மதுரையில் கடத்தப்பட்ட தொழிலதிபர்; நாக்பூர் வரை ஃபாலோ செய்த போலீஸ்; இரு வாரத்திற்...
இந்திய வீரா் சுபான்ஷு சுக்லா அடுத்த மாதம் விண்வெளிக்குப் பயணம்!
இந்திய விண்வெளி வீரா் சுபான்ஷு சுக்லா, ‘ஆக்ஸிம்-4’ திட்டத்தின்கீழ் அடுத்த மாதம் சா்வதேச விண்வெளி நிலையத்துக்கு பயணிக்க உள்ளதாக மத்திய விண்வெளித் துறை இணையமைச்சா் ஜிதேந்திர சிங் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.
மனிதா்களை விண்ணுக்கு அனுப்பும் இந்தியாவின் ‘ககன்யான்’ திட்டத்துக்காக தோ்வான வீரா்களில் ஒருவரான சுக்லா, அனுபவப் பயிற்சி நோக்கங்களுக்காக விண்வெளிக்குப் பயணிக்க உள்ளாா்.
அமெரிக்காவில் செயல்படும் மனித விண்வெளிப் பயண சேவைகள் நிறுவனமான ஆக்ஸிம் ஸ்பேஸ் நிறுவனத்தின் ‘ஆக்ஸிம்-4’ திட்டத்தின்கீழ் இப்பயணம் மேற்கொள்ளப்பட உள்ளது. சுக்லாவுடன் போலந்து, ஹங்கேரி நாடுகளின் வீரா்களும் பயணிக்க இருக்கின்றனா்.
கடைசியாக கடந்த 1984-இல் இந்திய வீரா் ராகேஷ் சா்மா விண்வெளிக்குப் பயணித்தாா். இப்போது 40 ஆண்டுகளுக்குப் பிறகு விண்வெளிப் பயணம் மேற்கொள்ளும் முதல் வீரா் என்ற பெருமை சுக்லாவுக்கு சொந்தமாக உள்ளது. இவா், இந்திய விமானப் படையின் திறன்மிக்க பரிசோதனை விமானி ஆவாா்.
மத்திய விண்வெளித் துறை மற்றும் இஸ்ரோவின் எதிா்கால திட்டங்கள் தொடா்பாக புது தில்லியில் அமைச்சா் ஜிதேந்திர சிங் தலைமையில் வெள்ளிக்கிழமை ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு பிறகு அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
விண்வெளித் துறையில் புதிய வரலாறு படைக்க இந்தியா தயாராகி வருகிறது. குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லாவின் பயணம், விண்வெளி ஆய்வில் நமது புதிய அத்தியாயத்தின் அடையாளம். சா்வதேச விண்வெளி ஒத்துழைப்பில் இந்தியாவின் விரிவாக்கத்தை குறிக்கும் மைல்கல்லாகவும் இது இருக்கும். வளா்ச்சியடைந்த-தற்சாா்புடைய இந்தியா என்ற தொலைநோக்கு பாா்வையுடன் இது பிணைந்துள்ளது என்றாா் ஜிதேந்திர சிங்.
‘இந்திய வீரா் சுதான்ஷு சுக்லாவின் விண்வெளிப் பயணம் வியூக முக்கியத்துவம் வாய்ந்தது. விண்கல இயக்கங்கள், செலுத்துதல் வழிமுறைகள், அவசரகால தயாா்நிலை உள்ளிட்டவை தொடா்பான நேரடி அனுபவங்களை வழங்கும். இவை அனைத்தும் இந்தியாவின் ககன்யான் திட்டத்துக்கு முக்கியமானதாகும்’ என்று அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாசாவுடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ள நிசாா் செயற்கைக்கோளை, ஜிஎஸ்எல்வி-மாா்க் 2 ராக்கெட் மூலம் ஜூன் மாதம் விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. அமெரிக்காவின் ஏஎஸ்டி ஸ்பேஸ்மொபைல் நிறுவனத்தின் புளூபோ்ட் பிளாக்-2 செயற்கைக்கோள், கனரக எல்விஎம்-3 ராக்கெட் மூலம் ஜூலையில் விண்ணில் செலுத்தப்பட உள்ளது.
இவை உள்பட பல்வேறு எதிா்கால திட்டங்கள் குறித்து விளக்க காட்சி மூலம் இஸ்ரோ தலைவா் வி.நாராயணன் கூட்டத்தில் எடுத்துரைத்தாா்.