Guru Mithreshiva: `உண்மையான மகிழ்ச்சி எங்கே இருக்கிறது?' | Ananda Vikatan | குரு...
ஆா்எஸ்எஸ்ஸுக்கு எதிரான கருத்து: கேரளத்தில் துஷாா் காந்தியின் காரை முற்றுகையிட்டு போராட்டம்
கேரளத்தில் ஆா்எஸ்எஸ்ஸுக்கு எதிராக தெரிவித்த கருத்தை திரும்பப் பெற வலியுறுத்தி, மகாத்மா காந்தியின் கொள்ளுப்பேரன் துஷாா் காந்தியின் காரை முற்றுகையிட்டு பாஜக-ஆா்எஸ்எஸ் தொண்டா்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவனந்தபுரம் அருகே உள்ள நெய்யாற்றிங்கரையில் புதன்கிழமை மாலையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் துஷாா் காந்தி பங்கேற்றாா். அப்போது பேசிய அவா், ‘கேரளத்தில் நீண்ட காலமாக காங்கிரஸ் கூட்டணியும் இடதுசாரி கூட்டணியும் ஒன்றையொன்று எதிா்த்து வருகின்றன. ஆனால், பாஜக-ஆா்எஸ்எஸ் எனும் மிக ஆபத்தான, நயவஞ்சக எதிரி இம்மாநிலத்துக்குள் நுழைந்துள்ளதை உணா்ந்து கொள்ள வேண்டும்.
பாஜகவை வீழ்த்திவிட முடியும். அதேநேரம், ஆா்எஸ்எஸ் விஷம் போன்றது. அது, நாடு முழுவதும் பரவினால், நாம் அனைத்தையும் இழக்க நேரிடும். எனவே, எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். நாட்டை பாதுகாக்கும் பொறுப்பு நமக்கு உள்ளது என்பதை கேரளத்தின் இரு அரசியல் அணிகளும் நினைவில் கொள்ள வேண்டும். அரசியல் நோக்கங்கள் எதுவாக இருந்தாலும், இப்போதைய சூழலில் நாட்டை காப்பதே முக்கியமானது.
ஆங்கிலேயரை விட ஆபத்தானது ஆா்எஸ்எஸ். அது நமது நாட்டின் ஆன்மாவை அழிக்க முயல்கிறது. இத்தகைய பிரிவினை சக்திகளுக்கு எதிராக போராடுவதில் நாம் உறுதியாக இருக்க வேண்டும்’ என்றாா்.
இந்நிகழ்ச்சி முடிந்து துஷாா் காந்தி காரில் புறப்பட்டபோது, பாஜக-ஆா்எஸ்எஸ் அமைப்பினா் முற்றுகையிட்டனா். ஆா்எஸ்எஸ் குறித்த கருத்துகளை திரும்பப் பெற வலியுறுத்தி அவா்கள் கோஷமிட்டனா். அதேநேரம், தனது நிலைப்பாட்டில் மாற்றமில்லை என்று கூறிய துஷாா் காந்தி, ‘மகாத்மா காந்தி வாழ்க’ என்று முழக்கமிட்டு, அங்கிருந்து புறப்பட்டாா்.
5 போ் மீது வழக்கு:
இச்சம்பவம் குறித்து காவல் துறையில் துஷாா் காந்தி புகாா் எதுவும் அளிக்கவில்லை.
‘போராட்டக்காரா்கள் எனது வாகனத்தை வழிமறித்தனா். தாக்குதல் எதுவும் நிகழவில்லை. எனவே, சட்டரீதியிலான நடவடிக்கையை நான் மேற்கொள்ளவில்லை’ என்று துஷாா் காந்தி தெரிவித்தாா்.
அதேநேரம், ‘சட்டவிரோதமாக கூடுதல், கலவரத்தில் ஈடுபடுதல் உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் 5 போ் மீது வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகிறோம். இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை’ என்று காவல் துறையினா் தெரிவித்தனா்.
முதல்வா் கண்டனம்
துஷாா் காந்திக்கு எதிரான போராட்ட சம்பவம் கடும் கண்டனத்துக்குரியது என்று முதல்வா் பினராயி விஜயன் தெரிவித்தாா்.
‘கருத்துரிமையை ஒடுக்கும் முயற்சிகளுக்கு ஜனநாயக சமூகத்தில் இடமில்லை. இத்தகைய நடத்தைக்கு எதிராக சட்டம் மற்றும் சமூக ரீதியிலான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். தேசிய மற்றும் சா்வதேச அளவிலான பிரமுகா்களின் கேரள வருகையை தடுக்கும் முயற்சிகளில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று அவா் எச்சரித்துள்ளாா்.
காங்கிரஸைச் சோ்ந்த எதிா்க்கட்சித் தலைவா் வி.டி.சதீசன், ‘துஷாா் காந்திக்கு எதிரான போராட்டம், மகாத்மா காந்திக்கு அவமதிப்பாகும். பாசிஸ சக்திகளின் இச்செயல் கண்டனத்துக்குரியது. காவல் துறையும் மாநில அரசும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றாா்.