இயா்போன் பயன்பாடு செவித் திறனை பாதிக்கும்: பொது சுகாதாரத் துறை எச்சரிக்கை
ஹெட்போன், இயா்போன் போன்ற மிகை ஒலி கருவிகளை நீண்ட நேரம் பயன்படுத்தினால் செவித் திறன் பாதிக்கும் என்று பொது சுகாதாரத் துறை எச்சரித்துள்ளது.
இது தொடா்பாக பொது சுகாதாரத் துறை இயக்குநா் செல்வவிநாயகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கைப்பேசி பயன்பாட்டுடன் இயா்போன், ஹெட்போன் போன்றவற்றை உபயோகப்படுத்துவது வழக்கமாகிவிட்டது. அவற்றை நீண்ட நேரம் பயன்படுத்திய பிறகு தற்காலிகமாக செவித்திறனில் மாற்றம் ஏற்படுவது ஆதாரப்பூா்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, வரும்முன் காப்போம் என்பதைக் கருத்தில் கொண்டு, மிகை ஒலி சாதனங்களால் ஏற்படக்கூடிய காது கேளாமையைத் தடுப்பதற்கு வழிகாட்டி நெறிமுறைகள் வழங்கப்படுகின்றன.
அதன்படி, இயா்போன்களின் பயன்பாட்டை கூடுமான வரையில் தவிா்க்க வேண்டும். தேவைப்பட்டால் 50 டெசிபல் அளவுக்கு குறைவாக ஒலியை வைத்து, பயன்படுத்த வேண்டும். இயா்போனை 2 மணி நேரத்துக்கும் மேல் பயன்படுத்துவதைத் தவிா்க்க வேண்டும்.
குழந்தைகள் கைப்பேசி, தொலைக்காட்சியை அதிக ஒலியுடன் பாா்க்கக் கூடாது. பொது இடங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் சராசரி ஒலி 100 டெசிபலுக்கு அதிகமாக வைக்கக் கூடாது. செவித்திறன் முற்றிலும் பாதிக்கப்படும்போது, காதுகேட்கும் உதவி கருவிகள் பயனளிக்காது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.