`இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 14 நாடுகளுக்கு விசா தடை' - சவூதி அரேபியா அறிவிப்பும் காரணமும்!
இன்னும் சில மாதங்களில் இஸ்லாமியர்களின் புனிதப் பயணமான ஹஜ் யாத்திரை தொடங்கவிருக்கிறது. அதற்கான முன்னேற்பாடுகளை சவவூதி அரேபியா அரசு செயல்படுத்திவருகிறது.
அதன் ஒருபகுதியாக புதிய பயணக் கட்டுப்பாடுகளை விதித்து இந்தியா உள்ளிட்ட 14 நாடுகளைச் சேர்ந்த மக்களுக்கு விசா வழங்குவதை நிறுத்தி வைத்திருக்கிறது.
இது தொடர்பாக வெளியாகியிருக்கும் தகவலில், ``ஹஜ் புனித யாத்திரை ஜூன் நடுப்பகுதி வரை இருக்கும். அதுவரை கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தும் முயற்சிகள் தொடங்கப்பட்டிருக்கின்றன.

அதனால், ஹஜ் யாத்திரை முடிவடையும்வரை 14 நாடுகளுக்கு உம்ரா விசா, வணிக விசா, குடும்ப விசா போன்றவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. பல்வேறு வகையிலான விசாவைப் பெற்று சவூதி வரும் பிற நாட்டு மக்கள் ஹஜ் கிரியை முடியும் வரை இங்கேயே சட்டவிரோதமாக தங்கிவிடுகிறார்கள். எனவே, இந்த தடையின் மூலம், முறையான பதிவு இல்லாமல் ஹஜ் செய்ய முயற்சிப்பவர்களை தடுக்க முடியும்.
ஏப்ரல் 13 வரை இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், எகிப்து, இந்தோனேசியா, ஈராக், நைஜீரியா, ஜோர்டான், அல்ஜீரியா, சூடான், எத்தியோப்பியா, துனிசியா, ஏமன் உள்ளிட்ட நாடுகளுக்கும் உம்ரா பயணம் உள்ளிட்ட சில வகையான விசா வழங்கப்படும். அதன்பிறகு, ஹஜ் தவிர்த்து அனைத்து வகை விசாக்களும் நிறுத்தப்படும்." எனக் குறிப்பிடப்படுகிறது.

கடந்த ஆண்டு ஹஜ் யாத்திரையை மேற்கொண்ட 1000-க்கும் மேற்பட்டோர் கூட்ட நெரிசல், வெப்பம் உள்ளிட்டக் காரணங்களால் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் பலர் சட்டவிரோதமாக நாட்டிற்குள் தங்கியிருந்தவர்கள் என்பது தெரியவந்தது. அதனால், இந்த ஆண்டு கூடுதல் கவனம் அளிக்கப்பட்டிருக்கிறது.