Ind vs Ban: "இந்தியாவை வீழ்த்தும் திறன் எல்லா அணிகளுக்கும் இருக்கிறது"- வங்காளதே...
தனியே சந்தித்த அண்ணாமலை; மாறுவாரா தினகரன்? - கூட்டணிக் கணக்கில் அடுத்தக்கட்ட நகர்வு என்ன?
அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனை தனியே சந்தித்து, தமிழக அரசியலில் பரபரப்பைப் பற்றவைத்திருக்கிறார், தமிழக பா.ஜ.க முன்னாள் மாநிலத் தலைவரான அண்ணாமலை.
அந்தச் சந்திப்பில் பேசப்பட்ட விஷயங்கள் என்ன?
தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து வெளியேறியிருக்கும் அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், அ.தி.மு.க பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமி மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்.

"அ.தி.மு.க பொதுச்செயலாளராக எடப்பாடி இருக்கும் வரையில், அந்தக் கட்சியால் ஜெயிக்க முடியாது... எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது..." என்று தினகரன் கொட்டும் வார்த்தைகளெல்லாம், அரசியல் சூட்டைக் கிளப்புகின்றன.
அதோடு, "பா.ஜ.க மாநிலத் தலைவராக அண்ணாமலை இருந்த வரைக்கும், கூட்டணிக் கட்சிகளை அரவணைத்து திறம்பட கையாண்டார். ஆனால், தற்போதைய தலைவர் நயினார் நாகேந்திரனால் கூட்டணிக் கட்சிகளை அரவணைக்க முடியவில்லை" என்று தமிழக பா.ஜ.க தலைவரான நயினார் நாகேந்திரன் மீதும் குற்றச்சாட்டுகளை சுமத்தியிருக்கிறார் தினகரன்.
"தினகரனை தூண்டிவிடுவதே அண்ணாமலைதான். மலையின் பேச்சைக் கேட்டுக் கொண்டுதான், எடப்பாடியையும் நயினாரையும் தினகரன் வசைபாடுகிறார்..." என்று கமலாலய சீனியர்களும் அ.தி.மு.க மூத்த நிர்வாகிகளும் டெல்லிக்குப் புகார்களைத் தட்டிவிட்டனர்.
சமீபத்தில், துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணனை டெல்லியில் சந்தித்த அ.தி.மு.க தலைவர்களும் இதுகுறித்தெல்லாம் பேசியிருக்கிறார்கள்.
"எடப்பாடி பழனிசாமியை வீழ்த்திவிட்டால், கொங்கு மண்டத்தில் தன்னை ஒரு தலைவனாக வளர்த்துக் கொள்ளலாம் என்று அண்ணாமலை கணக்குப் போடுகிறார்.

அதனால்தான், தினகரனை அவர் தூண்டிவிடுகிறார்..." என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடனும் கருத்துக்களைப் பரிமாறியிருக்கிறார்கள்.
இந்தக் களேபரங்களுக்கு இடையேதான், தினகரனை சந்தித்து கிட்டத்தட்ட இரண்டு மணிநேரத்திற்கு ஆலோசனை நடத்தியிருக்கிறார் அண்ணாமலை.
செப்டம்பர் 21-ம் தேதி இரவு நடந்திருக்கும் அந்தச் சந்திப்பில், கூட்டணி தொடர்பாகவும், ஆன்மிகம் தொடர்பாகவும் பல்வேறு விஷயங்கள் பேசப்பட்டிருக்கின்றன.
அண்ணாமலை - தினகரன் சந்திப்புக் குறித்து நம்மிடம் பேசிய அ.ம.மு.க சீனியர்கள் சிலர், "சென்னை அடையாறிலுள்ள தினகரன் இல்லத்தில்தான், அந்தச் சந்திப்பு நடந்தது. தன்னுடைய காரில் வந்தால், தேவையற்ற பரபரப்பு உருவாகுமெனக் கருதி, ஒரு டாக்ஸியில் சில பாதுகாவலர்களுடன் வந்தார் அண்ணாமலை.
வாசல் வரை வந்து அவரை வரவேற்ற தினகரன், தன் மனைவி அனுராதாவுக்கும் வீட்டிலிருந்த பெரியவர்களுக்கும் அண்ணாமலையை அறிமுகம் செய்துவைத்திருக்கிறார்.
பரஸ்பர நலம் விசாரிப்புகளுக்குப் பிறகு, அரசியல் பக்கம் அவர்களின் பேச்சு திரும்பியிருக்கிறது. 'அண்ணா, நீங்க மறுபடியும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குள் வரணும்...' என்று நேரடியாகவே கோரிக்கை விடுத்திருக்கிறார் அண்ணாமலை.

