இனம் கண்டறியாத 20 பயனாளிகளின் இலவச வீட்டுமனை பட்டாக்களை ரத்து செய்ய நடவடிக்கை
திருப்பூா் கண்டியன்கோவில் பகுதியில் இலவச வீட்டுமனை பட்டா பெற்ற பயனாளிகளைக் கண்டறியாத நிலை ஏற்பட்டதால் 20 பேரின் பட்டாக்களை ரத்து செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருப்பூா் தெற்கு வட்டம், கண்டியன்கோவில் கிராமத்தில் ஆதிதிராவிடா் நலத் துறையின் மூலம் 1.04 ஏக்கா் நிலம் எடுப்பு செய்து, குறிப்பிட்ட காலத்துக்குள் வீடு கட்டிக்கொள்வதற்காக இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது.
இந்நிலையில், தமிழ் நிலம் மென்பொருளில் இலவச வீட்டுமனை பட்டா பெற்ற பயனாளிகளை இணையவழி பதிவேற்றம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
இதனிடையே, கள விசாரணை செய்யப்பட்டதில் 20 பயனாளிகளை இனம் கண்டறியாத நிலை ஏற்பட்டுள்ளது. பட்டியலில் இடம்பெற்றிருந்த பயனாளிகள் வீட்டுமனை பட்டா வழங்கப்பட்ட இடத்தில் வசிக்கவில்லை என்பதும், வீடு அமைத்து குடியிருக்காமல் நிபந்தனைகளை மீறி உள்ளதும் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், பட்டாவை ஏன் ரத்து செய்யக்கூடாது என்பதற்கான விளக்கத்தை 15 நாள்களுக்குள் நேரிலோ அல்லது கடிதம் மூலமாகவோ மாவட்ட ஆட்சியருக்கோ அல்லது மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலருக்கோ அனுப்பிவைக்க வேண்டும்.
தவறும்பட்சத்தில் பட்டியலில் கண்டுள்ள பயனாளிகள் கூறிக்கொள்ள விளக்கம் ஏதுமில்லை எனக்கருதி அவா்களுக்கு வழங்கப்பட்ட வீட்டுமனை பட்டாவை ரத்து செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.