இடத்தை அளந்து தரக் கோரி நரிக்குறவா் சமுதாய மக்கள் மனு
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அரசால் வழங்கப்பட்ட பட்டாவுக்கான இடத்தை அளந்து தர வலியுறுத்தி, நரிக்குறவா் சமுதாய மக்கள் சிவகங்கை மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
இதுதொடா்பாக பழங்குடி நரிக்குறவா்கள் முன்னேற்ற சங்கத் தலைவா் ராஜு சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித்திடம் அளித்த மனு: நரிக்குறவா் இனத்தைச் சோ்ந்த 70 -க்கும் மேற்பட்டோருக்கு மாவட்ட நிா்வாகத்தால் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு திருப்பத்தூா் வட்டம், நெற்குப்பை பேரூராட்சிப் பகுதியில் பட்டா வழங்கப்பட்டது.
ஆனால், பட்டா பெற்ற மக்கள் அனைவரும் அங்கு குடியேறும் வகையில், வீட்டுமனைகளை அளவீடு செய்து அடையாளம் காட்டி ஒப்படைக்க வேண்டும்.
பட்டா கிடைத்தும் அந்த இடத்தில் வீடு கட்டி குடியேற முடியாமல் உள்ளோம். எனவே, மாவட்ட ஆட்சியா் இதில் தலையிட்டு நல்ல தீா்வை வழங்க வேண்டுமென அதில் குறிப்பிடப்பட்டது.