`இந்திக்கு அல்ல இந்தி திணிப்புக்கு தமிழ்நாட்டில் ஒருபோதும் இடம் இருக்காது' - திருமாவளவன் பேசியதென்ன?
இந்தி திணிப்பு குறித்து விசிக தலைவர் தொல். திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார்.
இந்தி திணிப்பு என்பது ஒரு திட்டமிட்ட அரசியல் நடவடிக்கை. இந்தியாவை 'ஒரே நாடு', 'ஒரே மொழி' என்கிற அடிப்படையில் மாற்ற வேண்டும் என்பதற்கான முயற்சி நீண்டகாலமாக நடைபெற்று வருகிறது. இந்தி ஒரு சில மாநிலங்களில்தான் பேசப்படுகிறது. இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் தேசிய மொழியாக, அலுவலக மொழியாக இந்தி மாற வேண்டும் என்பது அவர்களின் செயல்திட்டமாக இருக்கிறது. இந்தி ஒரு பிராந்திய மொழிதான். அதை மறந்துவிட்டு பேசுகிறார்கள்.

இந்தியை மற்ற மொழி பேசுபவர்கள் மீது திணிக்கிறார்கள். இது அரசியலமைப்பு சட்டத்திற்கும் ஜனநாயகத்திற்கும் எதிரானது. மும்மொழி கொள்கையை பொறுத்தவரை அதில் இந்தி பிரதானம் இல்லை என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியிருக்கிறார். ஆனால் நடைமுறையிலே மூன்றாவது மொழி இந்தி என்றுதான் மத்திய அரசு நடந்துகின்ற கல்வி நிறுவனங்களில் இருக்கிறது.
மாநில அரசு நடத்துகிற நிறுவனங்களிலும் அதை கொண்டு வர வேண்டும் என்பதுதான் அவர்களின் நோக்கமாக இருக்கிறது. இந்தி பேசக்கூடியவர்கள் இரண்டு மொழியைதான் கற்கிறார்கள். ஒன்று இந்தி மற்றொன்று ஆங்கிலம். ஆனால் மற்ற மொழி பேசிக்கூடியவர்கள் தாய் மொழி, ஆங்கிலம் ஆகியவற்றுடன் இந்தியையும் சேர்ந்து கற்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்.

பாஜக அரசு 'ஒரே தேசம்', 'ஒரே மொழி' என்பதை உருவாக்க பார்க்கிறார்கள். இந்திக்கு அல்ல இந்தி திணிப்புக்கு தமிழ்நாட்டில் ஒரு போதும் இடம் இருக்காது என அழுத்தமாக சொல்ல கடமைப்பட்டிருக்கிறோம்" என்று பேசியிருக்கிறார்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
