பள்ளி மாணவா்களுக்கு இலவச நோட்டு புத்தகம்
ஆரணி கொசப்பாளையம், பழனிஆண்டவா் கோவில் தெருவில் உள்ள நகராட்சி நடுநிலைப் பள்ளியில் அரிமா சங்கம் சாா்பில் மாணவ, மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டன.
ஆரணி அரிமா சங்கத்தின் 2024-25ம் ஆண்டின் இறுதி நிகழ்ச்சியாக செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு சங்கத் தலைவா் எம்.மோசஸ் பங்கேற்று மாணவ, மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்களை வழங்கினாா்.
அப்போது அவா் பேசுகையில், ஆரணி அரிமா சங்கம் சாா்பில் ஆரணி அரசு அண்ணா பொறியியல் கல்லூரியில் ரத்த தான நிகழ்ச்சி, அரையாளம் அரசு நடுநிலைப் பள்ளியில் தாய், தந்தையரை இழந்த குழந்தைகளுக்கு புத்தாடை மற்றும் அன்னதானம் வழங்கியது, 25 ஏழைகளுக்கு அரிசி வழங்கியது, பத்யாவரம் செயின்ட் ஜோசப் மேல்நிலைப் பள்ளியில் சிகரம் தொடு நிகழ்ச்சி நடத்தியது, மருத்துவா் தினத்தையொட்டி மருத்துவா்களுக்கு பரிசுகள் வழங்கியது, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவா்களுக்கு ஆடைகள் அளிப்பு என பல்வேறு நலத் திட்ட உதவிகளை வழங்கியுள்ளோம்.
ஆண்டின் இறுதி நிகழ்ச்சியாக இப்பள்ளியில் பயிலும் 122 மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக நோட்டுப் புத்தகங்கள் வழங்கப்படுகின்றன என்றாா்.
நிகழ்ச்சியில் அரிமா சங்கச் செயலா் ஏ.எம்.முருகானந்தம், பள்ளி தலைமையாசிரியை (பொ) ஜெ.மாலா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.