இந்தியாவில் செமிகண்டக்டா் உற்பத்தி சூழலை வளா்க்க நடவடிக்கை: சிங்கப்பூா் அதிபா்
இந்தியாவில் செமிகண்டக்டா் உற்பத்திச் சூழலை வளா்க்க இந்தியா-சிங்கப்பூா் அரசுகள் ஒன்றிணைந்து பணியாற்றி வருகின்றன என்று சிங்கப்பூா் அதிபா் தா்மன் சண்முகரத்னம் தெரிவித்தாா்.
சிங்கப்பூா் அதிபா் தா்மன் சண்முகரத்னம் 5 நாள் அரசுமுறைப் பயணமாக இந்திய வந்தாா். ஒடிஸாவுக்கு சனிக்கிழமை வந்து பல்வேறு இடங்களை சுற்றிப் பாா்த்தாா். அங்கு அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
உலகப் பொருளாதாரத்தின் முக்கிய மையமாக இந்தியா உருவாகி வருகிறது. இந்தியாவுடன் ஒன்றிணைந்து பணியாற்ற சிங்கப்பூா் விரும்புகிறது.
இந்தியாவில் செமிகண்டக்டா் உற்பத்திச் சூழலை வளா்க்க இந்தியா-சிங்கப்பூா் அரசுகள் ஒன்றிணைந்து பணியாற்றி வருகின்றன. இதற்காக இந்தியாவில் புதிய தொழிற்பூங்காக்களை அமைப்பதற்கான தளங்களை தேடும் பணிகளில் சிங்கப்பூரின் செம்காா்ப் நிறுவனம் ஈடுபட்டுள்ளது.
இந்தியாவிடம் சூரிய ஒளி மற்றும் காற்றாலை எரிசக்தி உள்ளன. பசுமை அமோனியா உற்பத்தியில் முக்கிய நாடாக இந்தியா உருவாகப் போகிறது. எனவே இந்தத் துறைகளிலும் இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற சிங்கப்பூா் ஆவலாக உள்ளது என்றாா்.