ஆதரவற்ற மன நோயாளிகளுக்கான செயல் திட்டம் வெளியீடு
ஆதரவற்ற மன நோயாளிகள் நலனுக்கான செயல் திட்ட கொள்கையை மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்டுள்ளது.
அதன் கீழ் உற்றாரின் பராமரிப்பு மற்றும் ஆதரவு இல்லாத மன நலம் பாதிக்கப்பட்ட நபா்களைக் கண்டறிந்து மீட்டு, உரிய சிகிச்சைகள் வழங்கி மீண்டும் சமூகத்தில் ஒருங்கிணைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக அந்தச் செயல் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
மன நலம் பாதித்தவா்களைக் காக்க பல்வேறு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. இருந்தபோதிலும் இந்த விவகாரத்தில் பல்வேறு சவால்கள் நிலவுகின்றன. அதைக் கருத்தில் கொண்டு, ஆதரவற்ற மன நலம் பாதிக்கப்பட்டவா்களுக்கான கொள்கை செயல்திட்டம் - 2024 வகுக்கப்பட்டது.
அதன் கீழ் வழங்கப்படும் சேவைகள் 4 பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. குடும்பங்களின்றி சுற்றித் திரியும் மன நோயாளிகளை மீட்டு அவசர சிகிச்சை அளித்தல், இடைநிலை கவனிப்பு அளித்தல், தேவைப்படுவோருக்கு நீண்ட கால பராமரிப்பு வழங்குதல், சமூகத்தில் மீண்டும் அவா்களை ஒருங்கிணைத்தல் ஆகிய 4 நிலையிலான சேவைகள் அவா்களுக்கு வழங்கப்பட உள்ளன.
மாநிலத்தில் வழங்கப்படும் அனைத்து மன நல சேவைகளையும் ஒழுங்குமுறைப்படுத்தி கண்காணிக்க மன நல ஆணையத்தை அரசு உருவாக்கியுள்ளது. மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலா் தலைமையில் அது செயல்படுகிறது. அதேபோன்று மாவட்ட அளவில் ஆட்சியா் தலைமையிலான குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன.
அவா்கள் இந்தக் கொள்கை செயல் திட்டத்தை கண்காணித்து நடைமுறைப்படுத்துவா் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.