"இந்தி வந்தால் அடுத்து சமஸ்கிருதம் வரும்; சிந்தனையை மழுங்கடிக்கும்" - அமைச்சர் அன்பில் மகேஷ்
தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குதல் மற்றும் மாநில அளவிலான அடைவுத்திறன் (SLAS 2025) ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
இதில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டார்.

பின் அமைச்சர் அன்பில் மகேஸ் செய்தியாளர்களைச் சந்தித்து பேசும்போது, ஆர்டிஇ (RTE) நிதியின் அதிக பங்கீடு மாநில அரசுதான் கொடுக்க வேண்டும் என மத்திய அமைச்சர் பிரதான் கூறியது குறித்த கேள்விக்கு, "60:40 என இருக்கும் பொழுது மாநில அரசு எப்படி முழுமையாக நிதி கொடுக்க முடியும். அவர் சொல்வது அரைகுறையாகக் கொடுத்து நிறுத்துங்கள் என்பது போல் உள்ளது.
ஆர்டிஇ (RTE) என்பது உச்ச நீதிமன்றத்தால் கொண்டுவரப்பட்டது. மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டுள்ளது. ஏழை பிள்ளைகளும் தனியார்ப் பள்ளிகளில் 25% படிக்க வேண்டும் என்பதற்காகக் கொண்டு வரப்பட்டது.

மத்திய அரசு, உச்ச நீதிமன்றம் சொல்வதையே கேட்க மாட்டேன் என்பது போல் தான் இதைப் புரிந்து கொள்ள முடியும். வருடத்திற்கு ஒரு லட்சம் பிள்ளைகள் இதனைச் சார்ந்து படிக்கின்றனர். இவர்கள் செயலால் இணையதளத்தைத் திறக்க முடியாத நிலை உள்ளது. மத்திய மற்றும் மாநில பள்ளிக் கல்வித்துறை செயலாளர் இதுகுறித்துப் பேசி வருகின்றனர். நல்ல முடிவு வரும் என எதிர்பார்க்கிறோம்.
மும்மொழிக் கொள்கை என்பது தேவையில்லாதது. இரு மொழிக் கொள்கை போதுமானது என அண்ணா அந்தக் காலத்தில் இருந்தே கூறி வருகிறார். தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளை வைத்து நமது திறமைகளை உலகம் முழுவதும் காண்பிக்க முடியும். மூன்று மொழிகள் மட்டுமல்லாமல் 22 மொழிகளையும் கற்றுக்கொள்ள வேண்டும் என நாங்கள் கூறுகிறோம்.

ஆனால் அதில் கட்டாயம் இருக்கக் கூடாது. விருப்பத்தின் அடிப்படையில் கற்றுக்கொள்ள வேண்டும். தமிழ், ஆங்கிலம், கணிதம் ஆகிய பாடங்களில் நல்ல மதிப்பெண் பெற்றுவிட்டு மூன்றாவதாக வரும் மொழியில் அவர்கள் தேர்ச்சி பெறவில்லை என மீண்டும் அதே வகுப்பில் படிக்கக் கூறினால் எந்த விதத்தில் நியாயம்.
எதையும் திணிக்காதீர்கள் இரண்டு இட்லி போதும் என்று கூறும்போது மூன்றாவது இட்லியை வாயில் திணிக்கும் பொழுது எங்களது பிள்ளைகள் வாந்திதான் எடுக்கும். தமிழ் என்பது அடையாளம். ஆங்கிலம் என்பது வாய்ப்புகள். உலகம் முழுவதும் எனது கருத்தைக் கொண்டு செல்வதற்கு ஆங்கிலம் போதுமானதாக உள்ளது. இந்தி உள்ளே வருகிறது என்றால் சமஸ்கிருதம் உள்ளே வரும். சமஸ்கிருதம் வந்தால் பிற்போக்கு சிந்தனைகள் உள்ளே வந்துவிடும்.

புராணக் கதைகளை எடுத்துக்காட்டாகக் கூறி மாணவர்களை அறிவியல் சார்ந்து சிந்திக்க விடாமல் மழுங்கடிக்கும் பணிகளை அவர்கள் செய்வார்கள்" எனத் தெரிவித்தார்.