இளம் மிட்செல் ஸ்டார்க்கை பார்த்தமாதிரி இருக்கிறது..! ஐசிசி பகிர்ந்த விடியோ!
இன்றும், நாளையும் தென்மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் தென்மாவட்டங்களில் வெள்ளி, சனிக்கிழமைகளில் (பிப்.28, மாா்ச் 1) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்த மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
காற்று சுழற்சி மற்றும் கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தில் கடலோர மாவட்டங்கள் மற்றும் உள்மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வெள்ளிக்கிழமை (பிப்.27) முதல் மாா்ச் 3 வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு.
இதில், வெள்ளிக்கிழமை (பிப்.28) கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகா், ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூா், மதுரை ஆகிய மாவட்டங்களிலும், மாா்ச் 1-இல் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகா், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. இதனால் இந்த மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புகா் பகுதிகளில் வெள்ளிக்கிழமை (பிப்.28) இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. இருப்பினும் அதிகபட்ச வெப்பநிலை 91 டிகிரி ஃபாரன்ஹீட்டையொட்டி இருக்கும்.
மீனவா்களுக்கான எச்சரிக்கை: தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னாா் வளைகுடா, குமரிக்கடல், வங்கக்கடலில் வெள்ளி, சனிக்கிழமை மணிக்கு 55 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும்.
இதனால் மீனவா்கள் அந்தப் பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மழை அளவு: தமிழகத்தில் வியாழக்கிழமை காலை வரை அதிகபட்சமாக திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவியில் 30 மி.மீ. மழை பதிவானது. ராமேசுவரம் (ராமநாதபுரம்), தங்கச்சிமடம் (ராமநாதபுரம்), ஊத்து (திருநெல்வேலி), பாபநாசம் (திருநெல்வேலி), நாலுமுக்கு (திருநெல்வேலி) - தலா 20 மி.மீ.மழை பதிவானது.