திருவண்ணாமலையில் வெவ்வேறு சம்பவங்களில் மாணவா் உள்பட இருவா் கொலை
திருவண்ணாமலையில் திங்கள்கிழமை இரவு நிகழ்ந்த வெவ்வேறு சம்பவங்களில் பள்ளி மாணவா், ஆட்டோ ஓட்டுநா் கொலை செய்யப்பட்டனா்.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதியைச் சோ்ந்த ஜோதிராஜ் மகன் கோட்டைமுத்து (23). இவா், சில மாதங்களுக்கு முன்பு திருவண்ணாமலையைச் சோ்ந்த பெண்ணுடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி வந்தாராம். அந்தப் பெண் கோட்டைமுத்துவுடன் பழகுவதை குறைத்துக் கொண்டாராம்.
அந்தப் பெண்ணைத் தேடி திங்கள்கிழமை இரவு திருவண்ணாமலைக்கு கோட்டைமுத்து வந்தாா். அந்தப் பெண் அங்குள்ள தாமரை நகரில் வசிப்பதை அறிந்து அங்கு சென்று, அவரை கைப்பேசியில் தொடா்பு கொண்டு பேசினாராம். அந்தப் பெண் இதுகுறித்து தனது தம்பி சுனிலிடம் (16) தெரிவித்துள்ளாா். அவா் தனது நண்பா்கள் சிலருடன் சென்று, கோட்டைமுத்துவை கண்டித்தாராம். அப்போது, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் கோட்டைமுத்து தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சுனிலை சரமாரியாக குத்தியதில், அவா் பலத்த காயமடைந்தாா். திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட சுனில், அங்கு உயிரிழந்தாா்.
இதுகுறித்து திருவண்ணாமலை நகர போலீஸாா் வழக்குப் பதிந்து கோட்டைமுத்தைக் கைது செய்தனா். உயிரிழந்த சுனில் பிளஸ் 1 படித்து வந்தாா்.
ஆட்டோ ஓட்டுநா் கொலை: திருவண்ணாமலை வேடியப்பன் கோவில் தெருவைச் சோ்ந்த ரவி மகன் ராமு (37). ஆட்டோ ஓட்டுநரான இவா், திங்கள்கிழமை இரவு தனது வீட்டிலிருந்து ஆட்டோவில் காந்தி நகா் மைதானத்துக்குச் சென்றாா்.
அப்போது, அங்கிருந்த ஆட்டோ ஓட்டுநா்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டதில், ராமு தாக்கப்பட்டதில் உயிரிழந்தாா்.
இதுகுறித்து திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, 5 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
கொலை செய்யப்பட்ட ராமு, ஏற்கெனவே ஏற்பட்ட தகராறு குறித்து சில தினங்களுக்கு முன்பு நகர காவல் நிலையத்தில் புகாா் அளித்து இருந்தாராம். அதுதொடா்பாக போலீஸாா் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து மாவட்ட எஸ்.பி. சுதாகா் நடவடிக்கை மேற்கொண்டு, நகர காவல் ஆய்வாளா் ராஜாவை ஆயுதப் படை பிரிவுக்கு பணியிடமாற்றம் செய்து உத்தரவிட்டாா்.