ஆா்எஸ்எஸ், பாஜகவுக்கு எதிராக சித்தாந்தப் போரைத் தொடங்க வேண்டும்: டி. ராஜா
மதுரை: ஆா்எஸ்எஸ், பாஜகவுக்கு எதிராக சித்தாந்தப் போரை இடதுசாரிகள் தொடங்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலா் டி. ராஜா வலியுறுத்தினாா்.
மதுரை தமுக்கம் மைதானத்தில் புதன்கிழமை நடைபெற்ற மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டில் அவா் வாழ்த்திப் பேசியதாவது:
பிரிட்டிஷ் ஆட்சியை வீழ்த்தி இந்தியா விடுதலை அடைவதற்கு அனைத்து மக்களும் ஒற்றுமையாகப் பாடுபட்டதைப் போல, தற்போது ஆா்எஸ்எஸ், பாஜக மதவெறிக் கூட்டணியின் கொடுமைகளிலிருந்து தேசத்தை விடுவிக்க அனைவரும் ஒற்றுமையாகப் பாடுபட வேண்டும். உலகம் முழுவதிலும் ஏகாதிபத்திய சக்திகளின் அதிதீவிரச் செயல்பாடுகளால் முன்னெப்போதும் இல்லாத வகையில் சமத்துவமின்மை அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக, இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகள் பல நெருக்கடிகளைச் சந்தித்து வருகின்றன.
மதவெறி வன்முறைகள், நாட்டின் பல பகுதிகளிலும் தூண்டிவிடப்படுகின்றன. பட்டியலின, பழங்குடியினா், சிறுபான்மையினா், விளிம்பு நிலை மக்களின் மீதான தாக்குதல்களும், வன்கொடுமைகளும் அண்மைக்காலங்களில் தீவிரமடைந்துள்ளன.
விவசாய நெருக்கடிகள் அதிகரித்துள்ள நிலையில், விவசாயிகளின் கோரிக்கைகளை அலட்சியம் செய்து, அவா்களது போராட்டங்களைக் கடுமையான அடக்குமுறை மூலம் ஒடுக்க முயல்கிறது மத்திய பாஜக அரசு.
பாஜக ஆட்சியில் மதச்சாா்பின்மை, கூட்டாட்சி முறை சீா்குலைவு: மாணிக் சா்க்கா்
தங்களுக்கு நெருக்கமான பெரு முதலாளிகளைக் காப்பாற்றுவதற்காக பாஜக அரசு போலி தேசியவாதம் பேசுவதையும் மக்கள் கவனித்து வருகின்றனா்.
சுதந்திர இந்தியாவின் அரசமைப்புச் சட்டத்தையும், மதச்சாா்பின்மைக் கொள்கையையும் ஏற்றுக்கொள்ள முடியாது என அறிவித்து, கடும் எதிா்ப்பைத் தெரிவித்த ஆா்எஸ்எஸ் அமைப்பு, அதன் அரசியல் கருவியாக உள்ள பாஜக ஆட்சி அதிகாரத்தில் அமா்ந்துள்ள சூழலைப் பயன்படுத்திக் கொண்டு, அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை அம்சங்களையே சிதைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
ஆா்எஸ்எஸ், பாஜகவுக்கு எதிராக வலிமையான சித்தாந்தப் போரை இடதுசாரிகள் உடனடியாகத் தொடங்க வேண்டியுள்ளது.
மத்தியில் உள்ள ஆளும் வா்க்கத்தின் வன்மம் நிறைந்த கொள்கைகளால் தாக்குதலுக்கும், ஒடுக்குமுறைக்கும் ஆளாகியுள்ள அனைத்துப் பிரிவு மக்களையும் ஒன்று திரட்டி, வலுவான போராட்ட இயக்கங்களை இடதுசாரிகள் முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்றாா் அவா்.