Seeman: 'சீமான் ஈழம் சென்றது உண்மைதான்; ஆனால் அந்தப் புகைப்படம்...' - கொளத்தூர் மணி சொல்வதென்ன?
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பிரபாகரன் உடன் இருக்கும் போட்டோவை 'எடிட்' செய்து கொடுத்ததே நான்தான் என இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் தெரிவித்திருந்தார்.
இந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் ஒருவித சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணியிடம் இது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "சங்ககிரி ராஜ்குமார் சொன்ன எடிட்டிங் பற்றிய தகவல் உண்மையாக இருக்கலாம்.
சீமான் ஈழம் சென்று வந்த இரண்டு ஆண்டுக்கு பிறகு, இந்தப் புகைப்படம் கிராபிக்ஸ் என்ற தகவல்கள் வெளியானது. அப்போது அதை நாங்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை, பின்னர் மறந்துவிட்டோம். புகைப்படம் கிராபிக்ஸ் ஆக இருப்பதற்கு வாய்ப்புள்ளது. சீமான் ஈழம் சென்றபோது, அங்கிருந்தவர்கள் அவர் வந்து சென்ற செய்தியை மட்டும் தான் சொன்னார்கள்.
எனக்கு கிடைத்த தகவலின் படி அவர் சென்று வந்தது உண்மை. ஆனால் மிகக் குறைவான நேரம் மட்டும் பிரபாகரனை சந்திக்க, சீமானுக்கு வாய்ப்பு கிடைத்தது. பிரபாகரனுடன் பலரும் திறந்தவெளியில் தான் புகைப்படம் எடுத்துள்ளார்கள்.
தனியாக ஸ்டூடியோ போன்று இருக்கிறதா என்பது பற்றி எனக்கு தெரியவில்லை. சீமான் தன்னை முழுமையாக வெளிக்காட்டிக் கொள்வாரா? அல்லது இரண்டு முகமும் காட்டுவாரா? என்பது தெரியவில்லை" என்று பேசியிருக்கிறார்.