இணையவழி மோசடி: 135 வழக்குகளில் தொடர்புடைய இளைஞர் கைது
நாடு முழுவதும் இணையவழியில் பல கோடி ரூபாய் மோசடி செய்த 135 வழக்குகளில் தொடர்புடைய இளைஞரை ஆவடி இணையவழி குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர்.
சென்னையை அடுத்த திருவேற்காடு, வேலப்பன்சாவடி பகுதியைச் சேர்ந்தவர் மேரி ஜெனட் டெய்சி (62). ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியை. கடந்த ஜூலை மாதம் இவரது கைப்பேசிக்கு மும்பை இணையவழி குற்றப்பிரிவு போலீஸார் பேசுவதாக தொடர்பு கொண்டு, வங்கிக் கணக்கு விவரங்களைக் கேட்டுள்ளனர்.
அவரை வற்புறுத்தி, அவரது வங்கி கணக்கில் உள்ள பணத்தை அவர்கள் தெரிவித்த வங்கி கணக்குகளுக்கு அனுப்பக் கூறியுள்ளனர்.
இதையடுத்து மேரி ஜெனட் டெய்சி அவர்கள் தெரிவித்த வங்கி கணக்குகளுக்கு ரூ.38 லட்சத்தை மாற்றியுள்ளார். ஆனால், அதன்பிறகு அவருக்கு எத்தகவலும் வரவில்லை.
தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து மேரி ஜெனட் டெய்சி, ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், ஆவடி இணையவழி குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் பிரவீன்குமார் தலைமையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்த வழக்கில் தொடர்பாக சென்னை அண்ணா நகர், ஹெச் பிளாக், பொன்னி காலனி பகுதியைச் சேர்ந்த பிஜாய் (33) என்பவரை செவ்வாய்க்கிழமை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தினர்.
இதில், அவர் 13 வங்கி கணக்குகளைத் தொடங்கி சிபிஐ, அமலாக்கத் துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் எனக் கூறி, பல பேரிடம் பல கோடி பணத்தை மோசடி செய்துள்ளதும், இவர் மீது நாடு முழுவதும் 135 மோசடி வழக்குகளில் தொடர்பிருப்பதும் தெரிய வந்தது.
அவரிடம் இருந்து கைப்பேசி, மடிக்கணினி, காசோலை, கிரிடிட் கார்டு உள்ளிட்டவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து, பிஜாயை பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, புதன்கிழமை புழல் சிறையில் அடைத்தனர்.