அதற்கு, 'அது எப்படி ப்ரதர் முடியும்... ஆட்சியைக் கவிழ்க்க 18 எம்.எல்.ஏ-க்களைக் கடத்திச் சென்றவர்னு என்னைய விமர்சனம் செய்றாரு எடப்பாடி.
2017-ல, நான் இல்லாம இவர் முதலமைச்சர் ஆகியிருப்பாரா... பா.ஜ.க-வை எதிர்த்துக்கிட்டு, அப்போது ஆட்சியை அமைச்சது யாரு.. அதையெல்லாம் மறந்துட்டு, என்னைய கடத்தல்காரன் ரேஞ்சுக்கு விமர்சனம் பண்றதையெல்லாம் எப்படி ஏத்துக்க முடியும்...' என்று காட்டமாகவே பதிலடிக் கொடுத்திருக்கிறார்.
அமைதியாகக் கேட்டுக்கொண்ட அண்ணாமலை, 'பழசையெல்லாம் ஏன் பேசணும். இந்தக் கூட்டணி பலமாக இருந்தால்தானே, தி.மு.க-வை வீழ்த்த முடியும்...' என்று சொல்லவும், 'இந்தக் கூட்டணி பலவீனமாகனும் என்பது என்னோட எண்ணமில்லை.
ஆனால், அந்த எண்ணத்தில்தான் எடப்பாடி இருக்காரு. என்னைய கூட்டணிக்குள்ள இணைச்சுக்குறதுல கொஞ்சம்கூட அவருக்கு விருப்பமில்லை.
'கட்சிக்கு துரோகம் செய்தவர்கள்... எம்.எல்.ஏ-க்களை கடத்திச் சென்றவர்கள்'னு அவர் பேசுறதெல்லாம், என்னோட கட்சிக்காரங்க துளியும் ரசிக்கலை.
அவர் இருக்கிற கூட்டணியில நான் இணைஞ்சால்கூட, என்னோட கட்சிக்காரங்க எப்படி தேர்தல் வேலைப் பார்ப்பாங்க...' என்று கொதித்திருக்கிறார் தினகரன்.

அதற்குள் இரவு உணவு தயாராகிவிட, டின்னரை எடுத்துக்கொண்டே இருவரும் பேசியிருக்கிறார்கள்.
அப்போது, நயினார் குறித்தும் காட்டமாக சில விஷயங்களைப் பேசியிருக்கிறார் தினகரன்.
'எடப்பாடியை நம்பாதீங்க ப்ரதர். கடைசி நேரத்துல உங்க கழுத்துல கத்தியை வெச்சிடுவாரு. நீங்க நினைக்குற எண்ணிக்கையில, அவர் உங்களுக்கு சீட் ஒதுக்க மாட்டாரு.
அப்படியே ஒதுக்கினாலும், தோல்வியடையக் கூடிய தொகுதிகளாகப் பார்த்துதான் ஒதுக்குவாரு..' என்று எச்சரித்த தினகரன், 'அவரை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொண்டு என்னால் கூட்டணிக்கு வர முடியாது.
அப்படி ஏற்றுக்கொண்டால், என் கட்சிக்காரர்களே அதை விரும்ப மாட்டார்கள். வேணும்னா, முதல்வர் வேட்பாளராக அ.தி.மு.க-விலிருந்து வேறொருவரை முன்னிறுத்தச் சொல்லுங்கள்.
அதை ஏற்றுக் கொள்கிறோம். இல்லைனா, தேர்தலுக்குப் பிறகு முதல்வரை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்னு அறிவியுங்க...' என்று 'செக்' வைத்திருக்கிறார்.
அதை எதிர்பார்க்காத அண்ணாமலை, 'இதையெல்லாம் டெல்லிதான்ணா முடிவு செய்யும். நீங்க ஒருதடவை அமித் ஷாவை சந்திச்சுப் பேசுங்க...' என்று சொல்லிவிட்டு புறப்பட்டிருக்கிறார்.
'கூட்டணியிலிருந்து நயினார், எடப்பாடியால் வெளியேறிய தினகரனை, பெரும்பாடுப்பட்டு மீண்டும் கூட்டணிக்குள் கொண்டுவந்தேன்' என்று பெருமைத் தேடிக்கொள்ளப் பார்க்கிறார் அண்ணாமலை.

