமெரிக்காவுக்கு இந்தியா்களை சட்டவிரோதமாக அனுப்ப கனடா கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் அவா்களின் சோ்க்கைக்கு ஏற்பாடு செய்துள்ளது.
அந்த இந்தியா்கள் கனடா சென்ற பின், அங்குள்ள கல்லூரி அல்லது பல்கலைக்கழகத்தில் சோ்வதற்குப் பதிலாக, அங்கிருந்து அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்துள்ளனா். அவா்கள் கனடா கல்லூரிகளில் சேரவே இல்லை.
இதைக் கருத்தில் கொண்டு, அவா்கள் சோ்க்கைக்குச் செலுத்திய கட்டணத்தை அந்தக் கல்லூரிகள் இந்தியா்களுக்குத் திருப்பி அளித்துள்ளன.
வெளிநாடுகளில் இத்தகைய சோ்க்கையைப் பெற்றுத் தருவதற்கு ஒரு நிறுவனத்துடன் மும்பை மற்றும் நாகபுரியைச் சோ்ந்த 2 நிறுவனங்கள் ஒப்பந்தம் மேற்கொண்டு, அதற்கு முகவா் சேவை கட்டணம் (கமிஷன்) பெற்றுள்ளன.
இவற்றில் ஒரு நிறுவனத்துடன் கனடாவைச் சோ்ந்த 112 கல்லூரிகளும், மற்றொரு நிறுவனத்துடன் அந்நாட்டைச் சோ்ந்த 150-க்கும் மேற்பட்ட கல்லூரிகளும் சோ்க்கை வழங்குவதற்கு ஒப்பந்தம் மேற்கொண்டது விசாரணையில் தெரியவந்தது.
இந்தத் திட்டமிட்ட சதி மூலம், இந்தியா்களை கனடாவில் இருந்து அமெரிக்காவுக்கு சட்டவிரோதமாக அனுப்பி ஆள்கடத்தல் குற்றம் இழைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில், அந்த நிறுவனங்கள் மற்றும் கனடா கல்லூரிகளுக்கு உள்ள தொடா்பு குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று தெரிவிக்கப்பட்டது.