இந்தியாவைத் தோற்கடிப்பேன், இல்லையெனில்...! பாகிஸ்தான் பிரதமர் சூளுரை!
இந்தியாவைத் தோற்கடிப்பேன், இல்லையெனில் பெயரை மாற்றிக் கொள்வேன் என்று பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப் சவால் விடுத்துள்ளார்.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள தேரா காசி கான் பகுதியில் நலத்திட்டப் பணிகளை மக்களுக்கு வழங்கும் நிகழ்வில் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப் கலந்துகொண்டார்.
அதனைத் தொடர்ந்து, அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் அவர் பேசியதாவது:
“பாகிஸ்தான் நிலைமையை மேம்படுத்த நாங்கள் இரவும் பகலும் உழைக்கிறோம். கடவுள் எப்போதும் பாகிஸ்ஹானை ஆசிர்வதிப்பார். பொருளாதாரம் மற்றும் வளர்ச்சியில் இந்தியாவைவிட சிறந்த நாடாக பாகிஸ்தானை உருவாக்கவில்லை என்றால் எனது பெயரை மாற்றிக் கொள்வேன்.
நான் நவாஸ் ஷெரீஃபின் ரசிகன், அவரது வழியைப் பின்பற்றுபவன். அவரால் ஆசிர்வதிக்கப்பட்ட எனது வாழ்க்கை மீது சத்தியம் செய்கிறேன், எனது உடம்பில் சக்தி இருக்கும்வரை போராடி, இந்தியாவைத் தோற்கடித்து பாகிஸ்தானை மகத்துவமான நாடாக உயர்த்துவேன்.
பிற நாடுகள் மற்றும் அமைப்புகள் வழங்கும் கடனை நம்பி இருப்பதைவிட, தன்னிறைவு பெற்ற பொருளாதாரம் கொண்ட நாடாக பாகிஸ்தானை உருவாக்குவோம். நாட்டின் பணவீக்கம் 40 சதவிகிதத்தில் இருந்து 2 சதவிகிதமாக குறைந்துள்ளது” எனத் தெரிவித்தார்.
இதையும் படிக்க : கனடாவில் புதிய விசா விதிமுறைகள்! 4.2 லட்சம் இந்திய மாணவர்கள் நிலை?
பாகிஸ்தான் கடந்த சில ஆண்டுகளாக கடுமையான நிதி மற்றும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது. மேலும், சர்வதேச அளவில் மிகப்பெரிய கடன் சுமையில் உள்ளது.
பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் நிலையில், உலகின் மூன்றாவது பொருளாதார நாடான இந்தியாவை தோற்கடிப்பேன் என்று பொது மேடையில் ஷாபாஸ் ஷெரிஃப் சூளுரைத்திருப்பதை பலரும் சமூக ஊடகங்களில் விமர்சித்து வருகிறார்கள்.
இதனிடையே, இந்தியாவை பாகிஸ்தான் பிரதமர் பேச்சுவார்த்தைக்கு அழைத்திருப்பதும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. எனினும், பயங்கரவாதத்தை ஒழிக்கும்வரை பேச்சுவார்த்தைக்கு தயார் இல்லை என்று இந்தியா தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.