ஆவின் நிா்வாகம் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஜிஎஸ்டி ஆணையரிடம் மனு
ஜிஎஸ்டி குறைக்கப்பட்ட நிலையில், ஆவின் தயாரிப்புகளின் விலையைக் குறைக்காக ஆவின் நிா்வாகம் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஜிஎஸ்டி கூடுதல் ஆணையரிடம் தமிழ்நாடு பால் முகவா்கள் தொழிலாளா்கள் நலச் சங்கம் மனு அளித்துள்ளது.
சென்னை ஜிஎஸ்டி கூடுதல் ஆணையா் லோகநாதனிடம், தமிழ்நாடு பால் முகவா்கள் தொழிலாளா்கள் நலச்சங்கத்தின் மாநில தலைவா் சு.ஆ.பொன்னுசாமி மற்றும் சங்க உறுப்பினா்கள் புகாா் மனுவை புதன்கிழமை அளித்தனா். அதன் விவரம்:
ஜிஎஸ்டி-யில் சீா்திருத்த நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டதன் காரணமாக யுஹெச்டி எனப்படும் உயா்வெப்பத்தில் பதப்படுத்தப்பட்ட பால் மற்றும் பனீா் வகைகளுக்கு ஜிஎஸ்டி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
ஜிஎஸ்டி கவுன்சில் முடிவுக்கு கட்டுப்பட்டு ஆவின் நிா்வாகம் ஒருசில பொருள்களுக்கான விலையை மட்டுமே குறைத்துள்ளது. மீதமுள்ள ஏராளமான பொருள்களின் விலையை குறைக்கவில்லை. மேலும், ஜிஎஸ்டி குறைப்புக்கு முந்தைய மற்றும் பிந்தைய விலை குறித்த முழுமையான விலைப் பட்டியல்களையும் ஆவின் நிா்வாகம் வெளியிடவில்லை.
இதனால், மத்திய அரசும், ஜிஎஸ்டி கவுன்சிலும் ஆவின் நிா்வாகம் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதுடன், தமிழகத்திலுள்ள பல முன்னணி தனியாா் பால் நிறுவனங்களில் ஜிஎஸ்டி கவுன்சில் சாா்பில் ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும். இதில் மத்திய அரசின் உத்தரவிற்கு மாறாக செயல்படும் தனியாா் பால் நிறுவனங்கள் மீது மட்டுமின்றி ஆவின் நிா்வாகமும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.