வர்த்தக ஆரம்பத்தில் உயர்ந்தும் பிறகு சரிந்தும் முடிந்த பங்குச் சந்தை!
``கட்டுறாங்க, கட்டுறாங்க 15 வருசமா பாலத்தை கட்டுறாங்க'' - குமுறும் திருமுல்லைவாசல் கிராம மக்கள்
திருமுல்லைவாசல்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருமுல்லைவாசல் ஊராட்சியில் உப்பனாற்றின் குறுக்கே பாலம் கட்டும் பணியானது மாநில நெடுஞ்சாலைத்துறையால் ரூ.30 கோடி நிதி ஒதுக்கீட்டில் 2007-ல் தொடங்கப்பட்டது.
இந்த பாலமானது திருமுல்லைவாசல் - கீழமூவர்கரையை சுமார் 1 கி.மீ தொலைவில் இணைக்கிறது. பதினெட்டு ஆண்டுகாலம் ஆயினும், இன்று வரை ஒருபுறம் இணைப்புச் சாலை அமைக்கப்படாமலே உள்ளது.
திருமுல்லைவாசல் பகுதியைச் சுற்றி தொடுவாய், கூழையார், மடவாமேடு, கொட்டாயமேடு, ஓலக்கொட்டாயமேடு, தாண்டாங்குளம், பழையபாளையம், தர்காஸ், புதுப்பட்டினம், பழையார் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட மீனவ கிராமங்கள் உள்ளன.

இப்பகுதியில் உள்ள மீனவர்கள் மீன், இறால் மற்றும் நண்டுகளை நாகை, காரைக்கால் உள்ளிட்ட துறைமுகங்களுக்கு கொண்டு செல்ல சீர்காழி வந்துதான் செல்ல வேண்டியுள்ளது.
இதனால் அவர்களுக்கு கூடுதல் நேரமும், கூடுதல் பணமும் செலவாகிறது. இதுகுறித்து அப்பகுதி மக்களிடம் கேட்கும்போது,
"இந்த பாலத்தைக் கட்டுறாங்க கட்டுறாங்க கட்டுறாங்க நாங்களும் பாக்குறோம் பல வருசமா கட்டிட்டுதான் இருக்காங்க . ஆனா, முழுசா கட்டி முடிச்ச பாடு இல்ல. இந்த பாலத்த கட்டாம இருந்தபோது கூட படகிலேயோ, தோணியிலேயோ அந்தப் பக்க கரைக்கு போயிட்டு வந்தோம். ஆனா, இப்ப அதுவும் போச்சி, கட்டியும் பிரயோஜனம் இல்ல. கட்டி முடிக்கிற மாறியும் தெரில, அப்படியே கிடக்கு.
`பாலம் இல்லாம தினம் 30 கி.மீ சுத்தி போறோம்'
நாங்களா பூம்புகாருக்குப் போகணும்னா இங்கேயிருந்து வசப்புத்தூர் போய்ப் போகணும். இல்லாவிட்டால் சீர்காழி போய்த்தான் போகணும்.
ஆனா இந்த பாலத்தைக் கட்டிவிட்டால் நாங்கலாம் இங்கேயிருந்தே பூம்புகாருக்கெல்லாம் போயிடுவோம். இந்த பாலத்தைக் கட்டாமல் நாங்க எங்குப் போனாலும் சுத்தி தான் போக வேண்டியதாக இருக்கு.
இதுல வேற போயிட்டு வரவே ஒருநாள் ஆகிவிடுது. பாலத்துக்கு கீழ கோயில் ஒன்று இருக்கு. அது இங்கே இருக்கிற நிறைய பேருக்கு குலதெய்வம்.
இந்த பாலத்தைக் கட்டாமல் அப்படியே போட்டதுல அந்தக் கோயிலுக்கு கூட போக முடியல. ஆத்திர அவசரத்துக்கு எங்கேயாச்சும் போகணும்னா கூட ஒடனே போகமுல்ல.
இங்கே இருக்கிற நிறைய பேர் மீன் விற்கத் திருநகரி போவோம். அதுக்கு இங்கேயிருந்து வசப்புத்தூர் போயிதான் போகனும். அப்படியே அங்கே போனாலும் திருநகரி போறதுக்கு சுத்தமாகப் பஸ்ஸே இருக்காது. சரி, ஆட்டோவுல போலான்னு பார்த்தா ஐநூறு ரூபாய் கேக்குறாரு ஆட்டோக்காரு.

