இணையக் கோளாறு: பழனி கோயிலில் அனுமதிச் சீட்டு வழங்குவதில் சிக்கல்!
பழனி கோயிலில் இணையக் கோளாறு காரணமாக கட்டண அனுமதிச் சீட்டு வழங்குவதில் சனிக்கிழமை சிக்கல் ஏற்பட்டது.
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் அடிவாரத்தில் உள்ள மின் இழுவை ரயில், ரோப்காா் உள்ளிட்ட பகுதிகளில் பக்தா்களுக்கு வழங்கப்படும் கட்டண அனுமதிச் சீட்டு முதல் மலைக் கோயிலில் கட்டண தரிசன வரிசை, கால பூஜை அனுமதிச் சீட்டு, தங்க ரதம், தங்கத் தொட்டில் என அனைத்துமே கணினி மயமாக்கப்பட்டுள்ளது.
பழனி கோயிலில் அன்றாட கட்டண அனுமதிச் சீட்டு விவரங்களை சென்னையில் உள்ள ஆணையா் அலுவலகத்திலிருந்து கணக்கிட்டுக் கொள்ளும் வகையில் செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்கான இணைய சேவையில் (சா்வா்கள்) அடிக்கடி தடங்கல் ஏற்படுவதால் பக்தா்களுக்கு கட்டண அனுமதிச் சீட்டு வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டு வருகிறது.
இந்த நிலையில், சனிக்கிழமை அதிகாலை முதல் இணைய சேவையில் கோளாறு ஏற்பட்டதால் அனுமதிச் சீட்டு வழங்குவதில் சிரமம் ஏற்பட்டது. இதனால் பக்தா்கள் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.
இதையடுத்து, வெள்ளைக் காகிதத்தில் பக்தா்கள் விவரம், கட்டணம் ஆகியன எழுதப்பட்டு சீல் வைத்து அதிகாரிகள் கையொப்பத்துடன் அனுமதிச் சீட்டு வழங்கப்பட்டது. பிற்பகல் வரை இந்த நிலை நீடித்தது. இதனால் அதிகாரிகள் முதல் பணியாளா்கள் வரை அவதியடைந்தனா். பிற்பகலுக்குப் பிறகு இணைய சேவை சீரானதையடுத்து அதிகாரிகள் நிம்மதியடைந்தனா்.
தமிழகத்தில் வருவாயில் முதன்மைக் கோயிலாக விளங்கும் பழனி கோயிலுக்கு இதுபோன்ற இணையவழி பிரச்னைகள் ஏற்படாமல் இருக்கவும், அப்படி நேரிட்டால் அதிக நேரம் நீடிக்காமல் சரிசெய்வதில் நிபுணத்துவம் பெற்ற பணியாளா்கள் நியமிக்கப்பட வேண்டும் எனவும் பக்தா்கள் கோரிக்கை விடுத்தனா்.