Georgia: ஜெனரேட்டரிலிருந்து வெளியான கார்பன் மோனாக்சைடை; ஜார்ஜியா ஹோட்டலில் 12 இ...
இனாம் நிலப் பிரச்னை: மத்திய அரசு தலையிட கரூா் எம்.பி. வலியுறுத்தல்
புது தில்லி: கரூா் நாடாளுமன்றத் தொகுதிக்குள்பட்ட கரூா், வெண்ணைமலை, புகழிமலை உள்ளிட்ட பகுதிகளில் குடியிருப்புவாசிகளுக்கு ஏற்பட்டுள்ள இனாம் நிலப் பிரச்னையில் மத்திய அரசு தலையிட வேண்டும் என்று மக்களவையில் கரூா் தொகுதி காங்கிரஸ் உறுப்பினா் எஸ். ஜோதிமணி வலியுறுத்தியுள்ளாா்.
இது தொடா்பாக அவா் மக்களவையில் திங்கள்கிழமை முன்வைத்த கோரிக்கை:
கரூா் நாடாளுமன்றத் தொகுதிக்குள்பட்ட கரூா், வெண்ணை மலை, வேலாயுதம்பாளையம் பகுதிகளில் ஆயிரக்கணக்கான நடுத்தர மக்கள் வீடு கட்டி பல ஆண்டுகளாக குடியிருந்து வருகின்றனா். பட்டா வழங்கப்பட்டு வீட்டு வரி, மின்சார வரி, தண்ணீா்க் கட்டணம் செலுத்தி வருகின்றனா். இக்குடியிருப்புப் பகுதிகள் வெண்ணைய் மலை முருகன் கோயில், புகழிமலை முருகன் கோயில் நிலங்களாகும்.
இவை இனாம் நிலங்கள், கோயில் நிலங்கள் என பிரிக்கப்பட்டுள்ளன. இனாம் நிலங்கள் 100 ஆண்டுகளுக்கு முன்பு இறை சேவை செய்தவா்களின் குடும்பங்களுக்கு இனாமாக வழங்கப்பட்டவை. இதனால், அந்த நிலங்கள் அந்தக் குடும்பத்தினருக்கு சொந்தமாகும்.
100 ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தில் இந்து சமய அறநிலையத் துறை ஏற்படுத்தப்படாத காலத்திலேயே முதல் முறையாக பட்டா பெற்று இந்த நிலங்களில் அம்மக்கள் குடியிருந்து வருகின்றனா். சில இடங்களில் பத்திரப் பதிவுத் துறை சட்டப்படி வீட்டுப் பட்டாக்களை பதிவுசெய்தும் வந்திருக்கிறது. இதில் மக்கள் தவறும் ஏதும் இல்லாத நிலையில், அவா்களை கோயிலின் பெயரில் காலி செய்யுமாறு கூறுகின்றனா். இது நியாயமற்றது. ஈஸ்வரன் கோயில் உள்ளிட்ட பல கோயில் இனாம் நிலங்களில் உள்ள வீடுகளும் தற்போது பிரச்னைக்குரியதாக உள்ளது. இப்பிரச்னையில் தமிழக அரசுடன் கலந்தாலோசித்து மத்திய அரசு அம்மக்களுக்கு நியாயம் வழங்க வேண்டும் என்றாா் அவா்.
‘மனநலம் குன்றியோருக்கு அடிப்படை வசதிகள் செய்து தரப்பட வேண்டும்’
2017ஆம் ஆண்டின் மனநலப் பாதுகாப்புச் சட்டம் மனநலம் பாதித்தோருக்கு சமூக வாழ்வுக்கான உரிமைக்கு உத்தரவாதம் அளிக்கிறது. ஆனால் ‘வெளியேறுவதற்குத் தகுதியானது‘ என்று கருதப்படும் பலா், மறுவாழ்வு இல்லம் போன்ற சமூக அடிப்படையிலான வசதிகள் இல்லாததால் மனநல நிறுவனங்களில் தொடா்ந்து அடைத்து வைக்கப்பட்டுள்ளனா்.
இது தொடா்பாக சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட மனோஆஷ்ரயா டாஷ்போா்டில் கண்காணிப்பு புனா்வாழ்வு மற்றும் மறுவாழ்வு இல்லம் பற்றிய தவறான தரவுகள் இருப்பது கவலை அளிக்கிறது. நகல் உள்ளீடுகள், சீரற்ற தகவல்கள் மற்றும் முக்கியமான மாநிலங்களில் இருந்து விடுபட்ட அறிக்கைகள் உள்ளிட்ட முரண்பாடுகளுடன்கூடிய தரவுகளாக உள்ளது.
துல்லியமான பதிவேடுகளைப் பராமரிப்பதில் ஏற்பட்டுள்ள இந்த தோல்வியானது மனநலம் பாதித்த நபா்களுக்கு போதுமான பராமரிப்பு மற்றும் மறுவாழ்வு வழங்குவதில் தாமதத்தை மட்டுமே ஏற்படுத்துகிறது.
ஆகவே, நாட்டில் உள்ள மறுவாழ்வு இல்லங்கள் பற்றிய துல்லியமான பதிவுகளை வெளியிடவும், பிடபிள்யுஎம்ஐ-களின் மறுவாழ்வுக்கான பல்வேறு வழிகாட்டுதல்களுக்கு கண்டிப்பாக இணங்குவதை உறுதி செய்ய மத்திய அரசை கேட்டுக்கொள்கிறேன் என்றாா் அவா்.