நாங்க வாங்கிய மீன வித்தால்தான் நாலு காசையே கையில பாப்போம். அப்படி இருக்கிறப்ப இதுல எங்கேயிருந்து நாங்க ஐநூறு ரூபாய் குடுத்து ஆட்டோவில் போறது? பாலம் இல்லாம நாங்க தினம் 30கி.மீ சுத்தி போறோம்பா .
அப்படி சுத்தி போனால், வீடு திரும்பவே சாயங்காலம் ஆகிவிடுது. இந்த பாலத்தை சீக்கிரம் கட்டிக்கொடுங்கப்பா. கட்டிக்கொடுத்துவிட்டால் எங்களுக்கு போயிட்டு வர இவ்வளவு சிரமமாக இருக்காது சீக்கிரம் போயிட்டு சீக்கிரம் வந்துவிடுவோம்" என ஆற்றாமை பொங்க கவலையோடு பேசினர் அம்மக்கள்.
`ஆமை வேகத்தை விட அதிவேகம்'
இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலரிடம் பேசும்போது,
"அந்த பாலத்தை 13 வருடத்துக்கு மேலாகக் கட்டிவருகிறார்கள். முன்னாடி ஒரு எட்டு வருடம் வேலை எதுவும் செய்யாம, அப்படியேதான் கிடந்தது.
இப்பொழுது ரெண்டு வருடமாகத்தான் வேலை செய்கிறார்கள். அதுவும் ஆமை வேகத்தை விட அதிவேகமாகச் செய்கிறார்கள்.
ஒரு வீடு கட்ட எத்தனை ஆள் வைத்துக் கட்டுவோமோ அந்த அளவு ஆள் வைத்துத்தான் இவ்ளோ பெரிய பாலத்தையே கட்டுகிறார்கள்.

கீழமூவர்கரையைச் சுற்றி பத்துக்கு மேல் மீனவ கிராமங்கள் இருக்கு. கீழமூவர்கரைக்கு இந்தப் பாலம் வழியா போனால் ரெண்டே கி.மீ தான். ஆனா பாலம் கட்டாம இப்ப பதினாறு கி.மீ சுத்தி போக வேண்டியதுதான் இருக்கு.
இந்தப் பாலம் கட்டியாச்சின்னா இரண்டு பக்கத்திலேயும் உள்ள மீனவ மக்களோட வாணிபம் அதிகமாகும். கீழ்மூவர்கரையென்பது ஒரு சின்ன ஊர் தான். அங்கே உள்ளவங்க ஏதாச்சும் பொருள் வாங்கணும்னா கூட சீர்காழி தான் போவாங்க. இதுவே இந்த பாலம் கட்டிட்டாங்கன்னா 2கி.மீல் திருமுல்லைவாசல் வந்தே வாங்கிட்டு போவாங்க" என்றார்.
அதிகாரிகள் சொல்வதென்ன?
இதுகுறித்து சீர்காழி உதவிக்கோட்டப் பொறியாளர் இளம்பிறை பேசிய போது, "2009-ல் பாலம் கட்டும் பணியானது தொடங்கப்பட்டது. 2014-ல் மண்ணின் தரக் குறைவு காரணமாக பாலம் கட்டும் பணியானது நின்றுவிட்டது.
2019-ல் இரண்டாவது ஆர்.ஏ.எஸ் (Revenged Estimate) வாங்கி, 2020-ல் மீண்டும் பாலம் கட்டும் பணியானது தொடங்கப்பட்டது. இன்னும் ஒன்று அல்லது ஒன்றரை மாதங்களில் பணியானது முழுமையாக முடிந்துவிடும்" என்று கூறினார்.
அதிகாரிகள் சொல்கிறார்கள் நாமும் பொறுத்திருந்து பார்ப்போம்.