அதன்மூலமாக, தன் மீது அதிருப்தியிலிருக்கும் டெல்லி மேலிடத்தை சமாதானம் செய்துவிட முடியுமென நம்புகிறார்.
அவரது முயற்சி எந்தளவுக்குப் பலனளிக்குமெனத் தெரியவில்லை" என்றனர் விரிவாகவே.
நம்மிடம் பேசிய பா.ஜ.க-வின் மாநில மையக்குழு உறுப்பினர்கள் சிலர், "சமீபத்தில், அமித் ஷாவை ரகசியமாகச் சந்தித்துவிட்டு வந்த நயினார் நாகேந்திரன், 'யாருடைய தூண்டுதலால் கூட்டணியிலிருந்து தினகரன் வெளியேறினார்' என்பதைப் போட்டுடைத்துவிட்டார்.
அதனைத் தொடர்ந்தே, தினகரனைச் சந்தித்து அவரை சமாதானம் செய்ய முயன்றிருக்கிறார் அண்ணாமலை.
எடப்பாடியை ஏற்றுக்கொண்டு மீண்டும் கூட்டணிக்குள் வர தினகரன் தயாராக இல்லை.
த.வெ.க-வுடன் கூட்டணிக்கு முயற்சிக்கும் தினகரன், அந்தக் கூட்டணி அமையாவிட்டால் தனித்துப் போட்டியிடவும் தயாராகிவிட்டார்.
தென்மாவட்டங்களில், 30 தொகுதிகளில் மட்டும் வேட்பாளர்களை நிறுத்தி, அ.தி.மு.க வேட்பாளர்களை வீழ்த்துவதே அவரது திட்டம். இதையெல்லாம் உணர்ந்துதான், அவரை மீண்டும் கூட்டணிக்குள் கொண்டுவந்து, தன்னுடைய இமேஜ்ஜை உயர்த்திக்கொள்ளப் பார்க்கிறார் அண்ணாமலை.
ஆனால், பாசிட்டிவ்வான பதில் ஏதும் தினகரன் சொல்லவில்லை. அடுத்ததாக, ஓ.பன்னீர்செல்வத்தையும் சந்தித்து, அவரைக் கூட்டணிக்குள் இணைக்கும் முயற்சியை கையில் எடுக்கப் போகிறார் அண்ணாமலை" என்கிறார்கள்.

தமிழக பா.ஜ.க-வுக்குள் இழந்த அதிகாரத்தை, தினகரன், ஓ.பி.எஸ் ரூட்டில் மீண்டும் பெற காய் நகர்த்துகிறார் அண்ணாமலை.
ஆனால், 'எடப்பாடியை ஏற்றுக்கொண்டு வர நாங்கள் தயாராக இல்லை..' என்பதை அவர்கள் இருவருமே அழுத்தமாகச் சொல்லிவிட்டார்கள்.
இந்த விவகாரத்தில், முடிவு எடுக்க வேண்டியது டெல்லி பா.ஜ.க மேலிடம்தான். அவர்களும்கூட, எடப்பாடிக்குத்தான் தங்களுடைய முழு சப்போர்ட்டையும் இதுவரையில் அளித்திருக்கிறார்கள்.
'நவராத்திரி முடிந்தபிறகு சில மாற்றங்களும் அதிரடிகளும் தேசிய ஜனநாயக் கூட்டணிக்குள் நிகழலாம்...' என்கிறது கமலாலய வட்டாரங்கள். பொறுத்திருந்து பார்ப்போம்...