ரூ.8,346 கோடி வங்கிக் கடனை திருப்பிச் செலுத்தாத எம்.டி.என்.எல்!
ஜம்மு - காஷ்மீரில் வெள்ளம்: 3 பேர் பலி; 100-க்கும் மேற்பட்டோர் மீட்பு!
ஜம்மு - காஷ்மீரில் ராம்பன் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 3 பேர் பலியான நிலையில் 100-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர்.
ஜம்மு - காஷ்மீரில் பெய்து வரும் தொடர் மழையால், ஜம்மு - ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் நஷ்ரி - பனிஹால் பகுதிகளுக்கு இடையே நிலச்சரிவுகள் மற்றும் மண்சரிவுகள் ஏற்பட்டதில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளன.
ராம்பன் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ பாக்னா கிராமத்தில் ஏற்பட்ட மேக வெடிப்பில் சிக்கி சகோதர்கள் அகிப் அகமது, முகமது சாகிப் உள்ளிட்ட 3 பேர் பலியானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடைசியாக வெளியான தகவலின்படி, இக்கிராமத்தில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு பகுதியில் இரண்டு நாள்களில் மழை தொடர்பான சம்பவங்களில் 5 பேர் பலியாகியுள்ளனர். நேற்றிரவு(ஏப். 19) ரியாசி மாவட்டத்தின் அர்னாஸ் பகுதியில் மின்னல் தாக்கியதில் ஒரு பெண் உள்பட இருவர் பலியாகினர், மற்றொரு பெண் காயமடைந்தார்.
தரம் குண்ட் கிராமத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சுமார் 40 குடியிருப்புகள் சேதமடைந்துள்ளதாகவும் 10 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதாகவும் மற்றவை பகுதியளவு சேதமடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
தொடர் மழை மற்றும் மேக வெடிப்புகளை பொருட்படுத்தாமல் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர், இதில் சிக்கிய 100-க்கும் மேற்பட்ட கிராம மக்களை மீட்டனர்.
கனமழை, மேக வெடிப்பு, நிலச்சரிவு, ஆலங்கட்டி மழை ஆகியவற்றால் ராம்பன் மாவட்டம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளதாக மூத்த அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதையும் படிக்க: மூர்ஷிதாபாத்தில் தந்தை-மகன் கொலை வழக்கு: முக்கிய குற்றவாளி கைது