இந்தியா வழியாக மியான்மரிலிருந்து வங்கதேசத்திற்கு ஆயுதம் கடத்திய 5 பேர் கைது!
இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள் வழியாக சட்டவிரோதமாக ஆயுதம் கடத்திய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
வடகிழக்கு மாநிலமான மிசோரமின் மாமிட் மாவட்டத்தில் காவல் துறையினருக்கு கிடைத்த ரகசியத் தகவல்களின் அடிப்படையில் சைத்தாஹ் எனும் கிராமத்தில் நேற்று (ஜன.15) சோதனை மேற்கொண்டனர். மியான்மர் மற்றும் வங்கதேசம் ஆகிய இரண்டு நாடுகளை சேர்ந்த கிளர்ச்சிப் படையினருக்கு மத்தியில் இந்தியா வழியாக சட்டவிரோதமாக ஆயுதங்கள் கடத்தப்படுவதை தடுப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அந்த சோதனையில் சட்டவிரோதமாக கடத்தப்பட்ட 6 ஏகே-47 ரக துப்பாக்கிகளும், அதன் 10,050 சுற்று தோட்டாக்கள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதையும் படிக்க: 8வது ஊதியக் குழு: மத்திய அமைச்சரவை ஒப்புதல்
இதனைத் தொடர்ந்து, இந்த கடத்தலில் ஈடுபட்ட 5 பேரை மிசோரம் காவல் துறையினர் கைது செய்தனர். அந்த 5 பேரில் ஒருவர் மியான்மர் நாட்டைச் சேர்ந்த ’சின் நெஷனல் பிரண்ட்’ எனும் கிளர்ச்சிப் படையின் முக்கியத் தலைவர் எனக் கூறப்பட்டுள்ளது.
மேலும், கைது செய்யப்பட்ட அவர்கள் 6 பேரின் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அந்த ஆயுதம் கடத்தும் கும்பலை மொத்தமாக அழிக்கும் முயற்சியில் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.