'இந்த புலி நகத்தை ஆந்திராவுல வாங்கினேன் தம்பி' - யூடியூபரால் கைதான கோவை நபர்
வைரல் கன்டென்ட்களை தரும் யூடியூபர்களை விட சர்ச்சைக்குரிய கன்டென்ட்களால் சிக்கலில் விடும் யூடியூபர்கள் அதிகரித்து வருகிறார்கள். கோவை மாவட்டத்தில் ‘கோயம்புத்தூர் மாப்பிள்ளை’ என்ற பெயரில் ஒரு இளைஞர் யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராமில் கோவை தொடர்பான வீடியோக்களை பகிர்ந்து வருகிறார்.
அவர் சமீபத்தில் வெளியிட்ட வீடியோ சர்ச்சையாகியுள்ளது. அதில் ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவரிடம் பேட்டி எடுத்திருந்தார்.
அவர் தன்னுடைய கழுத்தில் புலி நகத்தால் செய்யப்பட்ட செயின் அணிந்திருந்தார். இதுகுறித்து பாலகிருஷ்ணன், “பொதுவெளியில் சொல்லக் கூடாது. இருந்தாலும் சொல்கிறேன். இந்த புலி நகத்தை ஆந்திராவில் இருந்து வாங்கினேன். எனக்கு வேட்டைக்கு செல்ல ஆசைதான்.
இருந்தாலும் வேட்டைக்கு செல்லவில்லை.” என்று கூறியிருந்தார். இந்த வீடியோ வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்து வனத்துறையினர் விசாரணையில் இறங்கினார்கள். பாலகிருஷ்ணனின் வீட்டை சோதனை செய்தனர்.
சோதனையின் போது அவர் வெளியூர் சென்றிருந்தார். சோதனையில் ஒரு புள்ளிமானுடைய கொம்பின் துண்டுகள் கண்டறியப்பட்டன. இதுதொடர்பாக வனத்துறையினர் பாலகிருஷ்ணன் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
அவரிடம் இருந்து செயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. செயின் மற்றும் மான் கொம்பு ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளது. அந்த அறிக்கை கிடைத்ததும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று வனத்துறை கூறியுள்ளது.